பாலாற்றில் கோயில் கொண்ட ஈசன்!

பாலாற்றில் கோயில் கொண்ட ஈசன்!

செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் பாலாற்றங்கரையை ஒட்டி பரமேஸ்வரமங்கலம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயில். இத்தல ஈசன் பாலாற்றின் மத்தியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.  முற்காலத்தில் இக்கோயில், ‘சைலேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் இத்தலத்துக்குச் செல்ல இயலாத நிலை இருந்தது. தற்போது ஊரிலிருந்து கோயிலுக்குச் செல்ல ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது இத்தலத்துக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் சென்று ஈசனையும் அம்பாளையும் வழிபட்டு அருளைப் பெறுவது எளிதாக உள்ளது.

பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூர் பரமேஸ்வர பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டது. பாலாற்றின் வடகரையில் வாயலூர் என்ற சரித்திரப் புகழ் பெற்ற ஊர் அமைந்துள்ளது. இந்த வாயலூரில்தான் பாலாறு கடலில் சங்கமிக்கிறது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பரமேஸ்வர பல்லவ மன்னரின் காலத்தில் இத்தலம் உருவாகியிருக்கக்கூடும். 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தின் நுழைவாயிலில் பல்லவ மன்னர்களின் அடையாளமான ஒரு சிங்கத் தூண் காட்சி தருகிறது. இதன் மற்றொரு புறத்தில் நிருபதுங்க வர்மன் என்ற பல்லவ மன்னரின் 15 மற்றும் 16வது ஆட்சி ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இத்தலத்தில் மதிய உணவு அளிக்கவும், விளக்கு வைப்பதற்கும் மண்ணைக்குடி விழுப்பரையர் மகன் நந்திநிறைமதி என்பவன் 11 கழஞ்சு பொன்னை இக்கோயில் கணப்பெருமக்களிடம் அளித்துள்ளதாகக் கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது.

சிவபெருமான் செண்பகேஸ்வரராக இத்தலத்துக்கு வந்து பாலாற்றுக்குள் இருந்த ஒரு சிறிய குன்றின் மீது தன்னை மறைத்துக் கொண்டபோது, சிவபெருமானைத் தேடி வந்த பார்வதி தேவி இப்பகுதிக்கு வந்து மண்டியிட்டவாறே குன்றின் மீது ஏறிச் சென்று சிவபெருமானுடன் சேர்ந்து பின்னர் கயிலாசநாதராகவும் கனகாம்பிகையாகவும் இங்கு கோயில் கொண்டதாக ஐதீகம்.

இத்தலம் குறித்து மற்றொரு தல வரலாறும் உள்ளது. ஒரு சமயம் சிவபெருமான் பூலோகத்துக்கு விஜயம் செய்தபோது தொண்டை மண்டலத்தில் அமைந்த நத்தம் என்ற சிறிய ஊரில் குடிகொண்டார். அருகில் அமைந்துள்ள பாலாற்றில் உலா வரும் போது பாலாற்றின் நடுவில் காணப்பட்ட ஒரு சிறு குன்றில் அமர்ந்து, அப்பகுதியின் இயற்கை அழகில் மெய்மறந்து தவமியற்றத் தொடங்கினார். ஈசன் தவத்தினைக் கண்டு மகிழ்ந்த வருண பகவான் அங்கு வந்து மழை பொழிந்து அவ்விடத்தைக் குளிர்வித்தான். மழையில் நனைந்தபடியே தவமியற்றிக் கொண்டிருந்த ஈசனைக் கண்ட பசு ஒன்று, அவர் மீது மழைத்துளிகள் படாதவாறு பால் சொரிந்த வண்ணம் நின்றது. சிவனையும் பசுவையும் மழையிலிருந்து காக்க நாகம் ஒன்று படமெடுத்து நின்றது. தவத்திலிருந்து கண்விழித்த சிவபெருமான், இக்காட்சியைக் கண்டு மனமகிழ்ந்து பால் சுரந்த பசுவிடமும், குடையாய் நின்று காத்த நாகத்திடமும், “என்ன வரம் வேண்டும்?” என்று வினவ அவை, ‘தாங்கள் இத்தலத்திலேயே எழுந்தருளி, நாடி வரும் பக்தர்களைக் காக்க வேண்டுமெ’ன்று கேட்டுக்கொள்ள, கயிலாயத்திலிருந்து வந்த ஈசனும் கயிலாசநாதராக இத்தலத்தில் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு. இப்பகுதி பாலாறு, ‘ஸ்ரீரநதி’ என்று அழைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீர’ என்றால் பால் என்று பொருள்.

