0,00 INR

No products in the cart.

இரட்டைக் காளியாக தாரா தாரணி தேவி!

வட இந்திய தச தேவியர் கோயில்கள் – 10

– ராஜி ராதா

டிசாவின் கஞ்சாம் ஜில்லாவில் பெர்காம்பூரிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் குமாரி குன்றின் உச்சியில் அமைந்துள்ளது தாரா தாரணி கோயில். குன்றின் அடியில் குல்யா நதி சலசலத்து ஓடுகிறது. சக்திக்கு இங்கே தாரா, தாரணி என இரட்டைப் பெயர். ஆனால், போற்றப்படுவது காளியாக! அது ஏன்? தெரிந்து கொள்வோமா?

சிவபுராணம், காலிகாபுராணம் மற்றும் பிரஹத் சம்ஹிதா போன்றவை ஆதி சக்தி பீடங்களைப் பற்றி எழுதியுள்ளன! மேலும் அவை நான்கு எனவும் கூறுகின்றன.

  1. விமலா தேவி – அம்பிகையின் பாதம் விழுந்த இடம்! – இது புரி ஜகந்நாதர் கோயிலுக்குள் உள்ளது.
  2. பெர்காம்பூர் தாரா தாரணி – இது தேவியின் மார்பகம் விழுந்த இடம்!
  3. அஸ்ஸாமின் காமாக்யா – இது அம்பிகையின் யோனி விழுந்த இடம்.
  4. கல்கத்தாவின் காளிகாட் காளி – இது தேவியின் முகம் விழுந்த இடம்.

இந்நான்கு கோயில்களுமே காளி பீடங்களாகவும் வணங்கப்படுகின்றன. பிறகு சிதறிய பாகங்களையும் சேர்ந்துதான் பிற்காலத்தில் 51 சக்தி பீடங்கள் மற்றும் 26 உப பீடங்கள் எழுந்தன என சக்தி உபாசகர்கள் கூறுகின்றனர்.

குல்யா நதிக்கு, ‘ருசி கல்யாணி’, சரஸ்வதி அதாவது கங்கைக்கு மூத்தவள் என்ற மற்றொரு பெயரும் உண்டு! இதேபோல் குமாரி குன்றை தாரணி குன்று, தாரணி பர்வதம், பூர்ணகிரி எனவும் அழைக்கின்றனர்! சத்ய யுகத்திலேயே இந்தக் கோயில் இருந்துள்ளது என இக்கோயில் வரலாறு கூறுகிறது.

காபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் யுத்தம் துவங்குவதற்கு முன் காளி தேவியிடம் பிரார்த்தனை செய்துகொள்ளச் சொன்னதாக வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் வியாபாரத்துக்குப் பயணிப்பவர்கள், இந்த அம்மனிடம் வேண்டிக்கொண்டுதான் செல்வர் என்கிறது தல வரலாறு! கடற்கரையை ஒட்டியே இந்தக் கோயில் அமைந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்!

கலிங்கப் பேரரசு இருந்த காலத்திலேயே இந்தக் கோயில் இருந்துள்ளது. யுத்தக் களத்தில் மனம் மாறிய அசோகர் புத்த மதத்தைத் தழுவியதும், பிறகு அதனை உலகம் முழுவதும் பரவிடச் செய்ததும் தெரிந்த விஷயம்! இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தாரா தாரணியை அசோகருக்குக் கைவிட மனது இல்லை! இதனால் தாரணியை புத்த மதப் பெண் தெய்வமாக மாற்றி வழிபடச் செய்தான். இதனால் புத்த மதம் பரவியுள்ள இடங்களிலும் தாரணி வழிபாட்டைக் காணலாம்.

னி, கோயிலின் வரலாறுக்குச் செல்வோம். இமாலய அரசன் தட்சனின் மகள் தாட்சாயினி. அதே மலையில் கடும் தவம் செய்யும் சிவன் மீது அவளுக்கு ஆசை! அதை தந்தையிடம் கூற, தட்சன் மறுக்கிறான்! ஆனாலும், தாட்சாயினி கட்டாயப்படுத்த வேறு வழியின்றி சிவனை திருமணம் செய்துத் தருகிறான்! அதேசமயம் தட்சனுக்கு மாப்பிள்ளை சிவன் மீது வெறுப்பு.

இதனிடையே தட்சன் பெரிய யாகம் ஒன்றைச் செய்கிறான். ஆனால், அதற்கு சிவனுக்கு அழைப்பில்லை. இதில் தாட்சாயினிக்கு ஏக வருத்தம்! அதனால் தந்தையிடம் நியாயம் கேட்க வருகிறாள். தந்தையோ, அவளையும் சேர்த்து அவமதித்து அனுப்புகிறான். நொந்துபோன தாட்சாயினிக்கு, சிவனிடம் திரும்பிச் செல்ல மனமில்லை. இதனால் கடும் கோபம் கொண்டு எரிந்து கொண்டிருந்த யாகக் குண்டத்தில் குதித்து விடுகிறாள்.

நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிவன், அங்கே வந்து அக்னியில் விழுந்த தாட்சாயினியை தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனைக் கண்டு மனம் பொறுக்காத மகாவிஷ்ணு, தன்னுடைய சக்கராயுதத்தால் தாட்சாயினியை பல பகுதிகளாக வெட்டி பூமியில் விழச் செய்கிறார். இதில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை பாதம், மார்பகம், யோனி மற்றும் முகம். இந்த நான்கு பீடங்கள் வணங்கப்படும் இடமே ஆதிபீடங்களாகக் கருதப்படுகின்றன. பின்னால் சிதறிய பாகங்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு அவையும் ஆதிசக்தி பீடங்களுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. காலம் காலமாக வழிபடப்பட்டு வந்த தாரா தாரணி அம்பிகை வழிபாடு, ஒரு கட்டத்தில் நின்றுபோனது.

னி, சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கதைக்கு வருவோம். காரிடா வீரா என்ற சக்தி உபாசகர் ஒருவர் இப்பகுதியில் வசித்து வந்தார். அவருக்குக் குழந்தை பாக்கியமில்லை. அவரோ, சக்தியை சபிப்பதற்கு பதில், “அம்மா…உன்னை நான் இப்பவும் நம்புகிறேன்! நல்லது நடந்தே தீரும்! அதுவரை காத்திருப்பேன்” எனத் தொடர்ந்து வணங்கி வந்தார். அவரது வழிபாடு சக்தியின் மனதை வருட, ஒரு நாள் இரவு காரிடா வீராவின் கனவில் வந்த அம்பிகை, “உனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கும்” எனக் கூறி மறைந்தாள்!

நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த உபாசகருக்கு, கனவில் வந்தபடியே இரு பெண் குழந்தைகள் இரட்டையராகப் பிறந்தனர்! அவர்களுக்கு தாரா, தாரணி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்! நன்கு வளர்ந்த பின், ஒரு நாள் தந்தையுடன் குமாரி குன்றின் மீது இருவரும் ஏறினர்! உச்சிக்குச் சென்றதும் திடீரென காணாமல் போயினர். திகைத்த உபாசகர், எங்கு தேடியும் கிடைக்காததால் மனம் நொந்து வீடு திரும்பினார்.

மீண்டும் அன்று இரவு அவரது கனவில் தோன்றிய சக்தி தேவி, “இனி தாரா, தாரணி கிடைக்க மாட்டார்கள். மாறாக, என்னுடைய அம்சமான இரு பிண்டிகள் இங்கு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும். தேடிக் கண்டுபிடித்து அவற்றை பிரதிஷ்டை செய்” எனக் கூறி மறைந்து விட்டாள்.

தான் கண்ட கனவை காரிடா வீரா உள்ளூர் மன்னரிடம் கூற, அவர் வீரர்களின் உதவியுடன் இரு பிண்டிகளும் மண்ணில் புதைந்திருப்பதைக் கண்டுபிடித்து, சக்தி தேவியின் விருப்பப்படியே அங்கு பிரதிஷ்டையும் செய்தார். பிறகு அது பல முறை புனருத்துவமும் பெற்றது.

இன்று தாரா தாரணி கோயிலை, ‘தாரா டெவலப்மெண்ட் போர்டு’ பராமரித்து வருகிறது. கோயிலுக்குச் செல்ல மூன்று வழிகள் உண்டு. 1. வாகன பாதை வழியாக சென்று உச்சியை அடையலாம், 2. ரோப் கார் வசதி உண்டு 3. படிகள் ஏறியும் கோயிலை அடையலாம்! படி வழி சென்றால் நடு நடுவே தங்கிச் செல்ல ஏதுவாய் மண்டபங்கள், சிறு பரிவார சன்னிதிகள் உண்டு! வழியில் குளிக்க சூடு நீரூற்றும் இருக்கிறது!

ரோப்பில் ஏறிச் சென்று திரும்ப 60 ரூபாய் கட்டணம்! காரில் பயணித்தால் ஏறி, இறங்க 50 ரூபாய் கட்டணம். இவற்றையெல்லாம் கடந்து கோயிலை நெருங்கினால் நம்மை ஒரு அலங்கார வளைவு வரவேற்கிறது! ஓடிசாவில் பல கோயில்களில் நுழையும் இடத்தில் இத்தகைய அலங்கார வளைவுகளைப் பார்க்கலாம். கோயிலின் வாசலுக்கு முன் கடைகள் உள்ளன. அங்கு சிவப்பு நிற ஜிலு ஜிலு துணி முதல் குடிக்க தண்ணீர் வரை அனைத்தும் கிடைக்கின்றன.

