படித்தேன்; ரசித்தேன்!

படித்தேன்; ரசித்தேன்!
Published on

வலிமை பெற்ற மனம்!

ண்ணங்களின் குவியலே மனம். எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமை ஆனது. மனம் அலைபாயும்போது சக்தியானது எண்ணத்தினால் சிதறிப்போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போதுதான் சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை பெறுகிறது!

– பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பிரார்த்தனை என்பது…

ருவன் பிரார்த்தனை செய்யும்போது தனக்காக மட்டும் செய்யாது, உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால் அதில் தனி ஒரு மனிதனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன!

– இராமலிங்க வள்ளலார் சுவாமிகள்

இறையில் கலக்கும் நிலை!

ருவத்துடனும் உருவம் இல்லாமலும் விளங்குபவர்தான் இறைவன்.
அது மட்டுமல்லாது, இந்த இரு நிலைகளைக் கடந்தும் அவரே விளங்குகிறார்.
அவர் எப்படி எல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார். இறைவனை நெருங்க நெருங்க ஒருவன் அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கிறான். முடிவில் அவரிலேயே ஒன்றாகக் கலந்து விடுகிறான்!

– ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

பால் போன்ற மனம்!

ல்லவர்களை பால் போன்ற மனம் படைத்தவர்கள் என்று புகழ்ந்து கூறுவோம்.
பால் வெண்மையான நிறம் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை.
ஏன்? சுண்ணாம்பும் வெண்மை நிறம் கொண்டதுதான். ஆனாலும், பாலைத்தான் உயர்வாகச் சொல்வோம். பாலில் எவ்வளவு தண்ணீர் கலந்தாலும் அதன் நிறம் மாறாது. அதோடு, பாலோடு சேர்ந்த தண்ணீரின் மதிப்பும் உயரும். இதனால்தான் நல்ல மனம் படைத்தவர்களை பாலோடு ஒப்பிட்டுச் சொல்கிறோம்.

– திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

நாராயணனே நமக்கே பறை தருவான்!

ஸ்ரீ கிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்து கடினமான விஷயங்களைப் பேசி கடைசியில் முடிக்கும்போது, 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்றான். கடினமான, புரியாத விஷயங்களை வளவளவென்று சொல்லிவிட்டு, கடைசியில் சுலபமான விஷயங்களைக் கொண்டு வந்து வைத்தான். அதுவே பகவத் கீதையின் சரம ஸ்லோகம். ஆனால் ஆண்டாள், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்பதை, 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று மிக அற்புதமாக வலியுறுத்தி விட்டாள். கண்ணன் கடைசியாகச் சொன்னதை ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாடலிலேயே சொல்லி விட்டாள். நமக்குத் தெரிய வேண்டியதும் அதுதானே!

– முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்
தொகுப்பு : பே.சண்முகம், செங்கோட்டை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com