கைதட்டி வணங்கும் முறை சரியா?

கைதட்டி வணங்கும் முறை சரியா?

சிவபெருமானை வணங்குபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. சிவபெருமான் கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருகையில் அவருக்கு இடது புறம் அமர்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். நம்மில் பெரும்பாலான வர்களுக்கு சண்டிகேஸ்வரர் என்பதை விட, கைகளை தட்டி வணங்கும் தெய்வம் என்றால் எளிதில் நினைவிற்கு வரும்.

சிவன் கோவிலுக்குச் செல்கின்றவர்கள் அனைவரும், தவறாமல் சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு சென்று, கைகளை தட்டி வழிபட்டு செல்வார்கள். அப்படி சண்டிகேஸ்வரரை வழிபடும்போது கைகளை தட்டி வழிபடலாமா? யார் இந்த சண்டிகேஸ்வரர்? பெரியபுராணத்தின்படி சண்டிகேஸ்வரரின் இயற்பெயர் விசாரசர்மன். இவர் சிறு வயதில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். இவரிடம் சிவ பக்தி மேலோங்கி இருந்ததால் மாடு மேய்க்கும் தொழில் செய்கையில் பணிக்கு இடையே மணலால் சிவலிங்கம் செய்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டு வந்தார். இவருடைய வலிமையாலும், தன்னுடைய மேய்ப்பான் மீது கொண்டிருந்த அதீத அன்பினாலும் விசாரசர்மன் மேய்த்த மாடுகள் அந்த மணலால் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தாமாகவே பாலை சுரந்து அபிஷேகம் செய்தன. இந்த நிகழ்வு தினசரி நடந்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இந்த நிகழ்வை பார்த்த மாட்டின் உரிமையாளர் விசாரசர்மனின் தந்தையான எச்சதத்தனிடம் சென்று, உங்கள் மகன் என்னுடைய பசுக்களை கொண்டு அவன் உருவாக்கிய மணல் லிங்கமான சிவனிற்கு அபிஷேகம் செய்து தியானிக்கிறான் இதனை கண்டியுங்கள் என புகார் அளித்தார். இதனை ஆராய எச்சதத்தன் ஒருநாள் மறைந்திருந்து கண்காணித்தார். மணல் லிங்கத்தின் முன் விசாரசர்மன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மாடுகள் தாமாகவே லிங்கத்தின் மீது பால் சுரந்து அபிஷேகம் செய்தன. இதனை கண்ட தந்தை எச்சதத்தன் கடும் சினம் கொண்டு அந்த மணல் லிங்கத்தை காலால் தகர்த்தார். அதன் பிறகு தவத்தில் இருந்த விசாரசர்மன் எழுந்து ஒரு குச்சியால் தந்தையின் காலை தாக்கினார். அந்த குச்சி கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை கடுமையாக தாக்கியது. அப்போது தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி அவர் தந்தையின் கால்களை சீராக்கி, விசாரசர்மனுக்கு ஆச்சரிய வரமொன்றை அளித்தார்.

சிவபெருமான் அருளிய வரம் : சிவனின் சொத்துக்களான கணங்கள் அனைத்தையும் காவல் காப்பவராக விசாரசர்மன் திகழ்வார் எனவும், தனக்கு நிகழ்ந்த பூஜைகளும், மரியாதைகளும் இனி அவருக்கும் கிடைக்கும் எனவும் அருளினார். இதனை அடுத்து சிவனின் சொத்துக்களான சிவ கணங்களை காவல் காத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சண்டிகேஸ்வரர். கைதட்டி வணங்கும் முறை சரியா? பெரும்பாலான சிவன் கோவில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள். ஆனால் அப்படி வணங்கக்கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம்.

எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்... வந்தேன்... வந்தேன்... சிவனின் தரிசனம் கண்டேன்... கண்டேன்.. கண்டேன்... என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com