0,00 INR

No products in the cart.

கேள்வி நேரம்

– ஞானகுரு

கால் – உடல் – தலை இல்லாத தினங்கள் என்று கூறுகிறார்களே… இவற்றை அறிவது எப்படி?

– என்.கோவிந்தசாமி, கும்பகோணம்

பஞ்சாங்கத்தில் வரும் தினசரி நட்சத்திரங்களை வைத்து இதனை அறிய வேண்டும். இந்த நாட்களில் சீமந்தம், வளைகாப்பு, பெயர் சூட்டுதல், புதிய வீடு கட்டும் முயற்சியைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அதில் இடையூறுகள் வரக்கூடும் என்று பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இத்தினங்களில் பெண்கள் கணவரோடு சேர்வதால் புத்திர லாபம் அடைய மாட்டார்கள். இந்நாட்களில் யாத்திரைகள் மேற்கொண்டால் மழை, வெள்ளம், கடும் குளிர், வெயில் இயற்கைச் சீற்றங்களால் தடைகள் உண்டாகக் கூடும் என்று எச்சரிக்கை செய்கிறது பஞ்சாங்கம். இதற்காக ஒரு செய்யுளே கூறப்பட்டுள்ளது….

‘காலற்ற வுடலற்றன தலையற்ற நாளிற்
கோலக்குய மடைவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக் கொரு மனை மாளிகை கோலினது பாழார்
ஞாலத்தவர் வழி போகினு நலமெய்தி டாரே!’

காலற்ற நாட்களாக  கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வருகிற நாட்களும், உடலற்ற நாட்களாக மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரம் வருகிற தினங்களும், தலையற்ற நாட்களாக புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரம் வருகிற தினங்களும் சொல்லப்படுகின்றன. மற்ற நாட்களில் சுபச் செயல்களைச் செய்யலாம். ஆனாலும், இந்த மூன்று வகை நாட்களை சுப நாட்களிலிருந்து முற்றிலும் விலக்கிவிடக் கூடாது. திதி வாரம் – யோகம், கரணங்களுடன் சேர்த்து அறிந்து மற்ற சுப நிகழ்வுகளைச் செய்யலாம் என்கிறது பஞ்சாங்கம்.

சூதகம் என்பதற்கும் தீட்டு என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

– சி.மணோன்மணி, திருச்சி

தற்போதைய காலத்தில் தீட்டுக் காப்பதை அவமதிப்பதையும், சூதகம் உண்டானால் அதைப் பற்றி மதிப்பளிக்காமல் விடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். உறவினர் ஒருவருக்கு ஆண் பிள்ளை பிறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாட்கள் தீட்டு என்ற சூதகம் உண்டு. அதனிடையில் சிராத்தமோ, சுப நிகழ்வோ வந்தால் நான்காம் நாள் புண்யாகவாசனம் (வருண கும்ப பூஜை) செய்து நீர் தெளித்துவிட்டுச் செய்ய வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் பங்காளிகளுக்குத் தீட்டு என்னும் சூதகம் இல்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தாலும் இங்குள்ள எட்டு வகையினருக்கு சூதகத் தீட்டு முறை உண்டு. அவை:

  1. குழந்தையின் சகோதரர்கள், 2. மூத்தாள் அல்லது இளையாள் வயிற்றில் பிறந்த குழந்தைகள், 3. சகோதரரின் மனைவிகள், 4. தந்தை, சிறிய தந்தை, பெரிய தகப்பனின் பிள்ளை, 5. தாத்தா, தந்தையின் தந்தை, 6. தந்தை வழியின் சகோதரர்கள் மூன்று தலைமுறை, 7. தந்தை வழி தந்தையின் உடன்பிறந்தவர்கள், 8. அவர்களது மனைவிகள் ஆகிய அனைவருக்கும் பத்து நாட்கள் சூதகம் உண்டு. அதாவது, உயிர் நீத்தாருக்காகக் காப்பது தீட்டு. சுபம் நடந்த வீட்டில் காப்பது சூதகம். இதை விருத்தி என்றும் சில சமூகத்தார் குறிப்பிடுவர்.

பிரசவம் ஆன இடத்தில் சூதகம் பத்து நாட்கள் இருப்பினும், ஆணின் அப்பா அம்மா ஆகியோர் மூன்று நாட்கள் சூதகத் தீட்டு காக்க வேண்டும். இக்காலத்தில் சொத்துப் பிரிப்பதில் சண்டை ஏற்படுவதாலும், பங்காளிகளில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் மரியாதை பிரச்னையாலும் தீட்டு – சூதகம் காப்பதை மறந்து விடுகிறார்கள். ஜனன, மரண ஆசெளச விதி இதை விளக்குவதை எல்லோரும் அறிய வேண்டியது அவசியம்.

எங்கள் பழைய வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறுகிறார் ஆன்மிக நண்பர் ஒருவர். ஒரு இடத்தில் புதையல் இருப்பதை அறிய அறிகுறி ஏதாவது உண்டா?

