– அபர்ணா சுப்ரமணியம்
புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்!
திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த பராய் மரத்துக்கு நீரூற்றி, தூபம் காட்டி வலம் வந்து வழிபட, தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என தல வரலாறு கூறுகிறது.
நடுக்கம், பயம் போக்கும் நெய் தீபம்!
ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கருவறையிலும், எமதர்மராஜாவின் சன்னிதியிலும் 12 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, உடலில் ஏற்பட்ட நடுக்கம் மற்றும் மன பயம் ஆகியவை குறையும்.
வயிற்று வலிக்கு நிவாரணமாகும் நெல்மணி!
கேரள மாநிலம், கோட்டயத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள ஏற்றுமானூர் மஹாதேவர் ஆலயத்திலுள்ள இரண்டு நந்திகளில் வெண்கலத்தால் செய்யப்பட்ட நந்தியின் வயிற்றில் திறந்து மூடும்படியான அமைப்பில் காணிக்கையாகப் பெறப்பட்ட நெல் நிரப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு நெல்மணியை எடுத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். எடுக்க எடுக்க நெல்மணி குறையாது.
பேச்சுக் குறைபாட்டை தீர்க்கும் கம்பர் சமாதி!
நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் சமாதிக்குச் சென்று வழிபட, திக்குவாய் பிரச்னை உள்ளவர்கள், நீண்ட நாட்கள் ஆகியும் பேச்சு வராத குழந்தைகளுக்கு சரளமாகப் பேசும் திறன் கிடைக்கும்.
நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் ஈசன்!
பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் பவ கரணம் என்பது நோய் நிவாரணத்துக்குரிய வேளையாகும். இந்த பவ கரணம் உள்ள நாளில் திருத்துறைப்பூண்டியில் உள்ள பவஔஷதீசுவரரை வழிபட, தீராத நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமாகும்.
வயிற்று வலி தீர்க்கும் அரிய மூலிகை!
பண்ருட்டி அருகே திருவாமூரிலுள்ள திருநாவுக்கரசர் கோயிலில் உள்ள, ‘களர் உகாய்’ என்ற அரிய வகை மரத்தின் இலைகளை மென்று தின்றால் வயிற்றுவலி குணமாகும் என்பது நம்பிக்கை. புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என மூன்று சுவைகளைக் கொண்டிருப்பது இதன் சிறப்பாகும்.
சிறுநீரக பாதிப்புகள் குணமாக…
திருச்சி மலைக்கோட்டை,
பாதாள அய்யனாருக்கு மாதந்தோறும்
தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட்டால் வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரகப் பாதிப்புகள் நீங்குமென்பது ஐதீகம்.
சரும நோயைப் போக்கும் பூவரச மலர்!
கோவையிலிருந்து கோபி செல்லும் வழியிலுள்ள புஞ்சைபுளியம்பட்டிக்கு அருகே உள்ளது இருகாலூர். இங்குள்ள ஸ்ரீ அழகுராயப் பெருமாள் கோயிலின் தல விருட்சமான பூவரச மரப் பூவை எடுத்து மண்ணுடன் குழைத்துத் தடவி வந்தால் சரும நோய்கள் குணமாகும்.
காது பிரச்னையை தீர்க்கும் ராக அர்ச்சனை!
சீர்காழி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு மேற்கே 2.கி.மீ. தொலைவில் உப்பனாற்றின் வடகரையில் அமைந்துள்ள தாளமுடையார் கோயிலில் சப்தமி திதி தோறும் சப்த ராகங்களில் அர்ச்சித்து வழிபட்டால் காது சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும். காது பிரச்னையால் பேச்சு வராதவர்களுக்கும் பேச்சு வரும்.
மருக்களை குணமாக்கும் கண்ணாடி வழிபாடு!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சுப்ரமண்யா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. உடலில் ஏற்பட்ட கட்டிகள், மரு கொப்புளங்கள் நீங்க இத்தலத்துக்கு வந்து முருகனை வழிபட்டு, கண்ணாடிகளை வைத்து மனமுருக பிரார்த்தனை செய்கிறார்கள். அதனால் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.