சூல வடிவில் துர்கை!

சூல வடிவில் துர்கை!
Published on

– டி.எம்.இரத்தினவேல்

த்தர்கண்ட் மாநிலத்தின் இயற்கையெழில் சூழ்ந்த பசுமையான பகுதி உத்தரகாசி. இத்திருத்தலத்தில் பாயும் புண்ணிய நதியான பாகீரதி நதிக்கரையில் அற்புதமாக அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில். தேவபுரி, தேவபூமி என புராணங்கள் போற்றும் சிறப்புடையது இந்தத் திருத்தலம். அவதார புருஷர்
ஸ்ரீ பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தத் திருக்கோயிலுக்கு அரிச்சந்திர மகாராஜா ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளார். பிற்காலத்தில் முகலாயர்களின் படையெடுப்பால் இவ்வாலயத்தின் பல பகுதிகள் சிதைக்கப்பட்டதோடு, ஆலயச் சொத்துக்கள் பலவும் பறி போயின. இதனால் பூஜையின்றி ஆலயம் பரிதாப நிலையில் இருந்தது.

கி.பி.1857ல் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சுதர்சன்ஷா என்ற அரசனின் மனைவி ராணி காணேதி என்பவளின் கடும் முயற்சியால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்று விளங்கியது. வழக்கம் போல் வழிபாடுகளும் துவங்கின.

முகலாயரின் படையெடுப்புக் காலத்தில், இந்தத் திருக்கோயிலின் மூலவர்
ஸ்ரீ விஸ்வநாதரின் லிங்கத் திருமேனியை இக்கோயில் பணியாளர்கள், 'ஞான வாவி' என்கிற கிணற்றில் பாதுகாப்புடன் ஒளித்து வைத்திருந்தனர். ஆலயம் புதுப்பிக்கப்பட்டதும் மூலவரை எடுத்து வந்து மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காசி மாநகரில் எப்படி கங்கைக் கரையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் கொண்டிருக்கிறாரோ அதேபோன்று, இங்கே உத்தரகாசியில் பாகீரதி நதிக்கரையில் ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

'உத்தர காசி' எனப்படும் இந்தப் புனிதத் தலமும் காசியைப் போல் மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. ஸ்கந்த புராணம் இந்தத் தலத்தின் மகிமையை பெரிதும் போற்றுகிறது.

இத்தலத்தின் இறைவி அம்பிகை விசாலாட்சி மூலவர் சன்னிதிக்கு நேர் எதிரில் 'சூல' வடிவில் பிரம்மாண்டமாகக் குடிகொண்டிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

இந்தத் திரிசூலம் பாதி செம்பினாலும், பாதி இரும்பினாலும் ஆனதாகும். சுமார் 26 அடி உயரமும், எட்டரையடி சுற்றளவுடனும் கூடியது இந்த திரிசூலம். இதையே அன்னை துர்கை என்றும் சக்தி என்றும் பக்தர்கள் பக்தியோடு வழிபடுகின்றனர். துர்கையாக அவதரித்த இந்த அம்பிகை, இந்தப் பெரிய சூலாயுதத்தைக் கொண்டு அசுரரை வதைத்தாள் என்றும், வதம் முடிந்ததும் திரிசூல வடிவிலேயே அம்பிகை இங்கு குடிகொண்டு விட்டாள் என்பதும் இத்தல வரலாறு கூறும் செய்தியாகும்.

மார்கண்டேய முனிவர், ஆதிசங்கர பகவத்பாதர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், குருநானக் உட்பட பல மகான்கள் இத்தலம் வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டுச் சென்றுள்ளனர். விசேஷ காலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கே வருகை தந்து உத்தரகாசி நாதரை வழிபட்டுச் செல்கிறார்கள். செவ்வாடையணிந்து சூல வடிவில் காட்சி தரும் அம்பிகையையும் தரிசித்து அருள் பெற்றுத் திரும்புகிறார்கள். இங்கு ஓடும் பாகீரதி நதிக்கரையில் பிதுர் கடன்களையும் செய்து முடிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com