கொல்லிப்பாவை
கொல்லிப்பாவை

எட்டுக்கை கொல்லிப்பாவை!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது எட்டுக்கை மாரியம்மன் அம்மன் ஆலயம். ஆலயத்துக்குப் போகும் வழியெங்கும் ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மனதை நிறைக்கின்றன. ஓங்கி உயர்ந்த சில்வர் ஓக் மரங்களும் அவற்றைப் பற்றிப் படர்ந்து பசுமைத் தூண்போல விளங்கும் மிளகுக் கொடிகளும் அருமையான காட்சிகள். வழியெங்கும் ஓடைகளும், குன்றுகளும், வயல்வெளிகளும் மிக அற்புதமாக மனதை நிறைக்கின்றன.

இந்த ஆலயம், சாலைக்கு இணையான சம தளத்திலோ அல்லது குன்றின் உச்சியிலேயோ அமைந்திருக்கவில்லை. மாறாக, பூமி மட்டத்தில் இருந்து கீழ்நோக்கிப் பல படிகள் கடந்து சென்றால் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் மூலவராக அருள்பாலிக்கும் மாரியம்மனுக்கு எட்டுக் கைகள் இருப்பது சிறப்பு. இந்த ஆலயத்தை, ‘கொல்லிப்பாவை ஆலயம்’ என்றும் சொல்கிறார்கள். இந்த அம்மன் பக்தர்களுக்கு பல வரங்களை வாரி வழங்கினாலும், குழந்தைப் பேற்றை அருளுவதில் வரப்ரசாதியான தெய்வமாகவே விளங்குகிறாள். அதை மெய்ப்பிப்பதைப் போல் மழலைச் செல்வம் வேண்டுவோர் இக்கோயில் மரக் கிளைகளில் தொட்டில்களைக் கட்டிப் பிரார்த்திப்பதைக் காணலாம்.

வேண்டுதல்கள்
வேண்டுதல்கள்

இக்கோயிலில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு! மரக் கிளைகளிலும், தூண்களிலும், சூலாயுதத்திலும் ஆண் மற்றும் பெண்களின் ஆடைகளை ஒன்றாக முடிபோட்டுத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தை விசாரித்தபோது, கருத்து வேற்றுமையால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கே வந்து, ஒற்றுமை வேண்டி, இதுபோல முடிச்சுப் போட்டு வேண்டிக்கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறுகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் பலவிதமான பூட்டுகள் பூட்டப்பட்டுத் தொங்குகின்றன. அவை, வழக்கு, தகராறுகள், சண்டை சச்சரவுகள் போன்ற பிணக்குகள் தீர இப்படி நேர்ந்துகொள்கிறார்கள். சிலர் தங்கள் வேண்டுதல்களை செப்புத் தகடு ஒன்றில் எழுதி ஆலய வளாகத்தில் கட்டிவிட்டும் செல்கிறார்கள்.

கோயில்
கோயில்

க்கோயில் ஸ்தல புராணத்தை விசாரித்தபோது, சதுரகிரி மலையில் இருந்து வந்த சித்தர்கள் 18 பேரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது. வன விலங்குகளால் ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஆலயத்தை அவர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். சித்தர்களின் கண்ணுக்கு மட்டுமே நேரில் அம்மன் காட்சி கொடுத்தாளாம். குழந்தை வடிவில் காட்சி தந்ததால் இந்த அம்மனை கொல்லிப்பாவை எனவும் அழைக்கிறார்கள். எட்டுக் கைககளுடன் காட்சியளிப்பதால், ‘எட்டுக்கை அம்மன்’ என்ற பெயரே நிலைத்து விட்டது.

வேண்டுதல்கள்
வேண்டுதல்கள்

கால ஓட்டத்தில் இந்த அம்மன் சிலை மண்ணுக்குள் மறைந்துவிட்டது. பின்னர் மாடு மேய்ப்பவர்களின் கண்ணுக்குத் தென்பட்டு, குடிசை ஒன்றில் திருவுருவச் சிலையை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். இப்போது கட்டுமானப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு அழகுமிகு சிறு ஆலயமாக மலர்ந்திருக்கிறது. கொல்லிமலைக்கு காரவள்ளி வழியாக அதிகக் கொண்டையூசி வளைவுகள் இருக்கும் பாதை ஒன்றும், அவ்வளவாக வளைவுகள் இல்லாத பாதை ஒன்று முள்ளுக்குறிச்சி வழியாகவும் உள்ளது. ஆலயத்துக்குக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் செல்வது நலம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com