பிரிந்த தம்பதிகளை இணைக்கும் காருகுறிச்சி குலசேகரநாதர்!

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் காருகுறிச்சி குலசேகரநாதர்!

திருநெல்வேலி - பாபநாசம் செல்லும் சாலையில் சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் காருகுறிச்சி. இத்தலம் காரான்குறிச்சி என்ற பெயர் பெற்று, பின்னர் அதுவே மருவி தற்போது காருகுறிச்சி என விளங்குகிறது. பிரபல நாதஸ்வர மேதையான அருணாசலம் இவ்வூரில் பிறந்து தன் இசையால் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ளார் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.

சிறப்பு மிக்க இவ்வூரில், அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் ஶ்ரீ குலசேகரநாத சுவாமி. ஒரு காலத்தில் இங்கு ஆட்சி செய்த பூதல வீர உதய மார்த்தாண்டன் குலசேகரநாதரை மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். அதன் பின்பு மன்னர் மேற்கொண்ட கார்த்திகை சோமவார விரதத்தின் பயனாக அவர்கள் குலம் தழைக்க குழந்தை வரம் தந்து அருளினார் சுவாமி குலசேகரநாதர்.

மன்னர் வம்சம் விருத்தியாக அருளியதால் சுவாமிக்கு, `வம்ச விருத்தீஸ்வரர்' என்கிற பெயரும் உண்டு. கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஶ்ரீ குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் ஶ்ரீ சிவகாமி அம்பாளையும் ஒரு இடத்தில் நின்றபடி மனமுருகி வழிபட்டால் விரைவில் அனைத்து தோஷங்களும் நீங்கி நல்லது நடக்கும்.

குழந்தைப் பேறின்றித் தவிக்கும் தம்பதிகள் தங்கள் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் சுவாமி, அம்பாளின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும், கருத்து வேறுபாடின் காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்கள் இணைந்து வாழ இறைவன் அருள்பாலிப்பார் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com