ராஜராஜ சோழனின் திருப்பணி பெற்ற
ஸ்ரீ முருகநாதீஸ்வரர்!

ராஜராஜ சோழனின் திருப்பணி பெற்ற ஸ்ரீ முருகநாதீஸ்வரர்!

செங்கற்பட்டு மாவட்டம், மாம்பாக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தெய்வநாயகி சமேத ஸ்ரீ முருகநாதீஸ்வரர் திருக்கோயில். பார்த்த மாத்திரத்திலேயே இத்தலம் பழம் பெருமை வாய்ந்தது என மனதில் எண்ணத் தோன்றும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயில், சிவ தலத்துக்குரிய அனைத்து அம்சங்களும் பொருந்தி காட்சி தருகிறது. கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் இக்கோயில் முற்காலத்தில், ‘புலியூர் கோட்டத்து கலவை நாட்டு மாம்பாக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் 26வது ஆட்சியாண்டு காலக் கல்வெட்டு ஒன்று அவரது மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது.

நான்கு புறமும் மதில்சுவர் அமைந்துள்ள இந்தக் கோயில் நுழைவாயிலின் மீது சுதைச்சிற்ப வடிவத்தில் ரிஷப வாகனத்தில் ஈசனும் பார்வதி தேவியும் அமர்ந்த கோலத்தில் காட்சி தர, இருபுறமும் முனிவர்களும் நந்திகேஸ்வரரும் உடன் அமைந்திருக்கிறார்கள். ஈசனின் கருவறை சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதேபோல், தீர்த்தக்குளமும் கிழக்கே அமைந்துள்ளது. பலி பீடத்துக்கு அடுத்ததாக ரிஷப மண்டபத்தில் நந்திகேஸ்வரர் காட்சி தருகிறார். கருவறை நுழைவாயிலின் இருபுறத்திலும் சுதைச்சிற்ப வடிவத்தில் துவார பாலகர்கள் விளங்க, கருவறையில் சிவபெருமான் லிங்கத் திருமேனி ரூபத்தில் ஸ்ரீ முருகநாதீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அருகில் தெற்கு திசை நோக்கி தனிச் சன்னிதியில் அம்பாள் ஸ்ரீ தெய்வநாயகி நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்த முத்திரையோடு அமைந்து அருளுகின்றார். அம்பாள் சன்னிதிக்கு முன்பாக பலி பீடமும் சிம்ம வாகனமும் அமைந்துள்ளன.

வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர் சன்னிதியும், ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னிதியும், நவகிரக சன்னிதியும் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் அமைந்துள்ள துர்கைக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடைசியாக 1995ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. தற்போது இக்கோயிலின் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இக்கோயில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகாசங்கடஹர சதுர்த்தி, சஷ்டி அன்று சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனையும், குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி அன்று விசேஷ பூஜை, சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடு மற்றும் மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் முதலான பல விழாக்கள் இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்: கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் கேளம்பாக்கத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாம்பாக்கம் ஜங்ஷனில் இருந்து மேடவாக்கம் செல்லும் வலது பக்க சாலையில் பயணித்தால் இரண்டு கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மேடவாக்கத்தில் இருந்து சுமார் 11 கி.மீ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com