0,00 INR

No products in the cart.

அருளைப் பெருக்கும் ஆடி கிருத்திகை!

– தனுஜா ஜெயராமன்

முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும் அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆடிக் கிருத்திகை திருநாளே. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்ததாகும். கார்த்திகை என்பது முருகனின் சிறப்புப் பெயரான கார்த்திகேயன் என்பதனைக் குறிக்கும். அதுவே கிருத்திகை என்ற சொல்லாக மருவியது.

சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த தினமே ஆடி கிருத்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். இந்தக் கார்த்திகைப் பெண்களைப் போற்றும் விதமாகவே ஆடிக் கிருத்திகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆறு கார்த்திகைப் பெண்களும் கிருத்திகை நட்சத்திரங்களாக வானில் ஒளி வீசுகிறார்கள். இதன் காரணமாகவே, ஆறு என்ற எண் முருகப்பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனது தாயினும் மேலாக முருகன் வழிபடும் கார்த்திகைப் பெண்களுக்கான நன்னாளில் கந்தபெருமானை வழிபட்டால் சகல சீரும் சிறப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். ‘சரவண பவ’ என்னும் மந்திரச்சொல் ஆறு என்ற சிறப்பைப் பெறுகிறது. சூரனை அழித்து தேவர்களைக் காத்த முருகப்பெருமான் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

லகம் முழுவதும் உள்ள முருகன் தலங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகச் சிறப்பாக நடைபெறும். முருகன் தமிழ் கடவுள் என்பதால் தமிழகத்தில், குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் ஆடிக் கிருத்திகை விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி எடுத்துச் செல்லுதல், அலகு குத்துதல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி முருகனை வழிபடுகின்றனர். ஆடி கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனைகள், அபிஷேக ஆராதனைகள், உத்ஸவம், ஊர்வலம், தெப்போத்ஸவம் என வழிபாடுகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாத கிருத்திகை தொடங்கி, தை மாத கிருத்திகை வரை விரதமிருந்து பக்தியுடன் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி முருகப்பெருமான் வழிபடும் பக்தர்களும் உண்டு.  கர்ம வினைகள் நீங்க ஆடி கிருத்திகை அன்று முருகனை வழிபடுவது சிறப்பு.

ஆறு படை வீடுகளில் திருத்தணியில் ஆடிக் கிருத்திகை மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மலைகளிலே சிறந்தது அருள்மிகு ஶ்ரீ சுப்ரமண்ய சுவாமி குடியிருக்கும் திருத்தணிகை மலையே என குறிப்பிடுகிறது கந்த புராணம். அங்குள்ள மிகப்பெரிய சரவண பொய்கை தீர்த்த குளத்தில் தெப்போத்ஸவ விழா மூன்று நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும். அந்த நாட்களில் முருகப்பெருமான் காவடி மண்டபத்திலிருந்து வள்ளி, தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமண்ய சுவாமியாக தேரில் பவனி வந்து சரவணப்பொய்கை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். இதனைக் காண தமிழகம் மட்டுமல்லாது; ஆந்திரா, கர்நாடகா என வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிகைக்கு வருகை தருவர்.

டிக் கிருத்திகை திருநாளில் நாள் முழுவதும் உண்ணா விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் பேரருள் பெற்று பெருவாழ்வு வாழலாம். குறிப்பாக, உப்பில்லா உணவினை அன்று உண்ண வேண்டும் என்பது விரத முறைகளில் ஒன்றாகும். இந்த தினத்தில் கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல்வகுப்பு போன்றவற்றை பாராயணம் செய்து சரவண பெருமானை வழிபட்டால் வேண்டிய பலன்களைப் பெறலாம். ஆடிக் கிருத்திகை விரதமிருப்பதால் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதனால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். திருமணத் தடைகள் அகலும். குழந்தைப் பேறு வேண்டுபவர்க்கு பாலதண்டாயுதபாணி அருளால் புத்திர பாக்கியம் கிட்டும்.
சொந்த வீடு அமையும். இன்று அதிகாலை நீராடி, முருகனுக்கு பாலபிஷேகம் செய்து சஷ்டி கவசம் சொல்லி அவல் பாயசம் நிவேதனம் செய்து வழிபட, குடும்பம் விருத்தியடையும். முருகனுக்கு செவ்வரளி மலர் சாத்தி, சர்க்கரை பொங்கல், பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபட, நினைத்த காரியம் கைகூடும்.

கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகும். சூரியன் ஆரோக்கியத்தின் அதிபதி. ஆடிக் கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நீடித்த ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது. இந்நாளில் விரதமிருந்து வழிபடுபவர்க்கு அழகும் அறிவும் பொலிவான தேகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி கிருத்திகை, சூரியன் தென்திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாய காலத்தில் வருகிறது. இக்காலத்தில் பகல் காலம் குறைந்து, இரவின் காலம் நீடித்திருக்கும். மக்களும் தங்களது வாழ்வின் துன்பமெனும் இருள் நீங்கி, வெளிச்சம் பெற இக்காலத்தில் முருகப்பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்து, கந்தனின் அருளைப் பெறலாம். குடும்பத்தில் செல்வம் தழைத்து, மங்கலம் பெருக ஆடி கிருத்திகை விரதமிருந்து கார்த்திகேயனை வணங்குவோம்!

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பூரத்தில் உதித்த புகழ்க்கொடி!

0
- ரேவதி பாலு தென்பாண்டி நாட்டில் வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்பவர் இருந்தார்.  திருமாலிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட பக்திமான் ஆதலால், பெரியாழ்வார் என்று இவர் அழைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு...

மூன்று வகை மனிதர்கள்!

0
- ஆர்.சுந்தரராஜன் ஒருசமயம் பகவான் மகாவிஷ்ணு கருடனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கருடனிடம், “இந்த உலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர் என்று உனக்குத் தெரியுமா?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். அதனைக் கேட்ட...

கண் திருஷ்டியை விலக்கும் தாந்த்ரீக பரிகாரம்!

- எம்.ராஜதிலகா ‘கல் அடி பட்டாலும் படலாம்; கண் திருஷ்டி படவே கூடாது’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். கணவன், மனைவி சந்தோஷமாக வெளியே சென்று வருவோம். சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வோம்....

கதம்பமாலை

0
குரல் வளம் அருளும் ஈசன்! கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கிலும், சுவேத நதி எனப்படும் வெள்ளாற்றின் தெற்கிலும் அமைந்துள்ளது ராஜேந்திரபட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தின் புராண காலப் பெயர் சுவேதார்க்கவனம்...

போனாலு பண்டிகை!

0
- ஆர்.சாந்தா ‘போனம்’ என்னும் சொல் சாப்பாட்டைக் குறிக்கும். ‘போனாலு’ எனப்படும் இந்தத் திருவிழா தெலங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பிரசித்திப் பெற்ற திருவிழாவாகும். கி.பி.1813ல்...