நலம் தரும் ஸ்ரீராம நாமம்!

நலம் தரும் ஸ்ரீராம நாமம்!
Published on

– ராஜி ரகுநாதன்

ஸ்ரீராமன் மானுட இனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆதரிசமான அவதாரம். மானுட இனம் எப்படி விளங்க வேண்டும் என்று வழிகாட்ட வந்த சாட்சாத் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஆதரிசமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தர்மங்கள் அனைத்தும் ஒரு வடிவமானவன் ஸ்ரீராமன். அதோடு, நாம் வழிபட்டு உய்வடைவதற்கு சகல தெய்வங்களும் ஒன்றான பரமாத்மாவும் அவனே.
இந்த இரண்டு கருத்துக்களையும் ராமாயணம் நமக்கு அறிவுறுத்துகிறது.

'ஸ்ரீராமன் மானுடனா? கடவுளா?' என்ற விவாதம் எப்போதும் இருந்துள்ளது. ராவணனுக்கு மனிதனாலும் குரங்காலும்தான் மரணம் என்ற வரம் உள்ளது.
அந்தக் காரணத்தால் மானுடனாகவே ராமன் அவதரித்தான். அவதாரம் எடுத்த நோக்கத்தை முன்னிட்டு மனித குணங்களையே வெளிப்படுத்தினான்.
ஆனால், முனிவர்கள் மட்டும் ஸ்ரீராமனிடத்தில் இருந்த நாராயண தத்துவத்தை தரிசித்து வணங்கத் தவறவில்லை. ஸ்ரீ மகாவிஷ்ணு பரிபூரண மனிதனாக அவதரித்துக் காட்டிய தர்ம மயமான லீலை, ராமாயணம்.

ராமாயணம் சிறந்த மானுடனின் கதை மட்டுமே அல்ல. இது வேதத்திற்குச் சமமானது. ராமாயணம் மந்திரங்களின் வடிவம். ராமாயணத்தின் மகிமை அளப்பரியது. ராமாயண நூல் யாருடைய இல்லத்தில் இருக்குமோ அங்கு தரித்திரம் இருக்காது. கிரகங்களின் தொந்தரவு இருக்காது.

சுந்தர காண்ட பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதே மகிமை ராமாயணத்தின் அனைத்து பாகங்களுக்கும் உண்டு.
எந்த சர்க்கம் பாராயாணம் செய்தால் எந்த விருப்பம் நிறைவேறும்? எந்த சர்க்கம் பாராயணம் செய்தால் எந்தத் தீமை விலகும்? எந்த கிரகத்தின் தொந்தரவு நீங்க எந்த காண்டத்தில் எந்த சர்க்கத்தை பாராயணம் செய்ய வேண்டும்? என்றெல்லாம் பெரியவர்கள் விதிகளை நிர்ணயித்துள்ளனர்.

ராமாயணம் வெறும் ஒரு கதைப் புத்தகம் அல்ல. இது மந்திர சொரூபமான புனித நூல். ராமாயண பாராயணம் நம்மைச் சுத்தம் செய்து தூய்மைப்படுத்தி முற்பிறவி தீவினைகளை நீக்க வல்லது. இளைஞர்களுக்கு ராமாயணம் அறிமுகமாவதன் மூலம் தனி மனித ஆளுமை வளரும்.

'ராம'நாமத்தின் சக்தி மகத்துவம் நிறைந்தது. 'ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாக்ஷரி மந்திரத்தின் ஐந்தாவது அட்சரம், 'ரா'என்பது.
'நமசிவாய'என்ற பஞ்சாக்ஷரி மந்திரத்தின் இரண்டாவது அட்சரம், 'ம' என்பது. இவ்விரண்டும் சேர்ந்து 'ராம'என்ற மந்திரச் சொல் உருவானது. பவித்திரமான ராம நாமத்தை உச்சரித்து பக்தர்கள் பிறவிக்கடலை எளிதாகத் தாண்ட முடியும் என்பது பெரியவர்களின் நிர்ணயம். அனுபவமும் கூட.

