ஆயர்குல அணிவிளக்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன்!

ஆயர்குல அணிவிளக்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன்!

லகின் ஏழு முக்தித் தலங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்த மதுராவும் ஒன்று. ஏறக்குறைய 2.5 மில்லியன் அளவுக்கு ஜனத்தொகை கொண்ட நகரமாக இது விளங்குகிறது. கண்ணன் அவதரித்த ஜன்ம தலம்தான் மதுரா. மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இது இருந்தது. அந்த வம்சத்தினரில் குறிப்பிடத்தக்க மன்னன் கம்சன். இவன் கண்ணனின் தாய்மாமன் ஆவான்.

ராமாயணத்தில் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ராமரின் ஆணைப்படி சத்ருக்னன், லாவணாசுரன் என்ற அரக்கனை வீழ்த்தினான். யமுனை நதிக்கரையில் அர்த்த சந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னன் ஆண்ட பிறகு, மதுரா நகரம் யாதவர்கள் வசமாகிறது. வசுதேவர் பரம்பரை இந்நகரை ஆண்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

புருரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனாகிய அயுவினால் உருவாக்கப்பட்டதுதான் மதுரா என்றும் புராணங்கள் சொல்கின்றன. கி.மு. 1600களில் ஆண்ட மது என்ற மன்னனின் பெயரால் இந்நகர் மதுரா என அழைக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். ‘மெதோரா’என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் என்ற வரலாற்றாய்வாளர் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி மதுவனம் எனப்பட்டது. பின்னர் மதுபுரா என்று அழைக்கப்பட்டு இப்போது மதுரா ஆகி நிற்கிறது.

கண்ணன் பிறந்த மதுரா நகர் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழவார், நம்மாழ்வார் ஆகியோரால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய க்ஷேத்ரமாகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகாநாதர் மற்றும் மதுராநாதர் ஆலயங்கள்தான் இருக்கின்றன.

‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.’

என்று ஆண்டாள் திருப்பாவையில் அகம் மகிழ வாயாற வாழ்த்திய திருத்தலம் வடமதுரை.

பரபரப்பான இந்தக் கோயில் வீதியில் மிக அதிகப்படியான பாதுகாப்பு. பல மாநிலங்களையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் கைகளில் அதிநவீனத் துப்பாக்கிகளோடு காவல் இருக்கிறார்கள். ஆலயத்துக்குள் நுழையும் அனைத்து பக்தர்களையும் ஆண் மற்றும் பெண் காவலர்கள தனித் தனியே முழு சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். செல்போன், கேமிரா போன்றவற்றைத் தனிக் கவுன்டர்களில் வாங்கி வைத்துக்கொண்டு வெளியே வரும்போதுதான் தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதென்பது தடைசெய்யப்பட்டு இருக்கிறது.

தெருவெங்கும் காளை மாடுகளும் பசுக்களும் பரபரப்பின்றி அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றன. கோயிலின் முகப்பு வாசலில் ஈட்டிகள் தாங்கிய இரு காவலர்களின் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. கோயிலின் உள்ளே மூலவர் கோவர்த்தநேசன் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். உடனுறைபவர் சத்யபாமா தாயார்.

கோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வெட்டவெளி முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் தென்படுகிறது. சிற்ப வடிவில் தேவகியும் வசுதேவரும், கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். விலங்கோடு வசுதேவரும் யசோதாவும் உட்கார்ந்திருக்கும் சிற்பம், குழந்தை ஒன்றைத் தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் என மேலும் பல சிற்பங்களையும் பார்க்கலாம்.

இன்னும் சற்று உள்ளே போனால், கல்கோட்டை போன்ற ஒரு பகுதி. வலதுபுறம் இருக்கும் பெரிய கதவுகளுக்குப் பிறகு இருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். இந்த மேடைதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம். உயரமான மேற்கூரை.

கோயில் கட்டடத்தை ஒட்டி இன்னும் பெரிய கட்டடம் ஒன்று. விசாலமான படிகள். மேலே மிகப் பெரிய ஹால் தென்படுகிறது. ஹாலில் ஏகப்பட்ட தூண்கள். அவை சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. சன்னிதியில் பளிங்கினால் ஆன கடவுள் திரு உருவங்கள். தசாவதாரக் காட்சிகள் வரையப்பட்டு சன்னிதிக்கு வெளியே மாட்டி இருக்கிறார்கள். ஆஞ்சனேயர் சன்னிதி ஒன்று அழகாக உள்ளது. கூரைகளிலும் கிருஷ்ணரின் லீலைகள் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. சரித்திரத்தில் பல காலங்களிலும் வேறு வேறு வகையில் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது இந்த ஆலயம்.

அமைவிடம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவுக்கு 50 கி.மீ. வடக்கிலும், டெல்லிக்கு 145 கி.மீ. தென்கிழக்கிலும், பிருந்தாவனத்துக்கு 11 கி.மீ. தொலைவிலும், கோவர்த்தனத்துக்கு 22 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது மதுரா நகரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com