வாழ்வில் திருப்பம் தரும் திருப்பட்டூர் நான்முகன்!

வாழ்வில் திருப்பம் தரும் திருப்பட்டூர் நான்முகன்!

திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் அமைந்துள்ளது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். ஸ்ரீ பிரம்ம தேவனுக்கென்றெ பிரத்யேகமாக அமைந்துள்ள ஆலயம் இது. பாடல் பெற்ற இந்தத் திருத்தலம் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடனும் நிறைய சன்னிதிகளுடனும் திகழ்கிறது.

ஒரு சமயம் பிரம்மாவுக்கு படைக்கும் தொழில் செய்து இந்த உலகையே உருவாக்கியதால், தானே சிவனை விட உயர்ந்தவன் என்னும் அகங்காரம் ஏற்பட்டது. இதனால் சினமுற்ற சிவன் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து, அவரது படைக்கும் தொழிலையும் நிறுத்தும்படி சாபம் கொடுத்தார். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற பிரம்மா இந்தத் தலத்துக்கு வந்து பன்னிரண்டு சிவலிங்கங்களை ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டார். பிரம்மாவின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த பார்வதி தேவி, சிவனிடம் அவருக்கு சாப விமோசனம் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார்.

ஈசனும் அவ்வாறே இந்தத் தலத்தில் பிரம்மாவுக்கு மகிழ மரத்தடியில் காட்சியளித்து அவருக்கு இங்கே ஒரு தனி சன்னிதி உருவாகவும், படைப்புத் தொழிலைத் திரும்பவும் மேற்கொள்ளவும் அருள்பாலித்தார். மேலும், சிவபெருமானால் இந்தத் தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தையும் மாற்றும்படி பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார். விதியின் கொடுமையை மாற்றி, துன்பங்களைப் போக்கி வாழ்வில் திருப்பம் கொடுப்பவரான பிரம்மா, திருப்பட்டூரில் மங்கல பிரம்மாவாக சன்னிதி கொண்டிருக்கிறார். இதனால் திருப்பட்டூர் பிரம்மாவை தரிசித்தால் தலையெழுத்து மாறி வாழ்வில் ஒரு நல்ல திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பிரம்மனுக்கு அருள்பாலித்ததால் இங்குள்ள ஈஸ்வரன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மனுக்கு தேஜஸை அளித்ததால், அம்பாள் பிரம்ம சம்பத் கௌரி என்னும் திருநாமத்துடன் இங்கே அருள்பாலிக்கிறார். மகிழ மரம் கோயிலின் தல விருட்சம். கோயில் உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தியான கோலத்தில் ஆறடி உயரத்தில் தாமரை மீது பத்மாசன கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் பிரம்மதேவர். இவருக்கு முன்பக்கம் மூன்று முகங்கள், பின்புறம் ஒரு முகம் என நான்கு முகங்களுடன் காட்சி தருகிறார். வலது கையில் ருத்ராட்ச மாலையும் இடது கையில் கமண்டலமும் ஏந்தியிருக்கிறார். நான்முகனுக்கு வெண்தாமரை மலர் மிகவும் விசேஷம் என்பதால் அர்ச்சனை பொருட்களுடன் வெண்தாமரை மலரும் சேர்த்து பக்தர்கள் அவரது சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். இவர் மங்கல பிரம்மன் என்பதால், இவருக்கு பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சளில் காப்பிட்டு அலங்காரம் செய்கிறார்கள். பிறகு அவர் மேலிருந்து எடுக்கப்படும் மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்தத் தலத்தில் பதஞ்சலி முனிவர் முக்தியடைந்ததால் இங்கே அவருடைய ஜீவ சமாதி இருக்கிறது. உள் பிராகாரத்திலேயே அவருக்கு ஒரு சன்னிதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு பிராகாரத்தில் சண்டீகேஸ்வரர் சன்னிதியும் அதன் அருகே பாதாளகேஸ்வரர் சன்னிதியும் உள்ளன. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாளகேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.

இக்கோயிலில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை வழிபாடுகள் சிறப்பாகக் கருதப்படுவதால் அன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவர் ஒருவரது தலையெழுத்தையே மாற்ற வல்லவர் என்பதால், சகல விதமான தோஷங்களையும் போக்குவார் என்னும் நம்பிக்கையுடன் பக்தர்கள் மிக சிரத்தையாக இவரை வழிபாடு செய்து பலன் பெறுகிறார்கள். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்து இங்கே அருள் பாலிக்கும் மங்கல பிரம்மதேவரை தரிசித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது உறுதி.

தரிசன நேரம்: காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com