அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!

அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!
Published on

– பழங்காமூர் மோ கணேஷ்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம். அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடைய இந்தத் தலத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

'தென்னூர் கைம்மைத் திருச்சுழி யற்றிருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள்பி ரான்உறை யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.'

இயல் – இசை – நாடகக் கலைகளுக்கு என உலகப் பிரசித்தம் பெற்ற ஊர் புரிசை. தெருக்கூத்திற்கு என காலங்காலமாக வாழும் கலைஞர்கள் அதிகமாக உள்ள இந்த ஊரை சுந்தரரும் மறக்காமல் நினைவில் வைத்து தனது திருநாட்டுத் தொகையில் வைப்புத் தலமாகப் பாடிப் பரவியுள்ளார்.

ல் தூணிலோ அல்லது கற்சுவரிலோ சிற்பங்கள் வடிப்பதைப் புடைப்புச் சிற்பம் என்பர். அவ்வாறு புடைக்கும் வழக்கம் பல்லவர்களிடமிருந்து மற்ற மன்னர் பரம்பரையினருக்கு வந்தது. பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், ஹொய்சாளர்கள், நாயக்க மன்னர்கள் எனப் பலரும் இக்கலையில் கைதேர்ந்தவர்கள் என்ற போதிலும், சோழர்களின் பாணியே தனிதான். இந்த புடைப்புக் கலையில் புராண நிகழ்வுகளை தத்துரூபமாக வடிக்கும் சோழர்கால கலைஞர்கள் இங்கே (புரிசை) அறுபத்து மூவரது வரலாற்றினை மகாமண்டபத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் எண்ணிக்கையில் அடங்காதவண்ணம் நூற்றுக்கணக்கில் புடைத்துள்ளனர்.

தமிழகத்தின் அனேக சிவாலயங்களில் காணக்கிடைக்காத அதியற்புதமான இந்தப் புடைப்புச் சிற்பங்களைக் காணக்காண ஆச்சர்யம் மேலிடுகின்றது. இருப்பினும், காலத்தால் சிதைவுகள் காணப்படுகின்றது. சுவர்களில் கல்வெட்டுச் செய்திகளுக்கு பதிலாக இந்தப் புடைப்புச் சிற்பங்களே அதிகம் காணப்படுகின்றன.

பிற்கால சோழர்களே இந்த அற்புத புடைப்புச் சிற்பங்களைப் படைத்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. சோழ மண்டலத்தின் வெண்குன்ற கூற்றத்திற்கு (கோட்டம்) உட்பட்டதாக இந்தப் புரிசை திகழ்ந்துள்ளது. இத்தல சிவாலயத்தினை அகத்தியர் பூஜித்து வழிபட்டுள்ளார். அதற்குச் சான்றாக நந்திதேவருக்கு முன்னே சாளரத்தின் இடப்புறம் அகத்திய மகரிஷியின் புடைப்புச் சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. சிறந்த மகாபாரத சொற்பொழிவாளரும், இலக்கிய அறிஞருமாகவும் திகழ்ந்த பு.சு.முருகேச முதலியார் இவ்வூரைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட சிறிய ராஜகோபுரம். படிகள் ஏறி உள்ளே செல்ல… நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம். சாளரத்தின் வாயிலாக ஸ்வாமியை தரிசிக்கலாம். சாளரத்தின் பக்கச்சுவற்றில் அகத்திய மகரிஷி ஈசனை பூஜிக்கும் புடைப்புச் சிற்பம் தல வரலாற்றுக்குச் சான்றாக உள்ளது. இடப்புறம் தல கணபதி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். தென்முக வாயிலின் முன்பு முக மண்டபம் தூண்கள் கொண்டுள்ளது.

உள்ளே மகாமண்டபம். இங்கே நடராஜர் – சிவகாமியுடன் ஏனைய உத்ஸவத் திருமேனிகளும் வைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபச் சுவற்றின் உள்ளும், வெளியுமாக சிற்சிறு புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக வடிக்கப்பெற்றுள்ளன. அடுத்ததாக, அந்தராளம், கருவறை. கருவறையினுள் கருணையே வடிவாய் அருட்காட்சியளிக்கின்றார் ஸ்ரீ அகத்தீஸ்வரர். மேற்கே திருமுகம் காட்டி அருள்புரியும் பெருமான் திருத்தாள் பணிந்து ஆலய வலம் வருகின்றோம்.

நந்தி மண்டபத்தின் இடப்புறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது. அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நின்ற கோலத்தில் எழில் சிந்துகின்றாள். இறைவனும் –  இறைவியும் இங்கு எதிரெதிரே மாலை மாற்றும் கோலத்தில் வீற்றருளுவதால் திருமண வரமருளும் திருத்தலமாக இது திகழ்கின்றது.

அம்பாள் சன்னிதிக்கு பக்கத்தில் கந்தன் தனது துணைவியரோடு திருவருள் புரிகின்றார். ஆலயத்தின் ஈசான மூலையில் பைரவர் அற்புதமாகக் காட்சி நல்குகின்றார். கிழக்கு பாகத்தில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அக்னி திசையில் தல விருட்சமான வில்வமரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. அருகே சமயகுரவர்கள் தனிச் சன்னிதி கொண்டுள்ளனர். ஆலயம் சிறிது எனினும், மிகவும் சீருடன் திகழ்கின்றது. ஆலயத்தின் இடப்பக்கத்தில் தல தீர்த்தமான அகத்திய தீர்த்தம் அற்புதமாக உள்ளது. கோயிலில் தினசரி இரண்டு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன.

பிரதி சோமவார பூஜை, பிரதோஷங்களோடு சிவராத்திரி, நவராத்திரி, சஷ்டி, ஆருத்ரா, கார்த்திகை தீபம், குரு பூஜைகள் ஆகியவை சிறப்புற நடத்தப்படுகின்றன. பங்குனி உத்திரம் தொடங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

கலைத்துறையில் சிறந்திடவும், கல்வியில் மந்தநிலை மாறிடவும், தள்ளிக்கொண்டே போகும் கல்யாணம் விரைவில் முடியவும் இங்கு ஸ்வாமி – அம்பாளுக்கு சுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாத்தி, வில்வத்தால் அர்ச்சனை செய்ய, சிறந்த பலன் உண்டு என்பது பக்தர்களின் அனுபவ வாக்காகும்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள இந்த ஊர் செய்யாறு – வந்தவாசி பேருந்து சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 7 முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com