கோயில், இரண்டு முன் மண்டபங்கள் மற்றும் கருவறை என்ற அளவில் அமைந்துள்ளது! முதல் இரு முன் மண்டபங்கள் மீதும் பிரமிட் வடிவில் விமானம் உள்ளது. அதற்குக் கீழே வெளிப்புறம் சுற்றி, இரு அடுக்கில் ஏராளமான அழகான சிலைகளைச் சுற்றி வந்து தரிசிக்கலாம். எல்லாமே கண்களைக் கவரும் விதத்தில் உள்ளன. கருவறையின் நடுவில் காளி தேவி நாக்கை வெளியே நீட்டியபடி, நாலு கைகளிலும் ஆயுதங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பின்புறம் அலங்கார வளைவு அமைத்து, அதனை சிவப்புத் துணியால் இணைத்து காளிக்கு மேலும் கம்பீரம் ஏற்படுத்தியுள்ளனர். பூக்களுக்குப் பஞ்சமேயில்லை. காளி தேவி, குரூர தோற்றத்தோடு காட்சி தருகிறாள்! கீழே தேவியின் இருபுறமும் கண்டெடுக்கப்பட்ட இரு பிண்டிகளின் மீதும் வெள்ளி முகங்களைப் பொருத்தியுள்ளனர்! அதுவே தாரா, தாரணி எனவும் கூறுகின்றனர்.

சக்தி தேவி கோயிலில் எப்போதும் சரஸ்வதி, லட்சுமி, பைரவருக்கு  இடமுண்டு. மற்ற சக்தி பீடங்களைப் போன்று இங்கும் பக்தர்கள் வேண்டிக்கொண்டு ஜிலு ஜிலு சிவப்பு துணியை மரம் முழுவதும் கட்டியுள்ளனர். கோரிக்கை நிறைவேறியதும் அதனை கழட்டி அருகில் வைத்து விடுகின்றனர். இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷம்! தவிர, சைத்ர மாத (மார்ச் 15- ஏப்ரல் 15) செவ்வாய்க்கிழமைகள் மிகவும் விசேஷம்! சன்னிதி முதல் நாள் இரவு 1 மணிக்கு திறக்கப்பட்டு செவ்வாய் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். அப்போது லட்சக்கணக்கில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நான்கு வாரமும் கடைகளுடன் இந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்தக் கோயிலில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மொட்டையடிப்பது விசேஷம். மேலும், இக்கோயிலில் சங்கராந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு வியாபாரிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, அம்மன் அருளால் குழந்தைப் பிறந்தது. அதற்கு நன்றியாக அந்த வியாபாரிதான் மலைக்கு 999 படிகளை வெட்டி, மக்கள் நடந்து சென்று தரிசிக்க ஏற்பாடு செய்தார். கஞ்சாம் மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாக தாரா தாரணி காளி தேவி விளங்குவதால், செவ்வாய் மற்றும் வாரக் கடைசி நாட்களில் கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. குரங்குகளின் தொல்லை அதிகமிருப்பதால் எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. கோயிலை தரிசித்து வெளியே வந்து சுற்றிப் பார்த்தால், நதி, மலை, காடு என மிக அழகாக இப்பகுதி காட்சி தரும்!

எப்படிச் செல்வது?: கோபால்பூரிலிருந்து 50 கி.மீ., புவனேஸ்வரத்திலிருந்து 174 கி.மீ., விசாகப்பட்டினம் வழியாகச் சென்றால் 240 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 6 முதல் 12.30 மணி வரை. மாலை 2 முதல் 8.30 மணி வரை.

(நிறைந்தது)

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

விநாயக சதுர்த்தியில் மூஷிக ஸ்தோத்திர வழிபாடு!

0
- பா.கண்ணன் விநாயகர் சதுர்த்தியின்போது கணநாயகனைப் போற்றி வணங்குகிறோம். அதேசமயம் அவரைச் சுமந்து செல்லும் வாகனமான மூஞ்சூறுவை நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவரது பல அரியச் செயல்களை நினைவு கூர்வதும் அவசியமே. அதுவே இந்த மூஷிக...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

கதம்பமாலை

0
- எஸ்.ஸ்ருதி மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார்! திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான முகூர்த்தம் நிச்சயமாவதற்கும், கல்வியில் சிறப்பதற்கும் வழிகாட்டுகிறார் மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார். அனுமனுக்கு இன்றளவும் தினமும் ஒவ்வொரு முகூர்த்த நேரத்திலும் வேதமா ஞானம் புகட்டி...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...