திருக்கோயில் நுழைவுப் பாலத்தைக் கடந்து ஆலயத்தை அடைந்ததும் வலது புறத்தில் ஒரு பெரிய சன்னிதியில் எட்டு அடி உயரம் கொண்ட ஸ்ரீதட்சிணாமூர்த்தி பிரம்மாண்ட திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி பன்னிரண்டு படிகளைக் கடந்து கோயிலுக்குள் நுழைந்ததும் வலதுபுற சன்னிதியில் விநாயகப் பெருமான் அருளுகின்றார். அவரைத் தொடர்ந்து பலிபீடம், நந்திதேவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முன்மண்டபத்தில் விநாயகப்பெருமான் ஒரு அபூர்வமான அமைப்பில் காட்சி தருகிறார். மற்றொரு புறத்தில் சுப்பிரமணியர், நாகர் சிற்பங்கள் அமைந்துள்ளன.  இவ்விரு சிற்பங்களுக்கு மத்தியில், லிங்கத்தின் மேல் காமதேனு பால் சுரக்கும் நிலையில் மூன்று தலைகள் கொண்ட நாகம் ஒன்று குடையாய் அமைந்திருக்கும் சிற்பமும் காட்சி தருகிறது.

கருவறையில் ஈசன், கயிலாசநாதராக லிங்க ஸ்வரூபத்தில் காட்சி தந்து பக்தர்களைக் காத்தருளுகிறார். தென்திசை நோக்கி அமைந்த சன்னிதியில் அம்பாள் அருள்மிகு கனகாம்பிகை எனும் திருநாமம் தாங்கி, சதுர்புஜநாயகியாக அருள் மழை பொழிந்து, நாடிவரும் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி, மனநிம்மதி தந்து அருளுகிறார். கருவறை கோஷ்டங்களில் முறையே விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் அமைந்துள்ளனர். துர்கை கோஷ்டத்துக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் சற்றே வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். வெளித்திருச்சுற்றில் தனிச் சன்னிதி ஒன்றில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் அருளுகிறார். இத்தலத்தில் நவகிரக நாயகர்களுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. இருகால பூஜைகள் நடைபெறும் இத்தலத்தின் தீர்த்தம் பாலாறாகும்.

பங்குனி உத்திரத்தன்று இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசித்தால் திருமணத் தடைகள் அகன்று திருமணம் கைகூடும். அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட, திருமணம் விரைந்து நடைபெறும். அம்பாளை மனமுருகி வேண்டினால் வாழ்வில் ஏற்படும் அனைத்துத் துன்பங்களும் நீங்கி, சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

ஈசனுக்குரிய விழாக்கள் அனைத்தும் இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாதப் பிரதோஷம், மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அம்பாளுக்கு ஆடிப்பூரம், முருகப்பெருமானுக்கு கிருத்திகை விழா, ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம், பங்குனி உத்திரத்துக்கு மறுநாள் பங்குனி அஸ்தம், விநாயக சதுர்த்தி, கார்த்திகை தீப விழா போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி அன்று ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தல ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அமைவிடம்: திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், கல்பாக்கம் புதுச்சேரி ஈசிஆர் சாலையை ஒட்டி பாலாற்றில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தைச் சென்றடைய பேருந்து வசதி இல்லாததால் கல்பாக்கத்திலிருந்து ஆட்டோவின் மூலம் பயணித்து கோயிலை அடையலாம்.

தரிசன நேரம்: காலை 8.30 முதல் 10.30 மணி வரை. மாலை 4.30 முதல் 6 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com