
– எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன்
lகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஈசான ருத்திரரின் சூலாயுதத்தால் உருவாக்கப்பட்ட, 'ஞான வாவி' எனும் கிணறு உள்ளது. இதில் நீராட, ஞானம் கிட்டும்.
l'திருக்கடல்மல்லை' என அழைக்கப்படும் மாமல்லபுரம் கடற்கரைக்கு, 'அர்த்தசேது' என்று பெயர். இதில் நீராட, ராமேஸ்வரத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
lமயிலாடுதுறையில் ஐப்பசி கடைசி நாள் குளிப்பதை, 'கடைமுக நீராடல்' என்பர். துலாக் குளியல் துறைக்கு எதிரே உள்ள நந்தி மண்டபத்துக்கு, 'இடப தீர்த்தம்' என்று பெயர். அத்துறையில்தான் கடைமுகக் குளியல் செய்ய வேண்டும்.
lசோளிங்கபுரத்தின் மலையடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் நீராடினால் மன நோய்கள் விலகும் என்பது ஐதீகம்.
lஅழகர்கோயில் கள்ளழகருக்கு நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நீரால் அபிஷேகம் செய்தால் அழகரின் திருமேனி கறுத்துவிடுமாம்.
lவைத்தீஸ்வரன் ஆலய சித்தாமிர்த தீர்த்தத்தில் இருந்துதான் புகழ் பெற்ற பிரசாதமான நோய் தீர்க்கும் திருச்சாந்துருண்டை செய்யப்படுகிறது.
lதிருமலை சுவாமி புஷ்கரணியில் மார்கழி துவாதசியன்று அதிகாலையில் மலையைச் சுற்றி உள்ள 48 புண்ணியத் தீர்த்தங்களும் சங்கமமாவதாக ஐதீகம். அவ்வேளையில் தேவர்களும், முனிவர்களும் இந்த சுவாமி புஷ்கரணியில் அரூபமாக நீராடுவதாக திருமலை மகாத்மியம் கூறுகிறது.
lதிருச்செந்தூரில் கடலில் நீராடி, நாழிக் கிணற்றில் குளித்த பின்பே
செந்திலாண்டவரை தரிசிப்பது மரபு. இந்த நாழிக் கிணறு ஒரு சதுர அடி பரப்பளவே உள்ளதாயினும் எப்போதும் வற்றாமல் நீர் சுரக்கும்.
lதிருவெண்காடு தலத்தில் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் உள்ளன. ஈசன் நடனம் செய்தபோது அவர் கண்களில் இருந்து விழுந்த மூன்று துளி ஆனந்தக் கண்ணீரே இந்தத் திருக்குளங்கள் ஆயிற்றாம்.
lவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலய சிம்ம குளத்தில் நீராடினால் மழலைப் பேறு கிட்டும்.
lதிருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சன் ஆலய திருக்குளம் ஸ்வஸ்திக் வடிவில் உள்ளது. ஒரு கரையில் குளிப்பவர், மறு கரையில் குளிப்பவரைப் பார்க்க முடியாமல் எதிரும் புதிருமாக இருக்கும். இதனாலேயே இக்குளத்தை, 'மாமியார் – மருமகள் குளம்' என்கிறார்கள்.
lகும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று குளித்தால் பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
lவிருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரரிடம் பெற்ற பொற்காசுகளை மணிமுத்தா நதியில் போட்டு, அதை சுந்தரர் மீண்டும் பெற்றது திருவாருர் கமலாலய திருக்குளத்தில்.
lதிருவையாறு ஐயாரப்பன் ஆலயத்திற்கருகே ஓடும் காவிரியில் குளித்தெழுந்த உடனே, அப்பர் கயிலாய தரிசனம் கிடைக்கப்பெற்றார்.
lஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே, காட்டழகர்கோயிலில் அமைந்த தீர்த்தத் தொட்டி நீரில் 48 நாட்கள் தொடர்ந்து குளித்தால் வெண்குஷ்ட நோயிலிருந்து விடுபடலாம்.
lராமேஸ்வரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்களிலிருந்து விடுபடலாம்.