தானான திருமேனி
தானான திருமேனி

ஆண்டுகள் ஆயிரம் கடந்து விளங்கும் அரங்கன் கோயில் அதிசயம்!

வைணவப் புரட்சித் துறவியான ஸ்ரீ ராமானுஜர் கி.பி.1017ம் ஆண்டு சித்திரை மாத திருவாதிரை திருநாளில் ஸ்ரீபெரும்பூதூரில் கேசவ சோமயாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். ராமானுஜருக்கு யதிராஜர் என்னும் பெயருமுண்டு. யதிராஜர் என்றால் துறவிகளில் தலைமைப் பண்புடையவர் என்று பொருள். விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய துறவி இவர். ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க 'விசிஷ்டாத்வைதம்'  என்ற சித்தாந்தம், கோயில் வழிபாட்டு கோட்பாடுகள், அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்துத் தந்தவர் ஸ்ரீ ராமானுஜர்.

ராமானுசர் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சுற்றி வந்து வைணவத்தின் அருமை பெருமைகளைப் பரவச் செய்தார். பல வைணவ மடங்களை நிறுவி பாதுகாத்தார். சாதி பேதம் பாராமல் வைணவம் சார்ந்த ஆண், பெண் இருபாலாரும் தமிழ்ப் பாசுரங்களை ஓதவும் வைணவ மதச் சின்னங்களை அணியவும் வைணவத்தில் இடமளித்தார். பெருமாள் மேல் அன்பும் பக்தியும் பூண்டு அவன் திருவடிகளில் பூரண சரணாகதி அடையும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டிருந்தார் ராமானுசர். அவ்வாறே பக்தர்களை அரவணைத்து வைணவத்தில் சேர்த்துக் கொண்டார். ஸ்ரீரங்கத்தில் அரங்கன் கோயில் நிர்வாகத்தை நெறிப்படுத்திய பெருமை ஸ்ரீ ராமானுஜரையே சாரும்.

தமருகந்த திருமேனி
தமருகந்த திருமேனி

இவரை பக்த கோடிகள் மூன்று இடங்களில் வழிபடுகிறார்கள். முதலாவது தமருகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில்), இரண்டாவது  தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்), மூன்றாவதாக தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).

ஸ்ரீரங்கத்திலேயே பல ஆண்டுகள் தங்கி ஸ்ரீரங்கநாதர் திருவாயால், ’உடையவர்’ என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார். இவரால் வைணவம் தழைத்ததால் கோபம் கொண்ட சைவ மதத்தைச் சேர்ந்த  சோழ மன்னனின் கோபத்திலிருந்து காத்துக்கொள்ள கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் திருத்தலத்தில் அமைந்த திருநாராயணன் கோயிலுக்குச் சென்று அங்கே 12 ஆண்டுகள் தங்கி பெருமாளுக்கு கைங்கர்யங்கள் செய்தார். வடக்கே ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம், ’தென் பத்ரிகாஸ்ரமம்’ என்றே அழைக்கப்படுகிறது.

தானுகந்த திருமேனி
தானுகந்த திருமேனி

மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே திரும்ப எண்ணிய ராமனுஜரை பக்தகோடிகள் விடவில்லை. தாங்களும் அவருடன் ஸ்ரீரங்கம் வருவோம் என்று கிளம்பினார்கள்.  உடனே ஸ்ரீ ராமானுஜர் தன்னைப் போலவே ஒரு சிலை வடிக்கச் செய்து அந்த சிலையை ஆரத் தழுவி தன்னுடைய சக்தியை அதில் மாற்றிக் கொடுத்தார். இன்றும் அந்த சிலை மேல்கோட்டை கோயிலில், 'தமருகந்த திருமேனி' என்னும் பெயரால் வணங்கப்படுகிறது. அதாவது, அடியவர்களுக்கு மிகவும் பிடித்த திருமேனி என்பது இதன் பொருள்.

அவருடைய அவதார தலமாகிய ஸ்ரீபெரும்பூதூரிலும் ஒரு ராமானுஜர் சிலை வேண்டுமென்று விரும்பி பக்தர்கள் வடித்த ஒரு சிலையில் தமது ஆத்ம சக்தியை செலுத்தினார் ராமானுஜர். இதற்கு, 'தான் உகந்த திருமேனி', அதாவது
ஸ்ரீ ராமானுஜருக்கு மிகவும் பிடித்தமான திருமேனி என்று பெயர்.

ராமானுஜர் தனது 120ஆவது வயதில் ஸித்தியடைந்தார். ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள். அது 'தானான திருமேனி' என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. அவருடைய பூத உடல் உட்கார்ந்த தோற்றத்தில் ஒரு சன்னிதியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. வருடத்திற்கு இருமுறை பச்சைக் கற்பூரத்தாலும் குங்குமப்பூவாலும் ஆன ஒருவித குழம்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட ஸ்ரீ ராமானுஜரின் பூத உடல் அப்படியே இருப்பது அதிசயம்தான்.

பல வருடங்களுக்கு முன்பு வைணவத் துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக, அவர்களை திருப்பள்ளிப்படுத்துவார்கள். அதேபோல், ஸ்ரீ ராமானுஜரின் உடல் வசந்த மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில் திருப்பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே பத்மாசனத்தில் உட்கார்ந்த தோற்றத்தில் தியானத்தில் உள்ள திருமேனி போல இன்றும் உயிரோட்டமாகக் காட்சி தருகிறது. இவரின் கண்கள் திறந்திருப்பதையும் திருமேனியில் தலைமுடி, கைநகம் போன்றவற்றையும் கூட நம்மால் தரிசிக்க இயலும். இப்போதும் அவருடைய திருமேனி வைத்தவாறே இருப்பதாகவும், அதனாலேயே 'தானான திருமேனி' என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பூத உடலை நாம் தரிசித்து அருள் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com