
– லதானந்த்
எழில்மிகு கடற்கரைகள், நீர் விளையாட்டுக்கள், பன்னாட்டு உணவுகளைத் தரும் உணவகங்கள் என சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் கோவா மாநில
வட பகுதியில், பாண்டா தாலுகாவின் மங்கேஷி கிராமத்தில் ஆன்மிக அருள் பரப்பி அழகுற நிமிர்ந்து நிற்கிறது ஸ்ரீ மங்கேஷி ஆலயம்.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைப் பசேல் வயல்கள், ஓங்கி உயர்ந்த மரங்கள், ஓடைகள், தூய்மையான காற்று, சுகந்த நறுமணம் வீசும் பூச்செடிகள் என்று அழகு கொழிக்கும் சூழலில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஸ்ரீ மங்கேஷி சிவாலயம்.
கோவாவின் மிகப்பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை தரிசித்துப் பலன் பெறுகிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்த ஆலய சிவலிங்கம் குஷஸ்தலை கொர்டாலிம் என்ற கிராமத்தில் வழிபடப்பட்டு வந்திருக்கிறது. 1543ஆம் ஆண்டு இந்தப் பகுதியைப் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றினர். 1560ஆம் ஆண்டு இவர்கள் இங்கிருந்த மக்களை மத மாற்றம் செய்ய முனைந்தபோது, மங்கேஷி சிவலிங்கத்தை கௌண்டியன் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் தற்போதைய இடத்துக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்தார்கள். அப்போது இந்தப் பகுதி இந்து மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. 1739ஆம் ஆண்டு மங்கேஷி கிராமத்தையே இந்த ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்தார்கள்.
ஆலயம் எழுப்பப்பட்ட சில ஆண்டுகளிலேயே இப்பகுதி மீண்டும் போர்ச்சுக்கீசியர்கள் ஆளுமையின் கீழ் வந்தது. ஆனால், இப்போது போர்ச்சுக்கீசியர்களுக்கு முன்பிருந்த மத மாற்ற வேகம் இல்லை. மத சகிப்புத் தன்மை கூடியிருந்ததால் ஆலயத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். கவாலே மடத்தைச் சேர்ந்த ஹெச்.ஹெச்.ஸ்ரீமட் ஸ்வாமிஜி இந்த ஆலயத்தின் ஆன்மிகத் தலைவராவார்.
மங்கேஷ் என அழைக்கப்படும் சிவபெருமானின் லிங்க வடிவம்தான் இந்தக் கோயிலின் மூலவராகக் காட்சி தருகிறது. இந்தக் கோயில் சிவலிங்கம் பாகீரதி நதிக்கரையில் உள்ள மங்கிரீஷ் மலையில் இருந்து பிரம்மாவால் வடிவமைக்கப்பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. அங்கிருந்து ஸரஸ்வத் பிராமணர்களால் முதலில் பீஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கோவாவுக்குக் கொண்டு வரப்பட்டது எனவும் சொல்கின்றனர்.
ஒரு சமயம் பார்வதி தேவியை அச்சுறுத்துவதற்காக புலி வடிவம் கொண்டார் சிவபெருமான். அதைக் கண்டு பயந்த பார்வதி தேவி, சிவபெருமானைத் தேடுகிறார். 'ட்ராஹி மாம் கிரிஷா!' (மலைகளின் அரசனே, என்னைக் காப்பாற்று!) என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார். இதைக் கேட்டு புலி வடிவம் நீங்கி, தனது இயல்பான வடிவத்துக்கு மாறுகிறார் ஈசன்.
'மாம் கிரிஷா' என்ற வார்த்தைகளே காலப்போக்கில் மருவி, 'மங்கேஷ்' என ஆகியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு மங்கேஷ்தான் குலதெய்வமாக விளங்குகிறார்.
கோயிலில் நந்திகேஸ்வரர், விநாயகர், பகவதி மற்றும் கிராம புருஷ தேவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டு.ஆலய வளாகத்தில் மூலகேஷ்வர், வீரபத்திரர், லக்ஷ்மிநாராயணர், சூரியநாராயணர், கருடர் மற்றும் கால பைரவருக்கும் சிறு சிறு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இவை தவிர, பல குவிமாடங்களும், தூண்களும் அழகியலோடு திகழ்கின்றன. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் ஏழடுக்கு தீபஸ்தம்பம் கட்டிடக் கலையின் சிறப்பை விளக்குவதாக அமைந்திருக்கிறது, கோயிலில் மிகப்பெரிய நீர்த் தொட்டி ஒன்றும் உள்ளது.
ஸ்ரீ மங்கேஷிக்கு தினசரி பலவிதமான பூஜைகள் நடைபெறுகின்றன. அதிகாலை அபிஷேகத்தில் ஆரம்பித்து, லாஹுருத்ரா மற்றும் கஹாருத்ரா என்னும் பூஜைகள் நடைபெறுகின்றன. மதியத்தில் மஹா ஆரத்தி காட்டப்படுகிறது. இரவில் பஞ்சோப்ச்சார் என்னும் பூஜை நடந்தேறுகிறது.
ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையிலும் ஆரத்திக்கு முன்னர் மங்கேஷி விக்ரஹம் மேள தாளத்தோடு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ராம நவமி, அட்சய திருதியை, நவராத்திரி, தஸரா, தீபாவளி, மஹா பூர்ணிமா,
மஹா சிவராத்திரி ஆகிய பண்டிகைகள் ஆலயத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்தில் பிரவேசிக்க பக்தர்கள் கண்ணியமான உடைகள் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோவாவுக்கு சுற்றுலா செல்வோர் மங்கேஷி ஆலய சிவபெருமானையும் தரிசித்து அருள் பெற்று வரலாமே!
அமைவிடம் : மாநிலத் தலைநகர் பனாஜியில் இருந்து 21 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
தரிசன நேரம் : காலை 6 முதல் இரவு 10 மணி வரை.