ஹெலிகாப்டரில் பூக்கள் தூவி பிரம்மாண்டாக நடந்த சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு!

ஹெலிகாப்டரில் பூக்கள் தூவி பிரம்மாண்டாக நடந்த  சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா இன்று இனிதே நடந்து முடிந்தது. திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்பதால் சீர்காழி கோயிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. சமீபத்தில் குடமுழுக்கு விழாவுக்கான பணிகளின்போது திருமுறை செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி கோயில் குடமுழுக்கு தனிக்கவனம் பெற்றிருந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடன் பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். மலை மீது தோணியப்பரும், சட்டைநாதர் சந்நிதியும் உண்டு. இது தவிர திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு இங்கே தனி சன்னதியும் உள்ளது.

தருமை ஆதீனத்தின் முன்னெடுப்பால் ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்குப் பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றது. போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த மேற்கு கோபுர வாசல் பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட்டது. மேற்கு கோபுர வாயிலின் தென்பகுதியில்தான் சோழர் கால சிலைகளும் செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டதால் அந்த இடத்தை பார்க்க பக்தர்கள் ஆவலுடன் வந்திருந்தார்கள்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்தும் சிறப்பு காவல்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். பெண் காவல்துறையினர் பயன்படுத்த வசதியாக மொபைல் டாய்லெட், தெற்கு கோபுர வாசல் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் திருக்கோயிலுக்குள் வர ஆரம்பித்துவிட்டது. நெருக்கடியை தவிர்க்க மேற்கு கோபுர வாசலும், வடக்கு கோபுர வாசலும் மூடப்பட்டன. கிழக்கு கோபுர வாசலின் வழியாக வி.ஐ.பிக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். தெற்கு கோபுர வாசல் வழியாக பொதுமக்கள் காலை ஒன்பது மணி வரை அனுமதிக்கப்பட்டு, பின்னர் அனுமதி மறுக்கப்பட்டது.

குடமுழுக்கு நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனும் தருமை ஆதீன முதல்வரும் கலந்து கொண்டார்கள். சரியாக 9.40 மணிக்கு நான்கு வாயில்களிலும் உள்ள கோபுரங்களுக்கும் கருவறையில் உள்ள கோபுரங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் பூக்கள் தூவப்பட்டன.

இந்நிலையில் நேற்று சீர்காழி கோயிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டிய 5 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டார்கள். நேற்று கீழ வாசல் வழியாக வந்த தமிழக ஆளுநருக்கு தருமை ஆதினம் சார்பாக பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. யாகசாலையை நேரில் பார்வையிட்ட தமிழக ஆளுநர், பின்னர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகளையும், திருமுறை செப்பேடுகளையும் நேரில் பார்வையிட்டார். சீர்காழி குடமுழுக்கு விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தமிழக ஆளுநரும், புதுச்சேரி ஆளுநரும் கலந்து கொண்டது உள்ளூர் வாசிகளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com