
– ஜி.குமார்
விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை. கும்பகர்ணன் வீழ்ந்தாலும் இந்திரனையும் வென்ற தன் மைந்தன் மேக்நாத்தின் பராக்கிரமத்தை நினைத்தே ராவணன் இன்னும் போரைக் கைவிடவில்லை. சீதையையும் விடுவிக்கவில்லை.
இன்றையப் போரைத் துவங்கும் முன்னர் ஆசி பெறுவதற்காக ஸ்ரீராமனிடம் செல்கிறான் லக்குவணன். ஸ்ரீராமர் பூஜையில் இருக்கிறார்.
பூஜை முடிந்து வந்த ஸ்ரீராமர், "யுத்தம் தொடங்க இன்னும் நேரம் இருக்கிறதா?" என லக்குவணனுடன் செல்ல இருக்கும் அனுமனிடம் கேட்கிறார்.
"ஐயனே! இப்போது விடியற்காலம். இன்னும் சற்று அவகாசம் இருக்கிறது" என்கிறான்.
ஸ்ரீராமர் ஒரு பாத்திரத்தை எடுத்து லக்குவணனிடம் கொடுத்து, "போய் இதில் பிட்சை வாங்கி வா!" என்கிறார்.
சுற்றியிருந்த அனைவருக்கும் திகைப்பு! 'யுத்த களம்! அந்நிய பூமி! இங்கு யாரிடம் போய் இளைய பிரபு யாசகம் கேட்பார்? ஆசி பெற வந்தவருக்கு ஏன் ஸ்ரீராமபிரான் இப்படி ஒரு சோதனையை வைக்கிறார்?'
யோசிக்க நேரம் இல்லை. அண்ணனின் சொற்படி பிட்சைக்குச் சென்ற லக்குவணனுக்கு அந்த யுத்தக் களத்தில் ராவணனது ராட்சத சேனையின் குடில்கள் மட்டுமே தொலைவில் கண்களுக்குத் தெரிகின்றன. நிராயுதபாணியாய் கையில் ஒரு பாத்திரத்துடன் லக்குவணன் வருவதை ராட்சத சேனை வீரர்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு அதிர்ச்சி! திகைப்பு!!
"தயவுகூர்ந்து பிட்சை இடுங்கள்" எந்த தயக்கமுமின்றி தலைகுனிந்து அவர்களை லக்குவணன் இறைஞ்சுகிறான்.
ராவணப் படைத்தலைவன் கண்களை அசைக்க, ஒரு ராட்சதன் தன்னிடமிருந்த அன்னத்தை லக்குவணனோடு பகிர்ந்துகொள்கிறான்.
விரைந்து திரும்பி வந்த இலக்குவணன், தான் பெற்று வந்த பிட்சையை ஸ்ரீராமனிடம் சமர்ப்பிக்கிறான்.
"விஜயீபவ!" என ஆசிர்வதித்து லக்குவணனை யுத்தத்திற்கு அனுப்புகிறார் ஸ்ரீராமர்.
பிட்சையின் மர்மம் எவருக்கும் விளங்கவில்லை.
தீவிர யுத்தம் தொடங்கியது. மேக்நாத் சக்தி ஆயுதம், பாசுபதாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாய் ஏவினான்.
லக்குவணன் அவை அனைத்தையும் தலை குனிந்து நமஸ்கரிக்க,
அவை லக்குவணனுக்கு ஆசிர்வாதம் செய்துத் திரும்பின.
இந்திரஜித் எனப்படும் மேக்நாத்துக்கு அதிர்ச்சி! பிறகு, லக்குவணன் ஸ்ரீராமனை தியானித்து தனது அம்பை விடுத்தான். அது மேக்நாத்தின் சிரத்தைக் கொய்தது. வானரப் படைகளிடையே ஆரவாரம்!
ஸ்ரீராமனின் இதழ்க்கடையில் ஒரு புன்முறுவல். "போரை வெல்ல வீரமும் ஆயுதமும் மட்டும் இருந்தால் போதாது. விவேகம், பொறுமை, சாந்தம், பணிவு ஆகியவையும் உடனிருக்க வேண்டும். லக்குவணன் இயல்பாகவே குரோதம் மிகுந்தவன். அவனுக்குத் தேவையான சமயத்தில் அந்தப் பணிவு வர வேண்டும் என்பதற்காகவே அவனைப் பிட்சை வாங்கி வர அனுப்பினேன். யாசகம் பெறும்போது தலை குனிந்து, பணிவு மிகுதியாகும். இந்திரஜித் விடுத்த அனைத்து திவ்ய அஸ்திரங்களையும் அவன் பணிந்து வணங்க அது வழி செய்தது. எதிர்க்கக்கூடாது என்ற விவேகமும் அப்போது கூடி வந்தது. அதேபோல், லக்குவணன் தொடுத்த பாணத்தை என் நாமத்தைச் சொல்லி மேக்நாத் பணிவுடன் வணங்கியிருந்தால் அவனுக்கும் அழிவு ஏற்பட்டிருக்காது" என்றார்.
ஒரு அரச வம்ச தலைவனாக மட்டுமில்லாது, தேவைப்படும்போது ஒரு சேனாதிபதியாகவும் மாறி தகுந்த உத்தியை உபதேசித்த ஸ்ரீராமரை அனைவரும் வணங்கினர்.