பயம் நீக்கி, பலம் கூட்டும் ஸ்ரீ சொர்ணகால பைரவர்!

பயம் நீக்கி, பலம் கூட்டும்
ஸ்ரீ சொர்ணகால பைரவர்!

ஸ்ரீ சொர்ணகால பைரவர் எழுந்தருள்புரியும் அற்புதத் திருத்திருத்தலம் அழிவிடைத்தாங்கி. போர்க்காலத்தில் ஐந்து படைகள் இங்கு தங்கியிருந்ததால், ‘ஐபடைத்தாங்கி’ என்றழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் மருவி அழிவிடைத்தாங்கி என்றானது. இத்தலத்தில் தனியே கோயில் கொண்டு, பக்தர்களின் பயங்களை நீக்கி, வேண்டும் வரங்களைத் தந்தருள்கின்றார் ஸ்ரீ பைரவ மூர்த்தி. சிவனின் அம்சமாக, ரௌத்ர மூர்த்தியாகத் திகழும் இந்த பைரவர் இத்தலத்தினில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தந்து பக்தர்களைப் பரவசப்படுத்துகின்றார்.

சனி பகவானுக்கும், வாஸ்து பகவானுக்கும் குருவாக, எமனின் அதிகாரம் பெற்ற இந்த பைரவர், ஜ்வாலை முடியுடன், சூலம், கபாலம், பாசம், உடுக்கை ஆகிய ஆயுதங்களை ஏந்தி, பாம்பைப் பூணூலாகவும், அரைஞான் கயிறாகவும் அணிந்து, இரு தொடைகளிலும் மண்டையோட்டு மாலையினைச் சாற்றிக்கொண்டு, தெற்கே முகம் காட்டி ஸ்ரீ சொர்ணகால பைரவர் என்கிற பெயர் தாங்கி அதியபூர்வ கோலத்தில் இங்கே காட்சி தருகின்றார். இவரது வாகனமான நாய் கிழக்கே முகம் காட்டி நிற்கிறது. சுற்றுப்பட்டு எட்டு ஊர்களுக்கும் இந்த பைரவரே காவல் தெய்வமாக விளங்கி நல்லருள் புரிகின்றார். வருடத்தில் எட்டு விசேஷ தினங்களில் இந்த எட்டு ஊர்களுக்கும் திருவீதியுலா சென்று, அவ்வூர் மக்களின் தீவினைகளைப் போக்குவது இப்பெருமானது வழக்கமாகும்.

தைப்பூசத்தன்று மோட்டூருக்கும், தை கிருத்திகையில் பெருமாள்பேட்டைக்கும், காணும் பொங்கலன்று அழிவிடைதாங்கியிலும், மயிலாரில் கோணன்மேடைக்கும் எழுந்தருள்புரிகின்றார். பிறகு மாசி மகத்தன்று ஜம்போடைக்கும், சிவராத்திரியில் தக்காம்பாளையத்துக்கும் எழுந்தருளும் பைரவேஸ்வரர், பங்குனி உத்திரத்தன்று எடையார்பாளையத்திலும், ஆருத்ராவுக்கு வயலூரிலும் எழுந்தருளி காட்சி தருகின்றார். இக்கோயில் உத்ஸவத் திருமேனியரின் கலைநயத்தை வர்ணிக்க வார்த்தை கிடையாது. இவரது பழைமையினை கணிக்க இயலாது. அவ்வளவு பிரகாசமாக திகழ்கின்றார்.

காஞ்சி மாமுனிவர் மகா பெரியவர் அவர்களால் இந்த ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இங்கு சிறப்பு வழிபாடுகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலம் மற்றும் எமகண்ட வேளையில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் வரும் காலபைரவாஷ்டமி இங்கு வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த பைரவருக்கு பச்சரிசி மாவு மற்றும் குங்குமத்தால் அபிஷேகம் செய்து, நல்லெண்ணெய் தீபத்தினை கிழக்கு முகமாக 1, 5, 9 என்கிற எண்ணிக்கையில் திரியிட்டு ஏற்றி, மிளகினால் செய்த வடைமாலையினைச் சாத்தி, தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டு, கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, எதிரி நாசம், உத்தியோகம், குழந்தை பாக்கியம் மற்றும் சூனியம் கண்டறிதல் போன்ற நற்பலன்களைப் பெற்றுச் செல்கின்றனர் பக்தர்கள். செல்வ வளம் குன்றியவர்கள், நஷ்டத்தாலும், பணக் கஷ்டத்தாலும் தவிப்பவர்கள், கடன் சுமையால் வாடுபவர்கள் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ சொர்ணகால பைரவருக்கு தேன் அபிஷேகம் செய்து, மிளகு முடிச்சிட்ட நல்லெண்ணெய் தீபமேற்றி, மிளகு சாதம் படைத்து வழிபட சிறந்த பலன்களைக் காணலாம்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழிவிடைத்தாங்கி. காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஆற்காட்டில் இருந்து இங்கு வர வழிப்பேருந்துகள் உள்ளன. வெண்பாக்கத்தில் இருந்து ஆட்டோ உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com