0,00 INR

No products in the cart.

தகனத் திருவிழா!

எம்.கோதண்டபாணி

தென்றலெனும் தேரை கொஞ்சும் கிளிகள் இழுத்து வர, ரீங்காரம் பாடும் வண்டுகள் உடன் அணிவகுக்க, ரதி தேவியுடன் உல்லாசமாக இச்சை வீதியில் பவனி வருபவன் காதல் கடவுளாம் மன்மதன். கரும்பு எனும் வில் கொண்டு முல்லை, நீலம், மா, அசோகம், தாமரை எனும் பஞ்ச புஷ்பங்கள் சேர்ந்த அம்பைத் தொடுப்பதே, காலமெல்லாம் சலிக்காமல் அவன் புரியும் தொழில். நீண்ட தாழை மலர் மடலே அவனுக்கு வாளாயுதமாக விளங்கும் பொருளாகும். வசந்த பருவமே அவனது ஆட்சியில் உச்சபட்ச அதிகாரத்தைச் செலுத்தும் காலமாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே அவன், ‘வசந்தன்’ எனும் புனைப் பெயர் கொண்டு அன்பை வேண்டும் அனைவராலும் ஆராதிக்கப்படுகிறான்.

வன் ஒரு சமயம் உலக இயக்கத்தின் உண்மைப் பொருளாய் விளங்கும் ஈசனின் நிஷ்டையைக் விலக்க, உமையவளாம் பார்வதி தேவியால் ஏவப்பட்டான். தவத்தில் லயித்திருந்த சிவனாரின் மீது கரும்பு அம்பின் மூலம் மலர்க்கணையைத் தொடுத்தான். நிஷ்டை கலைந்த சிவன் சினமுற்று, நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரித்துப் பொசுக்கி சாம்பலாக்கினார். வேண்டாம் எனத் தடுத்தும் தமது வேண்டுதலை நிராகரித்துச் சென்று, உயிர் நீத்து சாம்பலாகிப் போன தனது கணவனாம் மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்துத் தரும்படி ஈசனிடம் அழுது புலம்புகிறாள் ரதி தேவி. மறப்பது மனித குணம்; மன்னிப்பது இறை குணம் அல்லவா! கோபம் தணிந்த சிவபெருமான், ரதி தேவியின் வேண்டுதலை ஏற்று, அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படி காமதேவனை உயிர்ப்பித்துத் தந்து அருள்பாலிக்கிறார். இதுவே காம தகன (18.3.2022) புராணப் பின்னணி வரலாறு.

ஒரு சமயம், மயன் எனும் தேவதச்சன் உலக அழகையெல்லாம் ஒன்று திரட்டி, அதை ஒரு பெண்ணாகச் சமைத்தான். அவள் தனது அறிவாலும் அழகாலும் அனைவரையும் கவர்ந்தாள். அதனால் அவளுக்கு ரதி எனப் பெயர் சூட்டி வளர்த்தான் மயன். ‘ரதி’ என்பதற்குப் பிறரால் விரும்பப்படுவது என்று பொருள். ரதியை பார்வதி தேவியின் தோழி என்றும் சிலர் கூறுவர். தக்க பருவத்தில் மன்மதனுக்கு அவளைத் திருமணம் செய்வித்தனர். இருவரும் இணைபிரியாது வாழும் சிறப்புப் பெற்றனர்.

திருமால் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்தபோது, மன்மதன் அவருடைய மகனாக, ‘ப்ரத்யும்னன்’ எனும் பெயரோடு தோன்றினான். ரதி, அந்த யுகத்தில் மாயா தேவி என்னும் பெயர் கொண்டு ப்ரத்யும்னனை மணந்தாள். காசி திருத்தலத்தில் ரதி தேவி வழிபட்ட லிங்கம், ‘ரதீஸ்வரர்’ எனும் பெயரில் திகழ்கிறது. ரதி தேவி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள். அவளும் கரும்பு வில்லை ஏந்திக் காட்சி தருகிறாள்.

ச்சையெனும் இயற்கை உணர்வு தெய்வ வடிவம் கொண்டபோது, அது மன்மதன் எனவும் ரதி எனவும் பெயர் பெற்றது. மன்மதனையும் ரதியையும் பிரியாத இன்ப இணையாக இலக்கியங்கள் போற்றுகின்றன. சந்தோஷ ஊற்றின் வடிவமாவான் மன்மதன். ஆகையால், ச்சையூட்டுபவை அனைத்தும் அவனது உரிமை என உருவகம் செய்யப்படுகின்றன. ஆதி காலத்தில் காமதேவனுக்கு தனிக் கோயில்கள் அமைந்திருந்ததை இலக்கிய நூல்கள் உரைக்கின்றன. சிலப்பதிகாரத்தில், ‘காமவேள் கோட்டத்திலுள்ள குளத்தில் நீராடி காமதேவனைத் தொழுதால் இனிய இல்வாழ்வு உண்டாகும் என்றும், பிரிந்த கணவன் மீண்டும் ஒன்று சேருவான்’ என்றும் கூறப்படுவதும் சிந்திக்கத்தக்கதாகும். அக்காலங்களில் இதுபோன்ற, ‘காமவேள் கோட்டங்கள்’ ஊருக்கு வெளியே சோலைகளில் அமைக்கப்பட்டு இருந்ததாகத் தகவல். மனம் விரும்பும் நபரை மணக்க வேண்டி வழிபடும் திருக்கோயில்களாக இவை திகழ்ந்தன. அது மட்டுமின்றி; கணவன் மனைவியரிடையே மாறாத அன்பு நிலைத்திருக்கவும் காமதேவக் கடவுளைத் தொழுதனர்.

