0,00 INR

No products in the cart.

மாப்பிள்ளை குப்பத்து மணப்பெண்!

– ரேவதி பாலு

கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது வீட்டை விட்டுக் கிளம்பவே முடியாமல் ஜெயில் வாழ்க்கை. தற்போது கெடுபிடிகள் குறைந்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டதால் மூன்று வருடங்களாகப் போக முடியாத குலதெய்வம் கோயிலுக்குச் செல்லலாம் என, சகோதர, சகோதரிகள், குடும்பத்தினர் ஒரு பத்து பேர் கிளம்பினோம். வீட்டை விட்டு வெளியே வந்து டெம்போ ட்ராவலரில் ஏறியபோது அவ்வளவு மகிழ்ச்சி.

வண்டி ஓட ஆரம்பித்ததும் ரொம்ப நாட்களாக எங்கள் மேல் படாத வெளிக்காற்று சாமரம் கொண்டு விசிற உச்சி வெய்யிலையும் துச்சமாக மதித்து ஆனந்தமாகப் பிரயாணம் செய்தோம்.

எல்லோருக்குமே குலதெய்வம் கோயில் என்று ஒன்றும், கூடவே நம் மூதாதையர்கள் வழிபட்ட கிராம தேவதை கோயில் ஒன்றும் இருக்கிறது.  குலதெய்வம் கோயிலுக்குத் தவறாமல் சென்று வழிபடுவது போலவே, கிராம தேவதை கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.  தொலைக்காட்சி, ஆண்ட்ராயிட் தொலைபேசி, வாட்ஸ் அப் போன்றவை இல்லாத அந்தப் பொற்காலத்தில், நம் மூதாதையர் மாலையானால் ஒரு எண்ணெய் கிண்ணத்துடன் அருகிலுள்ள கோயிலைச் சுற்றக் கிளம்பி விடுவார்கள். அநேகமாக அது அந்த கிராமத்து தேவதை கோயிலாகத்தான் இருக்கும்.

ங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட கிராம தேவதைக் கோயிலை நாங்கள் சமீப காலத்தில்தான் கண்டு பிடித்தோம். யாரோ தாயாதி உறவினர் ஒருவர், ‘மாப்பிள்ளை குப்பத்து திரௌபதி அம்மன்தான் நம்முடைய மூதாதையர்கள் வழிபட்ட கிராம தேவதை. அதையும் நாம் வழிபட வேண்டும் என்று வழிகாட்ட, அதன் பின் சகோதரர்கள் அங்கே செல்ல ஆரம்பித்தார்கள். இதில் மிகவும் வருத்தத்தற்குரிய விஷயம் என்னவென்றால் எங்கள் தாத்தாவுக்கு வேலை கிடைத்து, அவர் காலத்திலேயே சென்னைக்கு எங்கள் குடும்பம் வந்து விட்டபடியால் இந்த கிராம தேவதையைப் பற்றிய தகவல் எங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் போக, அவர்கள் சென்று வழிபட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நாமாவது தெரிந்து கொண்டிருக்கிறோமே, வழிபடுவோம் என்று ஒருமுறை சென்று விட்டு வந்த ஒரு சகோதரர் தகவல் சொல்ல இப்போது அந்த திரௌபதியம்மனை தரிசிக்க நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.

நன்னிலத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் குடவாசல் சாலையில் அமைந்திருக்கிறது திரௌபதியம்மன் திருக்கோயில். ‘மாப்பிளை குப்பம்’ என்று பேச்சு வழக்கில் சொல்லும் அந்த கிராமத்திற்கு, ‘தென்னஞ்சார்’ என்று பெயர்.

சாலைக்கு இடதுபுறத்தில் காவிரி வாய்க்காலாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் வயல்களுக்கு நடுவே கோயில். பிரதான சாலையிலிருந்து அங்கே போக ஒரு ஒற்றையடிப் பாதைதான். அங்கே ஒரு கோயில் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருப்பதால் ஏற்கெனவே ஓரிரு முறை போய் வந்த சகோதரன் அடையாளம் காட்ட, மெதுவாக வழியில் குறிக்கிட்ட காட்டுக் கொடி, செடிகளை விலக்கிக் கொண்டு நடந்து கோயில் வாசலை அடைந்தோம்.

வாசலுக்கு நேரே அழகான வடிவத்தில் வலது கரத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போல கிளியை ஏந்தி, இடது கரத்தை உடலோடு ஒட்டி வைத்து ஒயிலாக ஒரு மணப்பெண் போல் நின்று கொண்டு கொள்ளையழகோடு தரிசனம் தருகிறாள் திரௌபதியம்மன்.

‘தாயே! எங்கள் தலைமுறையிலாவது உன்னை தரிசிக்க கருணை செய்தாயே‘ என்று கண் குளிர தரிசித்து, ‘உன்னை தரிசிப்பது அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் தாயே!‘ என்று மனமுருக வேண்டி கீழே வீழ்ந்து பணிந்தோம்.

அங்கே மண்ணாலான ஒரு அரவான் பிம்பம் உள்ளது. ‘மஹாபாரதப் போரில் களபலி கொடுக்கப்பட்ட அரவான்தானா அது’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘மஹாபாரத திரௌபதிக்கும் இந்த அம்மனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?’ என்று பூசாரியிடம் கேட்டபோது அவர், ‘அதெல்லாம் இல்லை. ஆனால், சுமார் ஐநூறு ஆண்டுகளாக இந்த திரௌபதியம்மன் இங்கே கோயில் கொண்டிருக்கிறாள்’ என்றார். விநாயகர், முருகர் சன்னிதிகளைத் தவிர, கமலக்கண்ணி அம்மன், பத்ரகாளி அம்மன், அகோர வீரபத்திரர் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் மிகுந்த கோயில்கள் போல் இல்லாமல், இங்கே ஏகாந்தமாக குடும்பத்தோடு அமர்ந்து அபிஷேகம், ஆரதனை செய்வித்து பார்த்துப் பரவசம் அடையும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது.

முதலில் கூரை வேயப்பட்டிருந்த கோயில், பிறகு ஓடு வேயப்பட்டு, இப்போது சிமெண்ட் தளமாக மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் நம் மூதாதையர் வந்து வழிபட்டபோது அருள்பாலித்து அவர்களை ரட்சித்த தெய்வங்களையும் அவர்கள் குடிகொண்டுள்ள கோயில்களையும் அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்த நாம், புனருத்தாரணம் செய்து அந்த தெய்வங்களின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்.  வாழ்க்கை என்பதே பரஸ்பரந்தான் என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது கிராமத்திலுள்ள சிறு சிறு கோயில்கள். அது மட்டுமல்லாது, குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்தாலும், ஒன்று சேர்ந்து போய் தரிசிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இந்தக் குலதெய்வக் கோயில்கள் வழிபாடு அமைகிறது.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...