கோடி தோஷம் தீர்க்கும் கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள்!

கோடி தோஷம் தீர்க்கும் கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள்!

காவிரிக் கரையினில் அமைந்துள்ள ஊர் மயிலாடுதுறை. மயிலாடுதுறை மேற்கே சோழம்பேட்டைக்கு அருகே கோழிகுத்தி என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் வானளாவிய விஸ்வரூப தரிசனத்துடன் இருபதடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் எம்பெருமான் திவ்ய சேவை சாதித்து வருகிறார். பெருமானின் திருநாமம் ஸ்ரீனிவாச பெருமாள். அருகிலேயே தாயார் சேர்ந்தே ஸேவை சாதிக்கிறார். ஒரே அத்தி மரத்தில் அமைந்துள்ள இந்த பெருமான் இத்தலத்தில் பிப்பலர் மகரிஷிக்கு தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியதால் இவர் வானமுட்டி பெருமாள் என அழைக்கப்படுகிறார். சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது இந்தக் கோயில்.

மூலவர் பெருமானுக்கு சாம்பிராணி காப்பு மட்டுமே அபிஷேக ஆராதனைகள். அழைத்த அடுத்த நொடியில் தூணை பிளந்து வந்து பக்தனைக் காப்பாற்றி அருளிய நரசிம்ம மூர்த்தி யோக நிலையில் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். ஸ்ரீ யோக நரசிம்மர் இக்கோயிலில் பக்த பிரகலாதனுக்கு அருளும் கோலத்தில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாகும். உண்மையான பக்திக்கு வசப்படும் இந்த நரசிம்ம மூர்த்தி எந்த ஒரு கொடிய துன்பத்தையும் நொடியில் நீக்கி அருள்புரிகிறார். கிரகக் கோளாறுகள். சத்ரு பயம். கடன் தொல்லைகள் மற்றும் வியாதிகளுக்கு நிவர்த்தி தந்து அருள்கிறார். பழைமை வாய்ந்த இத்தலத்தில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் மற்றும் அழகிய வடிவிலான சீனிவாச பெருமாள் திருமேனி ஒன்றும் காண்பதற்கு அரிதாகக் காட்சியளிக்கிறது.

முன்னொரு காலத்தில் வியாதியால் பீடிக்கப்பட்டு வருந்திய அரசன் ஒருவன், ஒரு முனிவரைச் சரணடைந்து தனது கர்ம வினைக்கு வழிகாட்டுமாறு பணிய. அவரும், ’’காவிரிக் கரையில் உள்ள தலங்களை அங்குள்ள நதியின் நீராடி தரிசித்து வா. எந்த ஊரில் உனது புண்ணான உடல் பொன்னாக மாறுகின்றதோ அந்தத் திருத்தலத்திலேயே எம்பெருமான் உனக்குக் காட்சி அளிப்பார். அங்கேயே தங்கிய விடு’’ என்றார்.  அவ்வாறே மன்னன் பல தலங்களுக்கும் சென்று வந்து கடைசியில் கோழிகுத்தி அருகில் காவிரியில் நீராடும்பொழுது அவனது பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு அவனுக்கு நாராயணனின் வானளாவிய திவ்ய தரிசனம் கிட்டியது. கோடி பாவங்களையும் ஒரு நொடியில் நீக்கியதால் இத்தலம், ’கோடிஹத்தி’ என வழங்கப்பட்டது. நாளடைவில் இப்பெயர் கோழிகுத்தி என மருவி விட்டது.

அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் புறவழிச் சலையில் மாப்படுகைக்கு மேற்கே சோழம்பேட்டை கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது கோழிகுத்தி. மயிலாடுதுறையிலிருந்து மினி பஸ் வசதி உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com