முன் நாட்களில் சிறப்புடன் திகழ்ந்த காமதேவன் ஆலயங்கள் நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், காமத்தை மக்கள் மறைபொருளாக உணர வேண்டும் என்ற நிலைப்பாட்டினாலும் காலப்போக்கில் அவை மறைந்து விட்டன. காமதேவன் ஆலயங்கள் மறைந்தாலும் இன்றைக்கும் திருக்கோயில்கள் பலவற்றிலும் அமைந்த வசந்த மண்டபத் தூண்களில் காதல் துணையாம் ரதி தேவியை மன்மதனின் கொஞ்சும் சிற்ப வடிவங்கள் கலை அம்சத்தோடு திகழ்கின்றன.

அக்காலத்தில் தெய்வங்களின் திருக்கரங்களில் திகழும் ஆயுதங்களைக் கொண்டு அவர்களை அடையாளப்படுத்தி வணங்குவது நமது முன்னோர்களின் மரபாக இருந்தது. வேல் ஆயுதம் ஏந்தினால் முருகன் எனவும், சூலத்தோடு திகழ்ந்தால் காளி எனவும், சக்கரபாணியாக விளங்கினால் திருமால் எனவும் வணங்கி வழிபடும் வழக்கம் நிலவியது. அதன் அடிப்படையில் இச்சை என்னும் இன்ப நுகர்ச்சியைக் கரும்பு வில்லாக உருவகம் செய்ததோடு, அதை ஏந்தியவரை மன்மதக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். பக்தி மார்க்கம் கரும்பை இன்பத்தின் அடையாளமாகச் சொல்கிறது. இனிப்புச் சுவை சாறு கொண்டு திகழ்பவை கரும்புகள். இனிமைக்கு அடையாளமாக கரும்புச் சாற்றைக் கூறுவது உலக வழக்கம். அந்த இனிப்பை வழங்கும் கரும்பு வில்லை தமது ஆயுதமாக ஏந்தித் திகழ்கிறான் காமன்.

சிவபெருமான் மன்மதனை எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதுவே, ‘காம தகனம்’ என்றும், ‘காமன் கூத்து’ என்றும் அழைக்கப்படுகிறது. தென்னாற்காடு மாவட்டங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படும்போது, கரும்பை நட்டு வழிபடும் வழக்கமே பெரும்பாலும் நிகழ்கிறது. சிறிய மேடையில் கரும்பை நட்டு அதைச் சுற்றி தர்பையாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிப்பர். அதற்குப் புதிய துணிகள் அணிவிக்கப்படும். அதற்கு மேற்கில் அல்லது தெற்கில் சிறிய குடில் அமைத்து அதில் மன்மதன் ரதி உருவங்களை ஓவியமாக கலசங்களை நிறுவி ரதி. மன்மதனை எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர்.

அன்று முன்னிரவில் மன்மதன் அவதரித்த கதை கூறப்படும். ஊரின் தன்மைக்கேற்ப அது சொற்பொழிவு, நாடகம், நாட்டியம், உடுக்கைப் பாட்டு, வில்லுப்பாட்டு என்பனவற்றில் ஏதாவது ஓர் இலக்கிய வடிவில் அந்தக் கதை கூறப்படும். முன் நாட்களில் காமன் விழா ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. ஐந்தாம் நாள் காமனை எரிப்பது, ஏழாம் நாள் அவன் ரதியின் வேண்டுதலால் உயிர்ப்பிக்கப்படுவது போன்றவை நாடகமாக நடித்துக் காண்பிக்கப்படும்.

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

- ராஜி ரகுநாதன் ‘ஜீவன் பத்ராணி பஸ்யந்து’ என்கிறது வால்மீகி ராமாயணம். ‘உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்’ என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது. அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...

அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் வாயு புத்திரரான ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டவர் என்பதால் இவர், ‘அஷ்டாம்ச ஆஞ்சனேயர்’ என அழைக்கப்படுகிறார். வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் வளம் தரும் அந்த எட்டு விதமான அம்சங்கள்...

புண்ணிய தீர்த்தப் பலன்கள்!

0
- எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன் lகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஈசான ருத்திரரின் சூலாயுதத்தால் உருவாக்கப்பட்ட, ‘ஞான வாவி’ எனும் கிணறு உள்ளது. இதில் நீராட, ஞானம் கிட்டும். lகாசி கங்கைக்கரையில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் மணிகர்ணிகா கட்டத்தில்...

கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!

0
- டி.எம்.இரத்தினவேல் சிவபெருமானின் பூஜைக்காக பகவான் மகாவிஷ்ணு தமது கண்ணையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான பக்தி வரலாறு, உள்ளத்தை உருக வைப்பதாகும். ஒரு சமயம் சலந்தரன் எனும் அரக்கன் பகவான் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பறித்துச்...