மொகல் கட்டடக்கலை பாணியில் அமைந்த கண்ணன் கோயில்!

மொகல் கட்டடக்கலை பாணியில் அமைந்த கண்ணன் கோயில்!

பிருந்தாவனத்தில் ஏராளமான கண்ணன் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றுள் காஞ்ச் கா மந்திர் மற்றும் கோவிந்த தேவ் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவையாகும். பிருந்தாவனத்திலிருந்து பிரியும் சிறிய தெரு ஒன்றில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. சுத்தம் என்பதை இந்தக் கோயிலில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏகப்பட்ட ஆசிரமங்கள் கண்ணில் தென்பட்டன. முன்னதாக, ‘இது கிளாஸ் டெம்பிள்‘ என்று கைடு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருந்தார். ஆகையால், ‘கண்ணாடியால் ஆன கோயிலாக இது இருக்கலாம்’ என்று ஏக எதிர்பார்ப்புடன் ஆலயத்தில் நுழைந்தோம். ஆனால், கோயிலுக்கு உள்ளே இருக்கும் சுவர் மற்றும் தூண்கள் அனைத்திலும் முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதை, ‘மிர்ரர் டெம்பிள்‘ என்றால் இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

காஞ்ச் கா மந்திர் கோயிலின் முகப்பு வாயில் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருகிறது. அழகான மூன்று நிலைக் கட்டடமாக மின்னுகிறது. கோயிலினுள்ளே கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கண்ணன் பசுக்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார்.

ந்தக் கோயிலின் அருகிலேயே கோவிந்த தேவ் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் பரபரப்பான பல சரித்திர நிகழ்வுகளுக்கு ஆளாகி இருக்கிறது. 1590ஆம் வருடம் ராஜா மான்சிங் என்னும் ரஜபுத்திர மன்னர் கட்டிய ஆலயம் இது. இந்தக் கோயிலைக் கட்டுவதற்காக அக்பர் சக்ரவர்த்தி கற்கள் கொடுத்து உதவி இருக்கிறார். ஏழு ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று இருக்கின்றன. மொத்தம் ஏழு அடுக்குகள் கொண்ட இக்கோயில் அக்காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டனவாம். ரஜபுதனம் மற்றும் மொகல் கட்டடக் கலைகளின் சங்கமமாகத் திகழ்கிறது இந்தக் கோயில். ஒளரங்கசீப் படையினர் மேலே இருக்கும் நான்கு அடுக்குகளை இடித்துவிட்டார்களாம். நான்காவது மாடியை இடிக்கும்போது பெரிய பூகம்பம் வந்ததால் மேற்கொண்டு இடிக்காமல் போய்விட்டர்கள் என்றும் கைடு சொன்னார்.

இந்தக் கோயிலின் மேற்கூரை கவிழ்த்து வைத்த தாமரை மலரின் வடிவில் அழகாக அமைந்திருக்கிறது. தூண்கள், மாடங்கள் அனைத்திலும் சிற்ப வேலைப்பாடுகள் மிளிர்கின்றன. மூலவர் கோவிந்தருக்கு மட்டுமே சன்னிதி. அவருக்கு இருபுறமும் சைதன்யா மற்றும் நித்யானந்தா சிற்பங்கள் உள்ளன. ஒளரங்கசீப் படையெடுப்பின்போது மூலவர் கோவிந்தரை ஜெய்ப்பூர் கொண்டு சென்று விட்டார்கள். அதனால் அந்த சிலை தப்பிப் பிழைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com