ஸ்ரீ சேஷ சாயி ஆலய குடமுழுக்கு விழா!

ஸ்ரீ சேஷ சாயி ஆலய குடமுழுக்கு விழா!
Published on

லக மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துக்காக மருத்துவர் சக்தி சுப்பிரமணி அவர்களால் உருவாக்கப்பட்டது
ஸ்ரீ சேஷ சாயி ஞான ஆரோக்கிய பீடம்
. பசுமை போர்த்திய மலைகளும் இயற்கைச் சூழலும் அமைந்த வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் 2014ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ஆரோக்கிய பீடம், மக்களின் உடல் பிணி போக்கும் சித்த மருத்துவப் பணியை முதன்மையாகக் கொண்டு தொடங்கப்பட்டாலும் ஆன்மிகப் பணியையும் தமது தலையாயக் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.

உடலை வருத்தும் நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்வது மன அமைதி இன்மையே. மன அமைதியைப் பெற்றுத் தரும் மாமருந்தாக விளங்குவது இறை மூர்த்தங்களின் திருச்சன்னிதியே. சிகிச்சைக்காக வருபவர்கள் இங்குள்ள கோயிலில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு நல்ல ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பெற வேண்டும் என்பதே இந்த ஆரோக்கிய பீடத்தின் நோக்கமாகும்.

இந்த ஆரோக்கிய பீடம் தமது மருத்துவப் பணியையும் ஆன்மிகப் பணியையும் விரிவுபடுத்தும் விதமாக சென்னை, பூவிருந்தவல்லியிலிருந்து ஆவடிக்குச் செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தன்னுடைய இரண்டாவது கிளையை ஆரம்பித்துள்ளது. ஸ்ரீ சேஷ சாயி ஞான ஆரோக்கிய பீடத்தில் சித்த மருத்துவமே பிரதானம் என்றாலும், அதற்கு அடிநாதமாகிய ஆன்மிகத்தையும் வளர்க்கும் விதமாக இந்த மருத்துவமனையில் மதங்களைக் கடந்த மகான் ஸ்ரீ ஷீர்டி சாயி பாபாவுக்கு ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

'நான் என் பக்தியின் அடிமை' என திருவாக்கு அருளும் ஞான நாயகனாம் ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா இந்தத் திருக்கோயில் கும்பாபிஷேக விழா, புண்ணிய தீர்த்த நீர் கொண்டு 16.2.2022 அன்று காலை, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஏராளமான ஆன்மிக அருளாளர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, 15.2.2022 முதல் பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் இந்த பீடத்தில் நடைபெற்றன.

ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட ஸ்ரீ ஷீர்டி சாயி நாதனின் மூன்றரை அடி உயர வெள்ளை நிற மார்பிள் திருச்சிலை கருவறையில் பளபளப்போடு அருள் பொங்கும் திருமூர்த்தமாகத் திகழ்கிறது. சன்னிதி வாயிலின் வலதுபுறம் விநாயகப்பெருமான், 'மாங்கனி கணபதி' எனும் திருநாமத்தோடு அருளுகிறார். அதேபோல், வாயிலின் இடதுபுறம் ஞான சொரூபனாம் ஸ்ரீ அகத்திய மாமுனி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

"பல்வேறு கணபதிகள் அருள்பாலிக்க, இக்கோயில் விநாயகருக்கு, 'மாங்கனி கணபதி' என்று பெயர் சூட்டி இருப்பதற்கு விசேஷ காரணம் ஏதும் உண்டா?" எனக் கேட்டபோது, "அன்னை காமாட்சி அருள்பாலிக்கும் மாங்காடு திருத்தலத்தின் அருகில் இந்த ஸ்ரீ சேஷ சாயி ஞான ஆரோக்கிய பீடம் அமைந்திருப்பதால், இக்கோயிலில் அருளும் விநாயகருக்கு, 'மாங்கனி கணபதி' எனப் பெயர் சூட்டி இருப்பதாக பக்திப் பெருமிதத்துடன் கூறுகிறார் மருத்துவர் நந்தினி சக்தி சுப்பிரமணி அவர்கள்.

எம்.கோதண்டபாணி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com