கண்ணன் ராச லீலை புரிந்த மதுவனம்!

கண்ணன் ராச லீலை புரிந்த மதுவனம்!

த்திரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் அமைந்துள்ளது. கண்ணன் லீலைகள் புரிந்த இடம் இது. கண்ணன் விளையாடி மகிழ்ந்த வனங்களின் எண்ணிக்கை மொத்தம் பன்னிரண்டு. அவற்றில் யமுனை ஆற்றுக்கு மேற்குக் கரையில் ஏழும் கிழக்குக் கரையில் ஐந்தும் இருக்கின்றன. அவை: மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுதவனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹாளாவனம் மற்றும் பில்வனம் ஆகும். இவற்றில் மதுவனம் மிகவும் விசேஷமானது.

‘நிதி வனம்‘ என்றும் இதைச் சொல்கிறார்கள். கண்ணனின் ராஜ லீலைகள் நடந்த முக்கியமான இடம் இந்த மதுவனம். ராதா மற்றும் கோபியர்களுடன் கண்ணன் விளையாடி மகிழ்ந்தது இந்த மதுவனத்தில்தான். இப்போதும் இரவில் கண்ணனும் கோபிகையரும் மதுவனத்துக்கு வருகிறார்கள் என்ற நம்பிக்கை இங்கே நிலவுகிறது. ஆனால், அவர்களைப் பார்க்க யாரும் முயற்சிக்கக் கூடாதாம். அதனால் இரவில் ஒன்பது மணிக்கு மேல் இங்கு யாருமே நடமாடுவதில்லை.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைப் பசேல் என்று செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மொத்தப் பரப்பும் சேர்ந்து சுமார் அரை சதுர கிலோமீட்டர் இருக்கும். கண்ணன் காலத்தில் மிகப்பெரிய பரப்பாக இது இருந்ததாம். ஆளுயரம் வளர்ந்த ஒரே வகையான செடிகள். அடிப்பாகம் பருத்துக் காணப்படுகின்றன. அத்தனையும் துளசிச் செடிகள் என்கிறார் வழிகாட்டி. ஆனால், செடிகளை நுகர்ந்தால் வாசம் வரவே இல்லை. கேட்டால், ‘இது காட்டுத் துளசி. வாசம் வராது‘ என்று விளக்கம் கிடைக்கிறது. அவை இருக்கும் மண் தரையைச் சுத்தமாகக் கூட்டிப் பெருக்கி வைத்திருக்கிறார்கள். நடந்து போக கல் பாவிய பாதை இருக்கிறது. குரங்குகள் நடமாட்டம் மிகவும் அதிகம். கோயில்களில் பொரியும் மிட்டாயும் முக்கிய இடம் பெறுவதால் குரங்குகள் தாவி வந்து அபகரித்துச் செல்வது சகஜம்.

ஓரிடத்தில் சிறிய குட்டை ஒன்று தென்பட்டது. இறங்கிப் போய்ப் பார்க்கப் படிகள் இருக்கிறது. பச்சை நிறத்தில் தண்ணீர். ‘இதுதான் லலிதா குண்ட்‘ என்றார் வழிகாட்டி. கண்ணனோடு ஆடி மகிழ்ந்த கோபிகை லலிதாவுக்கு தாகம் எடுத்ததாம். அப்போது கண்ணன் கையில் இருந்த புல்லாங்குழலை தரையில் குத்தி, நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தினாராம். அதில் இருந்து வந்த தண்ணீர்தான் இங்கு தேங்கிக் குட்டையாகிவிட்டதாம். இன்னுமொரு இடத்தில் சிறிய கூரையோடு ஒரு சன்னிதி. அதன் சுவர் நெடுகிலும் ராதா, கண்ணன், கோபிகைகள் படங்கள் இருக்கின்றன. தரையில் வட்டமாக ஒரு பளிங்கு மேடை. அதிலும் நான்கைந்து படங்கள். காணிக்கையை எதிர்நோக்கி பூஜாரி அமர்ந்திருக்கிறார்.

வனத்தினுள் மேலும் நடக்கிறோம். ஒரே அறை மட்டும் கொண்ட சிறிய பகுதி ஒன்று தென்படுகிறது. அதில் மெத்தை விரித்த கட்டில் ஒன்று. இதை, ‘ஸ்ருங்கார் கர்‘ என்கிறார்கள்.  ராதா ராணி ஓய்வெடுக்கும் அறையாம். தினமும் இந்த அறையைப் பூட்டுவதற்கு முன்னர் பூ, பழங்கள் முதலியவற்றை வைக்கிறார்கள். பெண்கள் கூட்டம் இங்கு மிக அதிகம். ராதா ராணிக்கு ஸ்டிக்கர் பொட்டு, குங்குமம், வளையல், பூ என்று படைக்கிறார்கள். பத்து ரூபாய் கொடுத்தால் ராதா ராணியின் குங்குமப் பிரசாதம் கிடைக்கிறது. வனத்தில் இன்னொரு கோயிலில் ராதா ராணி கண்ணனாக வேடமிட்டு நிற்கிறார். இருபுறமும் விசாகா மற்றும் லலிதா ஆகியோர் நிற்கிறார்கள். மனதுக்கு மிகவும் ரம்மியமான இடம் இது. பிருந்தாவனம் சென்றால் அவசியம் இங்கு சென்று வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com