குடும்ப நலனைக் காக்கும் குழுமாயி அம்மன்!

குடும்ப நலனைக் காக்கும் குழுமாயி அம்மன்!

மிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், உறையூர் புத்தூர் பகுதியில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் பச்சைப்பசேலென தென்னையும் வாழையும், நெல்லுமென பசுமை போர்த்திக் காட்சியளிக்கும் இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது குழுமாயி அம்மன் திருக்கோயில். சோழனூர் திருச்சியில் உள்ள உறையூரை தலைநகரமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் உண்டு. சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்ட குழுமாயி அம்மன் தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்குகிறாள்.

நாயக்கர்கள் காலத்தில் மங்கம்மாள் எனும் அரசி, இந்த சிற்றூரை ஆட்சி செய்து வந்தாள். மக்களின் மீதும் மண்ணின் மீதும் மாறாப் பற்று கொண்டு, செம்மையாக ஆட்சி செய்துகொண்டிருந்தாள். ஒருமுறை, அந்த ஊரைச் சேர்ந்தவர் தனது நிலத்தில் குழி தோண்டினார். ஒருகட்டத்தில், குழியில் இருந்து ரத்தம் ஊற்றென பீரிட்டுக் கிளம்பியது கண்டு அதிர்ந்து போனார். ஊர் மக்கள் அனைவரும் சேதி கேட்டு ஓடி வந்து பார்த்தார்கள்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியின் மீது அருள் வர, எல்லோரும் அவளையே பார்த்தார்கள். “நான் சக்தி. நானே காளி. இனி நான் இங்கேதான் இருக்கப்போகிறேன். உங்களையெல்லாம் காக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மயங்கி விழுந்தாள். எல்லோரும் இதைக் கேட்டு பிரமித்தார்கள். ‘தாயே... காளியாத்தா...’ என நெக்குருகிப்போனார்கள். குழியைக் கண்டு வணங்கினார்கள். பின்னர், அந்தக் குழியை சமன்படுத்தி அங்கே கோயில் எழுப்பி அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள். குழியில் இருந்து அம்மன் தனது இருப்பிடத்தைக் காட்டியதால் அம்மனுக்கு, ’குழியாயி அம்மன்’ எனப் பெயர் சூட்டி வணங்கினார்கள். பிறகு இதுவே குழுமாயி அம்மனாக மருவியது என்கிறது கோயில் தல வரலாறு.

இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டைமலை ஒண்டி கருப்புசாமி கோயிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்தக் கருப்புசாமி கடவுளும், ’தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்ப’தாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோயில் கருப்பசாமிக்கு, ‘குட்டி குடி திருவிழா’ என்னும் ஆடு பலியிடும் விழா நடத்தப்படுகிறது.

சிறிய ஆலயம்தான் என்றாலும் சாந்நித்தியம் குறையாமல் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மாரி பொழிந்துகொண்டிருக்கிறாள் குழுமாயி அம்மன். ஊருக்கே காவல்தெய்வமாகத் திகழும் குழுமாயி அம்மனுக்குக் காவலனாக, இரட்டைமலை ஒண்டிகருப்பசாமி திகழ்கிறார். அவருக்கும் கோயிலில் சன்னிதி இருக்கிறது. இவருக்குத்தான் இங்கே முதல் பூஜை மற்றும் படையல். மாசி மாதத்தில் குட்டிக்  குடி திருவிழா இந்தக் கோயிலில் வெகு பிரசித்தம். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இந்தக் கோயிலில் அம்மனுக்கு உத்ஸவ விக்கிரகம் இல்லை. மாறாக, வருடந்தோறும் பனையோலையால் அம்மன் உருவத்தைச் செய்து, சப்பரத்தில் வைத்து, திருவீதியுலா வருவது வழக்கம். ஆடி மாதம் முழுவதுமே குழுமாயி அம்மனை தரிசிக்க வரும் கூட்டம் திருவிழாக் கூட்டம் என்றிருக்கும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து, அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவார்கள். பொங்கல் வைத்துப் படையலிடுவார்கள். அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் காலையும் மாலையும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அப்போது அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், வீட்டில் உள்ள திருஷ்டி மொத்தமும் கழியும். தடைப்பட்ட விசேஷங்கள் இனிதே நடந்தேறும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். புத்தூர் குழுமாயி அம்மனை வணங்குவோம். குடும்பத்தை காவல் தெய்வமாக இருந்து காத்தருள்வாள் குழுமாயி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com