நல்வழிகாட்டும் கலியுக வரதன் கீழப்பாவூர் நரசிம்மர்!

நல்வழிகாட்டும் கலியுக வரதன் கீழப்பாவூர் நரசிம்மர்!

ரணியனிடமிருந்து பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. நரசிம்மருடைய வருகை இப்பூவுலகில் (அகோபிலத்தில் ) இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்தது. ‘மற்ற அவதாரங்களைப் போல் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லையே என்ற கவலை மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டது. கலியுகத்தில் கலிபுருஷனின் மாயையில் சிக்கி பக்தர்கள் துன்புறுவார்களே, அவர்களுக்கு யார் நல்வழி காட்டுவது? நாம்தானே காப்பாற்ற வேண்டும்‘ என சிந்தித்து ஒரு உபாயம் செய்தார் மகாவிஷ்ணு. அதன் விளைவு ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத்தை தரிசிக்கும் விருப்பம் வந்தது.

காஷ்யப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் முதலானோர் மகாவிஷ்ணுவை நோக்கி பல ஆண்டுகள் தவம் செய்தனர். அப்போது மகாவிஷ்ணு ‘மகா தபஸ்விகளே! பொதிகை மலையில் அகத்தியர் ஏற்படுத்திய தாமிரபரணியில் மனிதர்கள் நீராடுவதற்காக சமதள பகுதியில் 86 தீர்த்தங்களும், இரவா வரம் பெற்ற ரிஷிகள் நீராடுவதற்காக மலை மேல் 32 தீர்த்தங்களும் உள்ளன. இதில் உண்டான மணிமுக்தா (பாபநாசம் பாண தீர்த்தம்) தீராத்தத்தில் நீராடி அங்கிருந்து வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவம் இயற்றுங்கள். அப்போது உங்கள் கோரிக்கை நிறைவேறும்‘ என்று அசரீரி வாக்காக ஒலித்தார். பகவான் சுட்டிக்காட்டிய இடத்தில் மறுபடியும் தவம் இருந்தனர் ரிஷிகள். இந்த கடுந்தவம் மாலவனின் மனதை மகிழ்வித்தது. மீண்டும் நரசிம்மர் அவதாரம் எடுக்க உரிய தருணம் வந்துவிட்டதை உணர்ந்தார். உடனே தான் முன்பு கிருதயுகத்தில் அகோபிலத்தில் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடனுடன் எடுத்து மகா உக்கிர மூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.

விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் ரிஷிகள் சிந்தை குளிர சிங்கப்பெருமாளை தரிசித்துக் கொண்டிருக்கும் பொழுது, தன்னுடைய விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொண்ட நரசிம்மர், அதாவது ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நிரந்தரமாகக் குடி கொண்டார். புராணச் சிறப்பு மிக்க அந்தப் புண்ணியத் தலமே கீழப்பாவூர்.

ன்னர்கள் காலத்தில், ‘சத்ரிய சிகாமணி நல்லூர்‘ என்றும் ‘குறுமரை நாடு‘ என்றும் ‘முனைமோகர் பாகூர் என்றும் அழைக்கப்பட்டது கீழப்பாவூர். இங்கு பசுமையான வயல்கள் நிறைந்த வேளாண்மை பகுதியில் குடிகொண்டுள்ளார் நரசிம்மர். இந்த கீழப்பாவூர் நரசிம்மரை சோழ, பாண்டிய மன்னர்கள் தினமும் வழிபட்டு வந்துள்ளனர். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச்சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இதனை ஒட்டி பின்புறத்தில் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார்.

தமிழகத்தில் இந்தத் தலத்தில் மட்டும் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் திரிபங்க நிலையில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். மீண்டும் அவதாரம் எடுத்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க அவரது சன்னிதி முன்பு மாபெரும் தெப்பக்குளம் உள்ளது சிறப்பு. இது நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் நீங்கும். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.

இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வாயு தேவனுக்கு உகந்த சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மரை வழிபட்டால் வாயு வேகத்தில் வந்து பாதுகாத்து அருள்வார் என்பது ஐதீகம். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்ட திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.

நரசிம்மர் அவதார தினமான நரசிம்ம ஜயந்தி அன்று விசேஷ அலங்காரத்தில் நரசிம்மருக்கு சகஸ்ர நாமார்ச்சனை நடக்கிறது. பால், இளநீர் அபிஷேகமும் பானகமும் நரசிம்மருக்கும் மிகவும் விருப்பமானவை. நீராஞ்சனம் என்னும் நெய் தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சிணமாக நரசிம்மரை வலம் வந்து ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுபவர்களின் பிரார்த்தனைகள் வெகு விரைவில் நிறைவேறுகிறது.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இந்தத் திருக்கோயில் அமைந்திருக்கும் பகுதியில் சாயரட்ச வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். பிற்காலங்களில் நரசிம்மருக்கு இளநீர் மற்றும் பாலபிஷேகம செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபியாக மாறிவிட்டாராம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் உள்ளன. மூன்றாவதாக, கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த பரிகார தலமாக விளங்கும் இந்தத் திருத்தலத்தில் நாளை நரசிம்ம ஜயந்தி (4.5.2023) அன்று நரசிம்மப் பெருமானை வழிபட்டு அவரது அருளைப் பெறுவோம்.

அமைவிடம்: திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com