வசீகர வடுவூர்
ஸ்ரீ கோதண்டராமர்!

வசீகர வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர்!

தினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் கனவில் ஒரு நாள் பெருமாள் தோன்றி, தலைஞாயிறு என்னும் இடத்தில் ஒரு அரசமரத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கடவுள் சிலைகளைக் கண்டெடுத்து, பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார். அவ்வாறு கண்டெடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டதுதான் திருவாரூர் மாவட்டம், வடுவூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில். 108 திவ்ய தேசங்களில் இது பெருமாளுக்குரிய 'அபிமான திவ்ய தேசம்' எனக் கூறப்படுகிறது.

ஆதியில் இருந்த ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோயில்தான், ஸ்ரீ கோதண்டராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு, ‘வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்’ என்று வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலின் உத்ஸவ மூர்த்தி
ஸ்ரீ கோதண்டராமர் வில்லேந்திய திருக்கரங்களுடன் சீதா தேவி, லட்சுமணன், ஹனுமன் சமேதராகக் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். வசீகரிக்கும் அழகு கொண்ட இந்த உத்ஸவ மூர்த்தியை பக்தர்கள் வைத்த கண் வாங்காமல் தரிசித்துச் செல்கிறார்கள். இக்கோயிலில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்சேனர், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. இக்கோயில் குறித்த ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆலயத்தில் அருள்புரியும் கோதண்டராமரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் இன்றும் தலைமுறை தலைமுறையாக கோயிலின் விசேஷ நாட்களில் அவர்களுக்கு விசேஷ மண்டகப்படிக்காக ஒதுக்கப்படும் குறிப்பிட்ட நாட்களில் ஒன்றாகக் கூடி, அன்றைய அபிஷேகங்கள், ஆராதனைகள், மாலையில் நடைபெறும் ஊஞ்சல் சேவை என்று நாள் முழுவதும் அங்கேயே தங்கி வழிபாடு செய்து மகிழ்கிறார்கள். மாலை நடைபெறும் ஊஞ்சல் சேவையில் திருக்கல்யாண கோலத்தில் சேவை சாதிக்கும் ஸ்ரீ ராமரையும் சீதா தேவியையும், 'சீதா கல்யாண வைபோகமே! ராம கல்யாண வைபோகமே!' என்று பாடி பக்தியோடு சேவிக்கின்றனர்.

வடுவூர் ஸ்ரீ ராமர், சீதா தேவியின் கொள்ளையழகு திவ்ய திருமணக் கோலத்தை தரிசிக்கும் எவருக்குமே, ‘திரும்பவும் சுவாமியின் இந்தக் கோலத்தை எப்போது தரிசிப்போம்’ எனும் ஏக்கம் எழாமல் இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com