– சண்முகம், இளையாத்தங்குடி

உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாக யாராவது கூறுவதை நம்பி, ஏதாவது செய்து பிரச்னையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படி நம்பி பலி கொடுத்து, பணம் செலவு செய்து ஏமாந்து நிற்பவர்கள் ஏராளம். புதையல் இருக்கிறது என்று அறிய முற்பட்டால் பழைய வீட்டை தரைமட்டமாக இடித்துவிட்டு மூன்று மாதங்கள் வரை மஞ்சள் நீரை ஒருமுறை தெளித்து விட்டுவிட வேண்டும். ஒரு வீட்டு மண்ணுக்கடியில் புதையல் அல்லது அசுபமான வேறு பொருட்கள் இருந்தால் அந்த வீடு நிம்மதி இல்லாமல் காணப்படும். புதையல் இருக்கிறது என்றால், மனையடி சாஸ்திரப்படி அங்கு வசிப்பவர்களின் தலையை காக்கைகள் அடிக்கடி கொத்தும். அதோடு கரைந்து மற்ற காக்கைகளை அழைக்கும். மேலும், பசுக்கள் குறிப்பிட்ட அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். இதன் மூலம் அந்த இடத்தில் புதையல், கற்படிமங்கள் இருப்பதை அறியலாம். கற்பனையாகச் சொல்பவர்களின் பேச்சைக் கேட்டு எதற்கும் முயல வேண்டாம். அதோடு, பலி கொடுத்தால் புதையல் வெளிப்படும் என்பதும் தவறான செய்தி. அது மட்டுமின்றி, சிலர் புதிதாக வாங்கிய மனையிலோ அல்லது புதிய வீட்டிலோ கோழியை பலி கொடுப்பார்கள். புது வீட்டில் ரத்தம் படுவது கூடாது. வாஸ்து பூஜை செய்து வீடு கட்டும் முயற்சியில் இறங்குங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் பணம், காசு உங்களைத் தேடி வரும்.

முருகனுடைய வேலுக்கு, ‘வெற்றி’ என்று அடைமொழி வந்ததன் காரணம் என்ன?

– கே.நீலவேணி, மானாமதுரை

‘வெல்’ என்ற வினைச்சொல்லே, ‘வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகியது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும். முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேலாயுதம். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால் அதற்கு, ‘வெற்றி வேல்’ என்ற பெயர் உண்டாயிற்று. முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல் விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. வேலைப் பற்றித் தனித்தனியாகப் பாடிய அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக்கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார். முருகனை குலதெய்வமாகக் கொண்டு வழிபடுபவர்களும் இஷ்ட தெய்வமாக வழிபடும் பக்தர்களும் பக்தி கோஷம் இடுகையில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!’ என்றுதான் முழக்கமிடுகின்றனர். ‘வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ என்று நம்பும் முருக பக்தர்கள், வேல் இருந்தால் மனதில் பயம் தோன்றாது என்று உறுதிபட நம்புவதால்தான் வேலை சக்தி என்றும் குறிப்பிடுகிறது கந்த புராணம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூன்று வகை மனிதர்கள்!

0
- ஆர்.சுந்தரராஜன் ஒருசமயம் பகவான் மகாவிஷ்ணு கருடனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கருடனிடம், “இந்த உலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர் என்று உனக்குத் தெரியுமா?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். அதனைக் கேட்ட...

கண் திருஷ்டியை விலக்கும் தாந்த்ரீக பரிகாரம்!

- எம்.ராஜதிலகா ‘கல் அடி பட்டாலும் படலாம்; கண் திருஷ்டி படவே கூடாது’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். கணவன், மனைவி சந்தோஷமாக வெளியே சென்று வருவோம். சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வோம்....

கதம்பமாலை

0
குரல் வளம் அருளும் ஈசன்! கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கிலும், சுவேத நதி எனப்படும் வெள்ளாற்றின் தெற்கிலும் அமைந்துள்ளது ராஜேந்திரபட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தின் புராண காலப் பெயர் சுவேதார்க்கவனம்...

போனாலு பண்டிகை!

0
- ஆர்.சாந்தா ‘போனம்’ என்னும் சொல் சாப்பாட்டைக் குறிக்கும். ‘போனாலு’ எனப்படும் இந்தத் திருவிழா தெலங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பிரசித்திப் பெற்ற திருவிழாவாகும். கி.பி.1813ல்...

ஆடித் திங்கள் பரிகாரமும் வழிபாடும்!

0
- அபர்ணா சுப்ரமணியம் நோய் நீக்கும் தாள்கறி நிவேதனம்! கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் பஞ்சாயத்தில் அமைந்த மருத்தோர் வட்டம் என்ற ஊரில் சங்கு சக்ரதாரியாக அமிர்தகும்பம் கையிலேந்தியவாறு காட்சியளிக்கும் தன்வந்த்ரி மூர்த்தி கோயில்...