மன அமைதி தரும் சிந்தபள்ளி சாயிபாபா!

மன அமைதி தரும் சிந்தபள்ளி சாயிபாபா!
Published on

– வி.ரத்தினா

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில்  அமைதியும் பசுமையும் நிறைந்த ரம்யமான சூழலில் காட்சி தரும் சிந்தபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஷீர்டி பாபா ஆலயம். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழிலோடு அமைந்துள்ள பாபாவின் திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பாபா இங்கு எழுந்தருளிய விதம் வியப்பான ஒன்றாகும்.

கோயில்களே இல்லாத சிந்தபள்ளி கிராமத்தில் உரக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த தனுஜ்சயா என்பவருக்கு, ஷீர்டி போன்றே பாபாவுக்கு ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதைத் தனது நண்பர்களிடமும் கிராம மக்களிடமும் தெரிவிக்க, சில கிராமவாசிகள் தங்களது விவசாய நிலங்களை கோயில் கட்ட நன்கொடையாகத் தர முன் வந்தனர். தனுஜ்சயாவும் தனது சேமிப்பு மற்றும் அக்கிராமத்தில் நல்லெண்ணம் கொண்டவர்கள் கொடுத்த நன்கொடைகளை வைத்து பாபாவுக்கு ஒரு கோயில் கட்டும் பணியை 2005ஆம் ஆண்டு துவக்கினார். கோயில் கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறையால் கோயில் கட்டும் பணியைத் தொடர முடியாமல் பாதியில் முடங்கிப் போனது.

அப்போது ஒரு நாள் அவதூத் பாபா என்ற துறவி  தனஜ்சயாவின் இல்லத்திற்கு வருகை தந்தார். அவரிடம்  தனஜ்சயா பொதுமக்களின் நலனுக்காக சாயி பாபா கோயில் கட்டுவதற்கான தனது திட்டத்தை அவரிடம் விளக்கினார். அதைக்கேட்ட அவதூத் பாபா, தனுஜ்சயாவுடன் கோயில் எழும்ப இருக்கும் இடத்திற்குச் சென்று சிறிது பாலை ஒரு பானைத் தண்ணீரில் கலந்து அந்த நிலத்தில் தெளித்தார். அதோடு, 'ஒன்பது மாதங்களுக்குள் கோயில் கட்டப்படும்' என்று கூறியதோடு, பொதுமக்களை அணுகி நன்கொடைகளைப் பெற வேண்டும் என்று மேலும் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

னுஜ்சயாவும் உடனே ஒரு குழு அமைத்து நன்கொடை ரசீதுகளை அச்சிட்டு அமைதி மற்றும் நல்லிணக்கம் பெற பாபாவின் கோயில் கட்டுவதாக சாயி பக்தர்களை அணுகி தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டினார். என்ன அதிசயம்! இரண்டு மாதங்களுக்குள் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் மேல் பணம் சேர்ந்தது. விரைவாக பாபாவின் கோயில் கட்டும் பணி ஆரம்பமாகி ஒன்பது மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. கருவறையில் அமைந்த சாயிநாதரின் திருவுருவச் சிலை ஜெய்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டு புகழ் பெற்ற புஷ்பகிரி பீடாதிபதி அவர்களால் 2009ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோயிலின் மேல் தளத்தில் ஷீர்டி சாயி பாபாவின் திருவுருவமும், அருகில் விநாயகர், தத்தாத்ரேயர் மற்றும் சரஸ்வதியின் திருவுருவச் சிலைகளும் உள்ளன. துவாரகமாயி கீழ் தளத்தில் உள்ளது. கோயிலில் புனிதத் துனி எப்போதும் பக்தர்களால் ஏற்றப் படுகிறது. மேலும், கோயில் வளாகத்திற்கு முன்பு நடுவில் குழல் ஊதும் கிருஷ்ணனின் திருச்சிலையும் சுற்றிலும் பசுக்களும் உள்ள கோசாலையை பக்தர்கள் தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலில் விநாயகச் சதுர்த்தி, தசரா, தத்தர் ஜயந்தி, ஸ்ரீராம நவமி போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஷீர்டிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து பாபாவை தரிசித்து அவரது ஆசியைப் பெறுகின்றனர்.

அமைவிடம்: ஹைதராபத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் நாகார்ஜுனா சாகர் அணைக்குச் செல்லும் வழியில் சிந்தபள்ளி பாபா ஆலயம் உள்ளது. ஹைதராபாத் மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.

தரிசன நேரம்: காலை 5 முதல் இரவு 10 மணி வரை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com