பார்வதி தேவி, "எந்த நாமம் உயர்ந்தது?" என்று கேட்டபோது, ராம நாமத்தின் மகிமைகளை எடுத்து விளக்கி, "ராம நாமத்தால் புண்ணிய பலன்கள் கிட்டும்" என்று கூறியருளினார் பரமசிவன்.

சித்திரை மாதம் சுக்லபட்ச நவமியை (10.4.2022) ஸ்ரீராம நவமி பண்டிகையாக, ஸ்ரீராமரின் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். ஸ்ரீராம நவமியன்று ராம நாமத்தை உச்சரித்தபடியே, 'ஸ்ரீராம' என்று எழுதத் தொடங்கி, அடுத்த ஸ்ரீராம நவமிக்குள் சங்கல்பித்துக் கொண்ட எண்ணிக்கையை எழுதி முடிக்கும் வழக்கம் பக்தர்களிடம் காணப்படுகிறது.

உகாதி பண்டிகையும் ராம நவமியும்

ண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் தெலுங்குப் புத்தாண்டை உகாதி பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சைத்ர மாதம் அமாவாசைக்கு மறுநாள் வரும் சனிக்கிழமை சுபகிருது ஆண்டு தொடங்குகிறது. இன்று முதல் ஒன்பது நாட்களும் இறை வழிபாட்டில் செலவிட வேண்டுமென்பது முன்னோர் கூறிய வழிமுறை.
நவமி திதியன்று வழிபடப்படும் ஸ்ரீராம நவமியும் இதில் அடங்கும். இதனை, 'வசந்த நவராத்திரி' என்றழைப்பர். ஆண்டின் தொடக்கத்தில் இறைவனைத் தொழுது தொடங்கினால் ஆண்டு முழுவதும் தெய்வீக அருளோடு வாழலாம் என்பது ஐதீகம்.

உகாதி பண்டிகையன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி நகைகள் அணிந்து அலங்கரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பர். வீட்டு வாயிலுக்கு மாவிலையாலும் வேப்பிலையாலும் சாமந்தி மலர்களாலும் தோரணம் கட்டி வீட்டை அலங்கரித்து இறைவனை வழிபடுவர். கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு அர்ச்சனை செய்து வணங்குவர். வேப்பம்பூ பச்சடியை இறைவனுக்குப் படைத்து பின் அனைவரும் அருந்தி களிப்புறும் பண்டிகை உகாதி. வாழ்வில் கஷ்டமும் சுகமும் கலந்தே இருக்கும் என்ற உண்மையை உகாதி பச்சடி எடுத்துரைக்கிறது.

இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, உவர்ப்பு, கசப்பு சேர்த்து அறுசுவைக் கலவையாக உகாதி பச்சடியைத் தயாரிப்பார்கள். இதில் புது வெல்லம், புதுப் புளி, சிறிது மிளகாய்ப்பொடி அல்லது பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு, மாங்காய்த் துண்டுகள், அசோக மரத்தின் இளம் தளிர்கள் சேர்த்துத் தயாரிப்பார்கள். கரும்பு ரசம், நெய், கொய்யாப்பழத் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகளும் இதில் சேர்ப்பதுண்டு. ஆண்டு முழுவதும் எதிர்கொள்ள வேண்டிவரும் கஷ்ட, சுகங்களை பொறுமையோடும் அடக்கத்தோடும் ஏற்க வேண்டும் என்ற அறிவுரையை இந்த உகாதி பச்சடி அளிக்கிறது.

மாலையில் பஞ்சாங்க ஸ்ரவணம் செய்வது கட்டாயம் நடைபெறும். இவ்விதம் புத்தாண்டின் ஆரம்பத்தைக் கொண்டாடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் சுகமும் சந்தோஷமும் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com