மங்கள சண்டியாக அருளும் மகா துர்கா தேவி!

மங்கள சண்டியாக அருளும் மகா துர்கா தேவி!

ரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில். கருவறையில் சிவபெருமான் பிரகதீஸ்வரர் எனும் திருப்பெயரோடு லிங்க வடிவில் காட்சி தருகிறார். தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் இத்தலத்தில்தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் சிவலிங்கத்தை விட பெரியதாக இத்தல சிவலிங்கம் அமைந்துள்ளது. இவர் ஒரே கல்லால் ஆன மூலவராக மிகவும் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார்.

இக்கோயில் கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் சந்திர காந்தக்கல் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல் வெயில் காலத்தில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் குளிர்ச்சியைக் குறைத்து இதமான வெப்பத்தையும் தருகிறது.

கருவறையைச் சுற்றி ஐந்து சன்னிதிகளும் சிம்மக்கிணறும் உள்ளன. இத்தல அம்பிகை பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற்போல் 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறாள். கருவறையிலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் சுண்ணாம்பு கல்லால் ஆன நந்தி தரையில் அமர்ந்து ஈசனை நோக்கிக் காட்சி தருகிறது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது படும் சூரிய ஒளி கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு பிரதிபலிப்பது மிகவும் சிறப்பம்சமாகும். இந்த ஒளி படும்பொழுது கருவறை விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு மூலவர் சிவலிங்கத்தைப் பார்ப்பது மிகவும் அழகாகும்.

இந்தக் கோயிலில் அமைந்துள்ள நவகிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. இந்த ஆலயத்தில் அருளும் சரஸ்வதி தேவி மற்றும் மகாலக்ஷ்மி தாயார் ஆகிய இருவரும் தியானக் கோலத்தில் இருப்பதால் இவர்களை ஞான சரஸ்வதி என்றும், ஞான லக்ஷ்மி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இவ்வாலய விநாயக மூர்த்தி வலக்கையில் எழுத்தாணியோடு வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தில் அருளும் துர்கா தேவி சிரித்த முத்துடன் இருபது திருக்கரங்களில் ஆயுதம் தரித்தபடி மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் ஒன்பது வயது சிறுமியின் வடிவத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். துர்கா என்றாலே அனைவருக்கும் உக்ரமான கோலம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்தல துர்கா தேவி சிறுமி வடிவில் சிரித்த முகத்துடன் அருள்பாலிப்பதால் இவளை பக்தர்கள், ‘மங்கள சண்டி’ என்று அழைக்கின்றனர். சண்டி என்பதற்கு துர்கா எனப் பொருள்.

மகா சிவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி, பங்குனி திருவிழா, மார்கழி திருவாதிரை ஆகியவை இக்கோயிலின் முக்கியமான விசேஷ நாட்களாகும். திருமண பாக்கியம், குழந்தைப் பேறு, பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்ற வேண்டுதல்களுக்காக பக்தர்கள் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் பிரகதீஸ்வரருக்கு வேஷ்டி மற்றும் மாலை சாத்தியும், அம்மனுக்கு புடைவை சாத்தியும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com