மதுரை வந்தார் : மலர் தூவி தீபமேற்றி உற்சாக வரவேற்பு!

மதுரை வந்தார் : மலர் தூவி தீபமேற்றி உற்சாக வரவேற்பு!

-ஜிக்கன்னு

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் நாளை எழுந்தருளும் வகையில், கள்ளழகர் இன்று மதுரைக்குள் வந்த வைபவத்தில் கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விளக்குகள் ஏந்தியும் மலர் தூவியும் வரவேற்றனர். அதேபோல் இன்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நேற்று மீனாட்சி- சுந்தரேஸ்வரர் (ஏப்ரல் 14) திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இன்று (ஏப்ரல் 15) திருத்தேரோட்ட நிகழ்வும், கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவையும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை காலை நடைபெற உள்ள நிலையில், அதற்காக அழகர் மலையிலிருந்து நேற்று மாலை கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். இதையடுத்து தங்க ஆபரண அலங்காரத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகரை வழிநெடுகிலும் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்று வழிப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, காதக்கிணறு கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இன்று காலை மதுரையின் நுழைவாயிலான மூன்றுமாவடி வந்தடைந்தார்.

மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கைகளில் விளக்குகளை ஏந்தியும், பூக்கள் தூவியும் வரவேற்று எதிர்சேவை அளித்து வழிபட்டனர். அழகர் கோவில் முதல் மதுரை வண்டியூர் வரை 464 மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், இன்று மாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எதிர்சேவை செய்து அங்கு தங்கி அருள்புரிய உள்ளார்.

இதையடுத்து அங்கு, அழகர் கோயிலில் இருந்து தலைச்சுமையாக கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்தத்தால் திருமஞ்சனம் நிகழ்வு நடைபெருகிறது. இதைத் தொடர்ந்து நாளை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிக் களைந்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், ஆகியவற்றை சூடிகொண்டு பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருள்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சித்திரைத் திருவிழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப் படாத நிலையில், இந்த வருடம் அனுமதிக்கப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் மதுரை வந்தடைந்த கள்ளழகரை வரவேற்று வழிபட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com