கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!

கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!
Published on

டி.எம்.இரத்தினவேல்

சிவபெருமானின் பூஜைக்காக பகவான் மகாவிஷ்ணு தமது கண்ணையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான பக்தி வரலாறு, உள்ளத்தை உருக வைப்பதாகும். ஒரு சமயம் சலந்தரன் எனும் அரக்கன் பகவான் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பறித்துச் சென்று விட்டான். இழந்த சக்கராயுதத்தை மீட்டுத்தர வேண்டி சிவபெருமானை பூஜித்தார் மகாவிஷ்ணு. அந்த பூஜையில் மகிழ்ந்த ஈசன், 'பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில்தான் அவரது சக்கராயுதம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு தினமும் தம்மை பூஜை செய்து வந்தால் சக்கராயுதம் திரும்பக் கிடைக்கும்' என்றும் அருளினார். மகாவிஷ்ணுவும் வீழிச்செடிகள்அடர்ந்த இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு தினமும் அபிஷேகம் செய்து, ஆயிரம் தாமரை மலர்களால் வழிபாடு செய்து வந்தார்.

ஒரு நாள் சிவனின் திருவிளையாடலால், சிவ பூஜைக்கான ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரை மலருக்கு பதில் மகாவிஷ்ணு தனது கண் மலரையே ஆயிரமாவது மலராக அர்ச்சித்து பூஜையை நிறைவு செய்தார்.

சர்வ அலங்கார நாயகனான திருமாலின் இந்த, 'கண்மலர்' பூஜையைக் கண்டு மனம் பூரித்தார் சிவபெருமான். தோடு, அரக்கன் சலந்தரனை வதம் செய்து, மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தையும் மீட்டுக் கொடுத்தருளினார். தேவர்கள் பூமாரி பொழிந்து வணங்கினார்கள்.

அப்போது சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளி, "பாற்கடல் பரமனே! கண்ணினை மலராகக் கொய்து பூஜித்த கண்ண பரமாத்மாவே, என் உள்ளம் குளிர வைத்தாய்! மெத்த மகிழ்ச்சி. உன் திருக்கரத்தில், 'சுதர்ஸனம்!' என்ற இந்த சக்கராயுதம் என்றும் இடம் பெறட்டும்!" என சக்கராயுதத்தை வழங்கி ஆசி கூறினார். இதனால் இக்கோயிலில் சுவாமிக்கு, 'கண்மலர்' காணிக்கை செலுத்தும் வழக்கம் பக்தர்களிடம் உருவானது. சிவபெருமானுக்கு மகாவிஷ்ணு பூஜை செய்த கண்மலரை இன்றும் ஈசனின் திருப்பாதத்தில் உள்ளதை தரிசிக்கலாம். இந்தத் திருவிளையாடல் நடைபெற்றது திருவீழிமிழலை ஸ்ரீ வீழியநாதர் உறையும் திருத்தலத்தில்!

ரந்தாமனின் இந்த பக்தியை மெய்சிலிர்க்க வைக்கும் பாடலாக, 'தேவாரம்' பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் பாடுகிறார்

'திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழு நின்திருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே'

பொருள் : ஆதி எம்பெருமானே! திருமாலுக்கு சக்கராயுதம் வழங்கியவனே! இந்த வரலாற்றை அறிந்த நான் நினது திருவடிகளை துதிக்கின்றேன்! தேவாதி தேவனே! தீர்க்க முடியாதவை என்று கூறப்படும் வல்வினைகளைத் தீர்த்து வைக்கும் பரம்பொருளே! எனது வினைகள் தீர உன்னை சரணடைகிறேன்! கயிலாய வள்ளலே! அருளினை வாரி வழங்கி எம் வினைகளை அகற்றுவாயாக!

வேண்டியதை வேண்டியபடி அருளும் வீழிநாதேஸ்வர பெருமானிடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடனை அவர்கள் நிறைவேற்றுகின்றனர்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com