0,00 INR

No products in the cart.

நமசிவாயம் எனச் சொல்வோமே…

ரேவதி பாலு

மாசி மாதம் வரும் சிவராத்திரி திதியை, ‘மஹா சிவராத்திரி’ என்கிறோம். இது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு இவ்வுலகைக் காத்த நாள் மஹாசிவராத்திரி என்று புராணங்கள் சொல்கின்றன.

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதையொட்டி அன்றிரவுப் பொழுதில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார் பார்வதி தேவி. நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார். பூஜையின் முடிவில் சிவனை வணங்கி, தான் பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் சிவனுடைய திருநாமத்தால், அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்ல; மஹாசிவராத்திரி அன்று சூரியன் அஸ்தமமானது முதல், மறுநாள் காலை சூரிய உதயம் வரை சிவனை பூஜை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனைத்து வகையான பாக்கியங்களையும் வழங்கி முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார் பார்வதி தேவி.

சிவராத்திரிக்கென்றே பிரசித்தி பெற்ற கதை ஒன்று உண்டு. மஹாசிவராத்திரி அன்று வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகம் கூட அவன் கண்ணுக்குத் தென்படவில்லை. அப்பொழுது திடீரென்று ஒரு புலி அவனைத் துரத்திக்கொண்டு வரவே, அவன் பயந்து அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு உயரமான கிளையில் அமர்ந்து கொண்டான். புலி கீழேயே நின்றிருந்தது. சற்று நேரத்தில் வேடனுக்குத் தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது. தூக்கக் கலக்கத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து விடுவோமோ என்று அவனுக்கு பயமாக இருந்தது. தூங்காமல் விழிப்போடு இருக்க அந்த மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான். மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருப்பதோ, தான் பறித்துப் போடுவது வில்வ இலைகள் என்பதோ அவனுக்குத் தெரியாது. இரவு முழுவதும் தூங்காமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்த அந்த வேடனுக்கு புலி உருவத்தில் மரத்தடியில் நின்றிருந்த சிவபெருமான் காட்சியளித்தார். அதோடு, அவனுக்கு அருள்புரிந்து மோட்சத்தையும் அளித்தார்.

அடுத்த பிறவியில் அவன் இஷ்வாஹு குலத்தில் சித்ரபானு என்னும் சக்ரவர்த்தியாகப் பிறந்தான். ஒன்றும் அறியாமலேயே சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்ததன் பயன்தான் அது என்று அஷ்டவக்ர மகரிஷி சித்ரபானுவிடம் கூறினார். தன் பக்தர்களிடமிருந்து விமரிசையான பூஜையை எதிர்பார்க்காதவன் பரமன் என்பதை, ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று சமர்ப்பிக்கப்படும் ஒரு வில்வ இலையில் மகிழ்ச்சியடைந்து பக்தர்களுக்கு அருள்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

னித குலத்தின் பலவீனமே உணவும் தூக்கமும்தான். சிவராத்திரி அன்று ஒரு நாள் உணவைத் தவிர்த்து அல்லது பழங்கள் மட்டும் சாப்பிட்டு இரவு தூங்காமல் தேவாரம், சிவபுராணம், திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்ட சிவன் தோத்திரப் பாடல்களைப் படிக்கலாம். அல்லது ‘ஓம் நமசிவாய’ என்று ஜபிக்கலாம். சிவராத்திரி அன்று ஒரே ஒரு வில்வ தளத்தையாவது (மூன்று இலைகள் கொண்ட ஒரு கொத்து) சிவனுக்கு, ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று கூறி அர்ச்சித்து வழிபட வேண்டும். சிவபெருமானின் அர்ச்சனைக்கு வில்வத்திற்கு மிஞ்சிய எதுவும் இல்லை.

நினைத்தாலே முக்தி தரும் அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாக இருந்ததாம். திரேதா யுகத்திலோ மாணிக்க மலையாக ஜொலித்ததாம். துவாபர யுகத்தில் பொன் மலையாக தகதகத்ததாம்! தற்போது
கலி யுகத்தில் இது கல் மலையாக மாறி இருக்கிறது
. இங்கே ஈசனின் அடி, முடியைக் காண திருமால் வராக ரூபத்திலும், பிரம்மா அன்னப்பறவை ரூபத்திலும் தேடியபோது, சிவபெருமான் ஒளிப்பிழம்பாகக் காட்சியருளிய நாள் சிவராத்திரியாகும். எனவே, சிவராத்திரி திருவண்ணாமலையில் வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் போல், சிவராத்திரி அன்றிரவு செய்யப்படும் கிரிவலமும் மிகவும் பிரசித்தி பெற்றது. பௌர்ணமியைப் போல லட்சக்கணக்கில் இல்லாமல் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே கிரிவலம் செய்வதை இன்று பார்க்கலாம். சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோயில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம். முடிந்தவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று அங்கே நான்கு ஜாமங்களிலும் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர காணலாம்.

இந்த வருடம் சிவராத்திரி மார்ச் மாதம் 1ஆம் தேதி வருகிறது. சிவராத்திரி விரதம் இருந்து. ‘சிவாய நம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற வாக்கிற்கேற்ப சிவபெருமானை வழிபட்டால், வாழ்வில் செல்வம், புகழ், உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை என்று அனைத்து வகையான வளங்களையும் ஈசனின் அருளால் பெறலாம்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

அக்னி தேவனுக்கு உதவிய அர்ச்சுனன்!

- ரேவதி பாலு நமது நான்கு வேதங்களான ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களுள் ரிக் வேதமே மிகத் தொன்மையானது. இந்த வேதத்தில் இருநூறு ஸ்லோகங்கள் அக்னி பகவான் குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றன. அக்னி என்றால் நெருப்பு....

பலன் தரும் ஸ்லோகம்

0
எதிர்மறை சக்திகள் அகல... ‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.’ - திருமுறை எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது...

பள்ளியறை பூஜை பலன்கள்!

0
- எம்.ஏ.நிவேதா சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்...

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...