பிரணவத் தோணியில் ஏறி வந்த பெருமான்!

பிரணவத் தோணியில் ஏறி வந்த பெருமான்!

திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினைப் பெற்றது சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற சிவத்தலம். மேலும், திருஞானசம்பந்தரின் அவதாரத் தலமாகவும், அன்னை பார்வதி இவருக்கு ஞானப்பால் வழங்கிய தலமாகவும் போற்றப்படுகிறது. இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.

பிரம்ம தேவன் வழிபட்டதும், புறா வடிவில் வந்த அக்னி பகவானால் சிபி மன்னன் பேறு பெற்ற அற்புதத் தலமாகவும் இது விளங்குகிறது. திருஞானசம்பந்தர், ‘தோடுடைய செவியன்‘ என உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இந்தத் தலத்தில்தான். இது, தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்த 14வது தலம் ஆகும். ஈசனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14வது தேவாரத் தலம்.

aanmeegam

இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைத்துக் கிடக்கும் பெருங்கடல், ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, சிவபெருமான் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இந்தத் தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கினார் என்கிறது புராணம். இரண்யகசிபுவின் உயிரைக் குடித்த நரசிங்கம், அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுகநாதரே, சட்டைநாதர் என்பது இந்தத் தலத்தின் வரலாறு. இது சிவபெருமானின் பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே, ‘ஆபத்துத்தாரணர்’ என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.

கோயில் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் ஆகியோர் உள்ளனர். வட பகுதியில் திருநிலைநாயகி சன்னிதி அமைந்துள்ளது. கோயிலின் முன்பு பிரம்ம தீர்த்தம் காட்சி தருகிறது. இந்தத் தீர்த்தக் கரையில்தான் திருஞானசம்பந்தருக்கு அன்னை பார்வதி தேவி ஞானப்பால் ஊட்டினார். இரண்டு சன்னிதிகளுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது.

aanmeegam

கோயிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்தால் கருவறையில் லிங்க உருவில் பிரம்மபுரீஸ்வரரை தரிசிக்கலாம். அவருக்கு வலப்பக்க மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உத்ஸவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த உத்ஸவ மூர்த்தி சின்னஞ்சிறு குழந்தை வடிவில், பால் வடியும் முகத்தோடு காணப்படுகிறார். வழக்கமாக ஞானசம்பந்தப் பெருமானின் கையில் இருக்கும் பொற்றாளம் இவரது கையில் இராது. இடது கரத்தில் சிறிய கிண்ணத்தோடும், வலது கரம் தோடுடைய செவியனாம் தோணிபுரத்தானைச் சுட்டிக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

கோயிலின் மேற்பிராகாரத்தில் விமான வடிவில் உள்ள கட்டுமலை மீது எளிதாக ஏறலாம். மலை மீது குரு மூர்த்தமான தோணியப்பர், பெரிய நாயகி உடன் காட்சி தருகிறார். அவருக்கும் மேல் தளத்தில், மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராய் சட்டைநாதர் அருளுகிறார். இவ்விரு மூர்த்தங்களும் சுதை திருமேனிகளே. ஞானசம்பந்தர் சன்னிதியில் செய்யப்படும் அர்ச்சனை முருகப்பெருமானுக்குரிய அஷ்டோத்ரத்தைச் சொல்லியே செய்யப்படுகிறது. காரணம், முருகனது அவதார மூர்த்தமே ஞானசம்பந்தர் என்று கூறுகின்றனர்.

சோழ மன்னர்களது கல்வெட்டுகள், வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகள், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகள் என இந்தக் கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அக்கால பழக்க வழக்கங்களையும், நில அளவை முறைகளையும், தலம், மூர்த்தி இவற்றின் அமைப்புகளையும் விளக்குவதாக உள்ளன. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்களின் நிவந்தங்கள் பல இவன்றின் மூலம் அறிய வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com