காளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகாரத் தலம்!

மூலவர்
மூலவர்

காஞ்சிபுரத்துக்கு அருகில் தாமல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கௌரி அம்பாள் சமேத ஸ்ரீ வராகீஸ்வரர் திருக்கோயில். வராக அவதாரத்தின்போது மகாவிஷ்ணு சிவனை வழிபட்ட இத்தலம், காளஹஸ்திக்கு இணையான ராகு-கேது பரிகாரத்தலமாக வழிபடப்படுகிறது. சரபேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருளும் அபூர்வத் திருத்தலம். பல்லவர், சோழர், ராஷ்டிரக்கூடர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் என பலரும் திருப்பணிகள் செய்து வழிபட்ட பெருமையுடைய தலம்.

ஒரு சமயம் இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் என்ற அசுரன் பூமா தேவியை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டான். இதனால் உலக இயக்கம் நின்று, பூலோகத்தில் வாழ்ந்த உயிர்கள் துன்பங்களை அனுபவிக்கத் தொடங்கின.  தேவர்களும் ரிஷிகளும் மகாவிஷ்ணுவிடம் இதுகுறித்து விண்ணப்பித்து பூலோகத்தைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்டார்கள். உடனே மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று இரண்யாட்சனை அழித்து பூமா தேவியை மீட்டு வந்தார். இரண்யாட்சனை அழித்த பின்னர் வைகுந்தம் திரும்பாது ஆவேசத்தில் தம்மை மறந்த நிலையில் ஆக்ரோஷமாக இருந்தார் பெருமாள்.

அம்பிகை கெளரி
அம்பிகை கெளரி

மகாவிஷ்ணுவின் இந்த நிலை குறித்து பிரம்மா முதலானோர் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொண்டனர். சிவபெருமான் உடனே வேடன் ரூபத்தில் வந்து வராக மூர்த்தியுடன் போரிட்டு அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். இதனால் மகிழ்ந்த மகாவிஷ்ணு அப்பகுதியில் ஒரு திருக்குளத்தை உருவாக்கி அதில் நீராடி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். வராக அவதாரத்தின்போது மகாவிஷ்ணு சிவபெருமானை வணங்கி வழிபட்ட காரணத்தினால் இத்தலத்து ஈசன், ‘வராகீஸ்வரர்‘ என்றும், ‘பன்றீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

நடராஜர்
நடராஜர்

மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம், நானூறு அடி நீளமும் முன்னூறு அடி அகலமும் கொண்டது. ஏழுநிலை ராஜகோபுரத்துடன் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் இத்தலத்தில் கலைநயமிக்க பல சிற்பங்கள் அமைந்துள்ளன. ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சன்னிதிகள் எதிர் எதிரே அமைந்துள்ளன. உள்பிராகாரத்தில் பைரவர், விநாயகர், நாகர்கள் மற்றும் வீரபத்திர சிலா ரூபங்கள் அமைந்துள்ளன.

வராஹர்
வராஹர்

இத்தலத்து ஈசன் வராகீஸ்வரர், பன்றீசர், திருப்பன்றீசுவரர், திருப்பன்றீசுவரமுடையார், தாமலுடையார் என பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கப்படுகிறார். கருவறையில் மேற்கு நோக்கி ஈசன் லிங்கத் திருமேனியோடு நாகாபரணத்துடன் அருளுகிறார். லிங்க பாணத்தின் மேற்பகுதியில் வேறெங்கும் இல்லாத விதமாக சூரியன், சங்கு, திருமண், சக்கரம், சந்திரன் முதலானவற்றைத் தரித்தவராகக் காட்சியளிக்கிறார். கருவறை வாசற்படியின் மேற்புறத்தில் சந்திரனைப் பிடிக்கும் கோலத்தில் கேது பகவான் மூன்றடி நீளத்தில் காட்சி தருவது சிறப்பு. கருவறைக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை அமைந்திருக்க, எதிரில் சண்டீகேஸ்வரர் ஒரு சிறு சன்னிதியில் அமைந்துள்ளார்.

அறுபத்து மூவர்
அறுபத்து மூவர்

வெளிப்புற மண்டபத்தினை ஒட்டி தெற்கு திசை நோக்கி அம்பாள் கௌரி என்ற திருநாமத்தோடு நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக மேலிரு கரங்களில் பாசமும் அங்குசமும் விளங்க, கீழிரு கரங்களை அபய ஹஸ்த நிலையில் வைத்தபடி காட்சி தருகிறாள். அம்மன் சன்னிதிக்கு எதிரே சிம்ம வாகனத்துக்கு பதில் யானை வாகனம் காட்சி தருகிறது. இந்த அம்பிகை சகல சம்பத்துக்களையும் பக்தர்களுக்கு வழங்குவதால், ‘சம்பத்கௌரி’ என்று அழைக்கப்படுகிறாள். ஒரு மேடை மீது நவகிரக நாயகர்கள் அமைந்துள்ளனர்.

ஈசனுடன் சரபேஸ்வரர்
ஈசனுடன் சரபேஸ்வரர்

முப்பத்தி இரண்டு தூண்களைக் கொண்ட மகா கொலு மண்டபம் இக்கோயிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இங்குள்ள பிராகார கல் தூண்களில் கலைநயமிக்க அஷ்ட பைரவர், நரசிம்மர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சித்தர், குபேரன், லட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு, நரசிம்மர், வராகர், முருகன், கணபதி, காளி, துர்கை, மச்சர் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உள் சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், அறுபத்து மூவர் மற்றும் நால்வர் சிலா ரூபங்கள் அழகுற அமைந்துள்ளன. இவை தவிர, ஒரு மேடையின் மீது கேது பகவான் காட்சி தருகிறார்.   இவரை ஏழு முறை வலம் வந்தால், இவர் தொடர்புடைய தோஷங்கள் விலகும் என்கிறார்கள். தல விருட்சம் வில்வ மரம். இந்த விருட்சத்தின் கீழ் ஸ்ரீ வில்வாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் ஆலயத்தின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது.

மாசி மாத மகாசிவராத்திரிக்குப் பிறகு மற்றும் புரட்டாசி மாதத்தில் விஜயதசமி தினத்தில் சூரிய அஸ்தமன வேளையில் மாலை 5.45 மணிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் வராகீஸ்வரர் திருமேனியின் மீது படும் காட்சி அற்புதம்.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

இக்கோயிலில் பிரதோஷம், மாதக் கிருத்திகை, ஞாயிறு அன்று ராகு-கேது பூஜை, அஷ்டமி வழிபாடு, மகாசிவராத்திர, ஐப்பசி அன்னாபிஷேகம் முதலான பல விழாக்கள் வழக்கத்தில் உள்ளன. தொடர்ந்து ஒன்பது ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் இத்தல ஈசனுக்கு ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபட்டால் ராகு-கேது தோஷங்கள் நீங்கும். தவிர, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ராகு-கேது யாக பூஜையில் கலந்து கொண்டாலும் ராகு-கேது தோஷத்தில் இருந்து பூரணமாய் விடுபடலாம். கோயில் திருக்குளத்தில் நீராடி வராகீஸ்வரரை பூஜை செய்தால் தொழு நோயிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., திருப்புட்குழியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 8 முதல் 11 மணி வரை. மாலை 5 முதல் இரவு 7 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com