மார்கழியில் மரகத லிங்க வழிபாடு!
Aanmeegam

மார்கழியில் மரகத லிங்க வழிபாடு!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். திருச்செங்கோட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. ‘அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர்’ என அழைக்கப்படும் இத்தல மூலவர் சுமார் ஆறு அடி உயரத்தில் சரிபாதி ஆணாகவும், பெண்ணாகவும் மேற்கு நோக்கி வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிரசில் ஜடாமகுடம் விளங்க, பூர்ண சந்திரனை சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் ஏந்திக் காட்சி தருகிறார். அம்பிகையின் அம்சமாக விளங்கும் இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடது புறம் சேலையும் அணிந்து அருள்பாலிக்கிறார். மூலவரின் காலடியில் இருக்கும் தேவ தீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்தத் தீர்த்தமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது ஆண் உருவம் படுத்து இருப்பது போலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருப்பது போன்ற தோற்றத்துடனும் அமைந்துள்ளது சிறப்பு.

இந்தக் கோயிலில் மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த லிங்கத்தை பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 5 மணிக்குள் கோயிலில் இருக்க வேண்டும்.

றுபது அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை ஒன்று கோயில் படிக்கட்டு அருகில் அமைந்துள்ளது. இது ஒரு சிவத்தலமாக இருப்பினும், முருகப்பெருமானுக்கும் மிக உகந்ததாக விளங்குகிறது. இத்தல முருகன், ‘செங்கோட்டு வேலவர்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சிவனும், சக்தியும் இணைந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்தலம் சுமார் 1901 அடி உயரம் கொண்டது. அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க சுமார் 1200 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாளும் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

கணவன்-மனைவி ஒற்றுமையுடன் வாழ, இங்கே கேதார கௌரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாட்கள் கடைபிடிக்கப்படுவது சிறப்பம்சமாகும். இது தவிர, நாக தோஷம், ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்றவற்றுக்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இம்மலையை பௌர்ணமி நாட்களில் வலம் வந்தால் கயிலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com