0,00 INR

No products in the cart.

​உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு உகந்த கோயில்

ஞானகுரு

நல்ல வேலை கிடைக்க எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

என்.தயானந்தன், பொள்ளாச்சி

உங்கள் ஊரில் அரச மரத்தின் கீழ் விநாயகர் அமர்ந்திருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் நீராடி விட்டு, அரச இலைகள் 21 எடுத்து மாலையாகக் கட்டி விநாயகருக்கு அணிவித்து,

ஓம் நமோ கணபதயே ஸித்தி விநாயகாய
ஸர்வ கார்ய கர்த்ரே
ஸர்வ ராஜ்ய வசீகரணாய
உத்யோக ஸ்திரம் குரு குரு’

எனும் சுலோகத்தைக் கூறி, பதினாறு முறை அவரையே நினைத்தபடி, சிந்தனை சிதறாமல் சுற்றி வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படியே பன்னிரெண்டு செவ்வாய்க்கிழமைகள் வழிபட்டு வந்தால் நல்ல வேலை வாய்ப்புக்கான செய்தி உங்களைத் தேடி வரும். பன்னிரெண்டு செவ்வாய்க்கிழமைகள் நிறைவாகியும் பணி கிடைக்கவில்லை என்றால் விநாயகப் பெருமானை திரும்பிப் பார்க்காமல் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. பொறுமையாக அடுத்தடுத்து வருகிற செவ்வாய்க்கிழமைகளில் அதேபோல் செய்து வர வேண்டும். முயற்சி திருவினை ஆக்கும் என்பதை மறக்கக்கூடாது.

மகா சிவராத்திரி அன்று பகலில் சிவலிங்கத் திருமேனியை எப்படி வணங்க வேண்டும்?

சி.கண்மணி சிவநேசன், வந்தவாசி

நான்கு யாமங்களைக் கொண்ட மகாசிவராத்திரி நாளில் அந்த இரவு தொடங்குவதற்கு முதல் நாள் வழிபட வேண்டும். வீட்டில் சிவலிங்கம் இருந்தால் அதற்கு எண்ணெய் சாத்தி ஒரு தட்டில் கிழக்கு முகமாக வைத்து, ஸ்ரீருத்ர ஜபம் அல்லது சிவபுராணம் பாராயணத்தை ஒலிநாடாவின் மூலம் ஒலிக்கச் செய்து, வரிசையாக மஞ்சள் பொடி, திரவியப் பொடி, மாவுப் பொடி, எலுமிச்சம் பழம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், கரும்புச் சாறு, வலம்புரி சங்கு நீர், விபூதி, கலச நீர் அபிஷேகம் செய்து வெண்பட்டால் துடைத்து பச்சைக் கற்பூரம் சாத்தி வெள்ளை வஸ்திரம், வில்வமாலை சாத்தி, சந்தனத் திலகமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் பார்வதி, பரமேஸ்வரர் குடும்ப சகிதமாக இருக்கும் படத்தை மலர்களால் அலங்கரித்து வைத்து, சர்க்கரை, அன்னம், வெண்பொங்கல், பாயசம் படைத்து முடிந்தால் சிவார்ச்சனை செய்து சிவ துதி பாசுரங்கள் ஐந்து படிக்கவும்.

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.’

ருத்ராட்சம் அணிவதற்கு சிவ தீட்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தகுதியா?

.காண்டீபன், அழகர்கோயில்

சிவபெருமானது அருட்கண்கள் என்று போற்றப்படுகிற ருத்ராட்சத்தை அணிவதற்கு உடல், உள்ளத் தூய்மை என்ற இரண்டு தகுதிகள் இருந்தால் மட்டுமே போதும். சிவனை பூஜை செய்வதற்கும் சிவனை அடைய வழி ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஐவகை ஆசாரங்களை சிவனடியார்கள் குறிப்பிட்டார்கள். இல்லற தர்மத்தில் உள்ளவர்கள் எளிய முறையில் இதனை அணியலாம்.

வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை’ என்று மனம், உடல், வாக்கு தூய்மையை முதல் தந்திரத்தில் குறிப்பிடுகிறார் திருமூலர். அதன்படி நடந்து, ருத்ராட்சத்தை த்ரியம்பத மந்திரம் கூறி மஞ்சள் தூள், பன்னீர் விட்டு அலம்பித் துடைத்து வீட்டில் உள்ள பூஜை அறை சிவன் படத்தின் முன் ஐந்து நாட்கள் வைத்திருந்து அருகில் உள்ள சிவாலயத்திற்கு காலை வேளையில் சென்று அர்ச்சகரிடம் கொடுத்து லிங்கத் திருமேனியில் அணியச் செய்து அர்ச்சனை நடத்தி அவரிடம் ஆசி பெற்று, ‘சிவ சிவ’ என்று கூறி ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து சுவாமி திருமுன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம். தீட்டுக் காலம், இறப்பு வீட்டுக்குச் செல்லும்போது மட்டும் அணிதல் வேண்டாம்.

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடன்ஆகி நின்றுஅருளி,
இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும்
கங்காநாயகனே! கழிப்பாலை மேயானே! ஓம் நமசிவாய!’

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நான், மகா சிவராத்திரி நாளில் வழிபட உகந்த சிவத் தலம் ஒன்றைக் கூறவும்

எம்.அமுதா முருகேசன், திருவள்ளூர்

வாலாஜாபேட்டையிலிருந்து தெற்கே மூன்று கி.மீ. தொலைவு பயணித்தால் வேப்பூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர், இறைவி பால குஜாம்பிகை என்று அழைக்கப்படுகின்றனர். அருணகிரிநாதர் இத்தலம் பற்றி தனது திருப்புகழில் பாடிப்பரவி உள்ளார். அருந்ததியின் கணவர் வசிஷ்டருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாலும் அவரோடு ஐக்கியமானதாலும் இறைவனுக்கும் இப்பெயர் வந்ததாக ஆலய தல வரலாறு கூறுகின்றது.

இந்தக் கோயிலில் மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேப்பம்பூ மற்றும் வில்வ மாலை சாத்தினால் கல்வி, இசை மற்றும் ஆயக் கலைகளில் மேன்மை அடையலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இன்று சுவாமி, அம்பாளுக்கு மிளகுப் பொங்கல் படைத்து, வெள்ளை அரளி மலரால் அர்ச்சனை செய்து சிவபுராணம் படித்து, ஆலயத் திருச்சுற்று வர, நலம் உண்டாகும். நீத்தாருக்கு மோட்ச தீபம் ஏற்றுதல் இங்கே தனி பிரார்த்தனையாக உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திர நாளில் இறைவன் ஜோதி வடிவமாகக் காட்சி தந்ததால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஆயுட்காலம் முழுவதும் வழிபாடு செய்ய வேண்டிய சிறப்புத் தலம் இது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு விளக்குகள் அணைக்கப்பட்டு சிவலிங்கத்தை தீப ஒளியில் மட்டும் தரிசிக்க வைக்கிறார்கள். பித்ரு தோஷம் நீங்கிட வழிபட வேண்டிய திருத்தலமும் கூட இது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

- ராஜி ரகுநாதன் ‘ஜீவன் பத்ராணி பஸ்யந்து’ என்கிறது வால்மீகி ராமாயணம். ‘உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்’ என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது. அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...

அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் வாயு புத்திரரான ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டவர் என்பதால் இவர், ‘அஷ்டாம்ச ஆஞ்சனேயர்’ என அழைக்கப்படுகிறார். வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் வளம் தரும் அந்த எட்டு விதமான அம்சங்கள்...

புண்ணிய தீர்த்தப் பலன்கள்!

0
- எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன் lகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஈசான ருத்திரரின் சூலாயுதத்தால் உருவாக்கப்பட்ட, ‘ஞான வாவி’ எனும் கிணறு உள்ளது. இதில் நீராட, ஞானம் கிட்டும். lகாசி கங்கைக்கரையில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் மணிகர்ணிகா கட்டத்தில்...

கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!

0
- டி.எம்.இரத்தினவேல் சிவபெருமானின் பூஜைக்காக பகவான் மகாவிஷ்ணு தமது கண்ணையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான பக்தி வரலாறு, உள்ளத்தை உருக வைப்பதாகும். ஒரு சமயம் சலந்தரன் எனும் அரக்கன் பகவான் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பறித்துச்...