செஞ்சேரி முருகன்
செஞ்சேரி முருகன்

சிவ உபதேசம் பெற்ற மந்திர முருகன்!

கோவை மாவட்டம், செஞ்சேரி மலையில் உள்ளது அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில். இம்மலையின் பெயரிலேயே இந்த ஊரும் அழைக்கப்படுவது விசேஷம். இத்தலத்தில் மூலவர் வேலாயுத சுவாமி பன்னிரு கரங்களுடன் சேவல் கொடியோடு, சேவலையும் தமது பிடிக்குள் வைத்திருப்பது சிறப்பாகும். இது, சூரனை அடக்கி, அவனை சேவலாக மாற்றி தனது பிடிக்குள் வைத்திருப்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இத்தல மூலவர் ஈசனிடம் மந்திர உபதேசம் பெற்றவர் என்பதால், ‘மந்திர முருகன்’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். உபதேசம் பெற்ற மலை என்பதால் இது, மந்திராசலம் என்றும் மந்திரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் சுவாமிமலை. ஆனால், முருகப்பெருமானுக்கு, சிவன் மந்திர உபதேசம் செய்த திருத்தலம் இந்த செஞ்சேரி மலையாகும். சூரபத்ம வதத்துக்கு முன்பே முருகப்பெருமானுக்கு, ஈசன் மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இதுவென்பதால், இது மிகவும் பழைமை வாய்ந்தது என்றால் மிகையாகாது.

சூரனின் கொடுமை தாங்க முடியாமல், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனையேற்று சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானை தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது. ஆனால், சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ரு சம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதி தேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கேட்டுக்கொண்டார் பார்வதி தேவி.

முருகப்பெருமானை அழைத்த ஈசன், ‘‘குமரா... சத்ரு சம்ஹார மந்திர உபதேசம் எளிதாகக் கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மந்திரம் ஸித்திக்கும் பாக்கியம் உனக்குக் கிடைக்கும். அதற்கு நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள தலத்தில் தவம் செய்’ என்று கூறினார்.

செஞ்சேரி மலைக்கோயில்
செஞ்சேரி மலைக்கோயில்

சிவனின் அருளாசியுடன் தவம் புரிய ஏற்ற இடத்தைத் தேடி முருகப்பெருமான் பூலோகம் வந்தார். அப்போது, இந்தத் திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞான தீர்த்த சுனை நீரும், அருகேயே தர்பையையும், சற்று தொலைவில் சின்ன மலையில் சிவ தீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கக்கண்டு, ‘தாம் தவம் புரிய சரியான இடம் இதுவே’ என்று தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார் முருகப்பெருமான்.

முருகனுக்கு உபதேசம் செய்து அருளுவதற்காக சிவபெருமான் தென்திசை வந்து இங்கு வீற்றிருக்கிறார் என்பது ஐதீகம். அதனால் இவரை, ‘தென்சேரிகிரி’ என்றும் அழைக்கின்றனர். வேலாயுதரின் வாகனமான மயில் இங்கு வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது. இத்தலத்தில் அருளும் திருமால் தமது வலது கரத்தில் லிங்கத்தை வைத்தபடி காட்சியளிப்பது விசேஷம். இந்தக் கோயில் உத்ஸவ மூர்த்தி முத்துக்குமாரர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் பத்ம பீடத்தின் மேல் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

நவக்கிரக சன்னிதியில் சூரிய பகவான் மேற்கு நோக்கியும், பிற கிரகங்கள் சூரியனை நோக்கியபடியும் வித்தியாசமான அமைப்பில் அமைந்துள்ளன. கோயிலில் நடராஜர், சிவகாமியம்மை, கயிலாசநாதர், பெரிய நாயகி மற்றும் விநாயகர் ஆகியோரும் தனிச்சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர். மலையடிவாரத்தில், மலைப்படி துவங்கும் இடத்தில் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகள் உள்ளன. இது தவிர, மலைப்பாதையில் குமரன், சப்த கன்னியர் மற்றும் இடும்பன் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர்.

இக்கோயில் தல விருட்சமான கடம்ப மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி வந்து சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் மன அமைதி, தொழில் தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு அடைவதாகக் கூறப்படுகிறது. இத்தல முருகப்பெருமானிடம் திருமண வரம், குழந்தை பாக்கியம், புதிதாகத் தொழில் தொடங்குதல் போன்றவற்றுக்காக பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கும், நவக்கிரக சன்னிதியிலுள்ள சூரியனுக்கும் செவ்வரளி மாலை சாத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், தமிழ்ப் புத்தாண்டு, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் மற்றும் தேர்த்திருவிழா ஆகிய விழாக்கள் இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com