திருமணத் தடை நீக்கியருளும்
ஸ்ரீ நித்திய கல்யாண ஈஸ்வரர்!

திருமணத் தடை நீக்கியருளும் ஸ்ரீ நித்திய கல்யாண ஈஸ்வரர்!

செங்கற்பட்டு மாவட்டம். திருக்கழுக்குன்றம் அருகே அமைந்துள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் சிவபெருமான் ஸ்ரீ நித்திய கல்யாண ஈஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்திருநாமத்தில் ஈசன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலம் ஒரு கட்டத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து லிங்க ரூபம் மட்டுமே போதிய வழிபாடு இன்றி இருந்துள்ளது. இவ்வூர் மக்கள் ஒன்றிணைந்து இத்திருத்தலத்தை புனரமைத்து மீண்டும் தினசரி வழிபாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

கோயிலின் நுழைவாயிலின் மீது இருபுறமும் நந்தியெம்பெருமான் வீற்றிருக்க, நடுவில் ஈசனும் பார்வதி தேவியும் வீற்றிருக்க உடன் விநாயகப் பெருமானும் முருகப்பெருமானும் சுதைச் சிற்ப கோலத்தில் காட்சி தருகிறார்கள். ஆலயத்துக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் நவகிரக நாயகர்களின் சன்னிதி அமைந்துள்ளது.  அதைக் கடந்து சென்றால் முதலில் அம்பாளின் சன்னிதி காட்சி தருகிறது. அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை எனும் திருநாமம் தாங்கி ஒரு கூரை வேயப்பட்ட சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், தாமரை பீடத்தில் சதுர்புஜ நாயகியாக எழுந்தருளியுள்ளார். அம்மன் சன்னிதிக்கு முன்பு பலி பீடமும் சிம்ம வாகனமும் அமைந்துள்ளன. குழந்தைச் செல்வம் வேண்டுவோர் இத்தலத்துக்கு வந்து தொட்டில் கட்டி அம்பாளிடம் பிரார்த்தனை செய்து சமர்ப்பித்துச் செல்கிறார்கள். அம்பாளின் அருளால் விரைவில் குழந்தைச் செல்வம் வாய்க்கப் பெறுகிறார்கள். அம்பாள் சன்னிதி 2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து சிவபெருமான் ஒரு கூரை வேயப்பட்ட தனிச்சன்னிதியில் லிங்கத் திருமேனியராக ஸ்ரீ நித்திய கல்யாண ஈஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். சன்னிதிக்கு முன்னால் பலிபீடமும் நந்திகேஸ்வரரும் காட்சி தருகின்றனர். திருமணத் தடை உள்ளோர் தொடர்ந்து மூன்று பிரதோஷ தினத்தன்று இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ நித்திய கல்யாண ஈஸ்வரரிடம் பிரார்த்தித்துக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் சன்னிதிக்கு முன்பு ஒரு புறம் செல்வ விநாயகரும் மற்றொரு புறத்தில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். தல விருட்சம் வில்வம். கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அரசமரத்தடியில் பொல்லாப்பிள்ளையார் சுதைச்சிற்ப வடிவில் காட்சி தருகிறார். மேலும், இக்கோயிலை ஒட்டி தேர் வடிவத்தில் ஒரு சிறிய சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.   அதற்குள் மகா சரஸ்வதி, மகா சக்தி, மகா லட்சுமி ஆகிய முப்பெருந்தேவியரும் சுதைச்சிற்ப வடிவத்தில் காட்சி தருவது மெய்சிலிர்க்க வைக்கிறது. மாதப் பிரதோஷம், மகாசிவராத்திரி முதலான விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இக்கோயில் உள்ள மண்டபத்தில் சுமார் 60 பேர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. கோயிலில் தினமும் காலை மட்டும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.

அமைவிடம்: திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து பதினோரு கிலோ மீட்டர் தொலைவில் குழிப்பாந்தண்டலம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com