குடம் நிரம்பியதா?

குடம் நிரம்பியதா?

ரு சமயம் வசிஷ்ட மகரிஷியின் பத்தினியான அருந்ததியின் கற்பை, சூரியன், அக்னி, இந்திரன் மூவரும் பரிசோதிக்க எண்ணம் கொண்டார்கள். அந்த சமயத்தில், நீர் எடுப்பதற்காக, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு அருந்ததி தடாகக் கரைக்கு வந்து சேர்ந்தாள். தடாகக் கரையில் ஏற்கெனவே நின்றிருந்த மூவரும் தேவ புருஷர்கள் என்பதை அருந்ததியால் அறிய முடிந்தது. அவர்களை வலம் வந்து நமஸ்கரித்துக் கொண்டாள்.

அப்பொழுது சூரியன், “உன்னிடம் ஒரு கேள்வி கேட்டு, பதிலைத் தெரிந்துகொள்ளவே வந்தோம்” என்றார்.

அதற்கு அருந்ததி, 'நீங்கள் மூவரும் எங்களது பர்ணசாலைக்குச் சென்று காத்திருங்கள். நான் குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்பி வந்து உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறேன்' என்று சொன்னாள்.

உடனே மூவரும், “குடத்தில் நீர் நிரப்ப நீ சிரமப்பட வேண்டாம். இப்பொழுது குடத்தில் நீர் நிறைந்து விடும் பாரேன்” என்றார்கள்.

அருந்ததியும் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கி, காலி நீர் குடத்தை அவர்களின் முன்பு தரையில் வைத்தாள்.

“தவம், பிரம்மச்சரியம், அக்னி ஹோத்திரம் முதலான அனுஷ்டானங்களை சரிவர ஒருவன் செய்வானேயானால் எனது பதவியை அவன் அடையலாம் என்பது சத்தியமானால் இந்தக் குடத்தில் கால் பங்கு நீர் நிரம்பட்டும்” என்று கூறினார் இந்திரன். உடனே குடத்தில் கால் பங்கு நீர் நிரம்பியது.

அடுத்து, “யாகம், பித்ருக்கள் காரியம் ஆகியவற்றால் நான் அடையும் திருப்தியை விட அதிதிக்கு அன்னம் அளிப்பதில் அதிகமாக திருப்தி அடைகிறேன் என்பது உண்மையானால் இந்தக் குடத்தில் அடுத்த கால் பங்கு நீர் நிரம்பட்டும்” என்று அக்னி பகவான் கூறினார். உடனே அடுத்த கால் பங்கு நீர் அக்குடத்தில் நிரம்பியது.

அடுத்ததாக, “ஒவ்வொரு நாளும், அதிகாலையில் என் கிரணங்கள் வெளிப்படும்பொழுது, அந்தணர்கள் செய்யும் அர்க்கியப் பிரதானம், அஸ்திரங்களாக மாறி அரக்கர்களை விரட்டுவது சத்தியம் என்றால் குடத்தில் மேலும் ஒரு கால் பங்கு நீர் நிறையட்டும்” என்றார் சூரிய பகவான். உடனே அடுத்த கால் பங்கு நீர் சேர்ந்து, முக்கால் குடமாக நிறைந்திருந்தது.

இன்னும் ஒரு கால் பங்கு நீர் சேர்ந்தால்தானே குடம் நிறையும். தன்னை சோதிக்கவே இந்திரன், அக்கினி, சூரியன் ஆகிய மூவரும் வருகை தந்திருக்கிறார்கள் என்பதை அருந்ததி புரிந்து கொண்டாள். அவள், தன் பதிவிரதா சக்தியினால் ஒரு கால் பங்கு நீரை அந்தக் குடத்தில் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாள். மீண்டும் அவள், அவர்கள் மூவரையும் வலம் வந்து நமஸ்கரித்துக் கொண்டாள். தனது பதியை மனதில் தியானித்து அவரையும் நமஸ்கரித்துக் கொண்டாள்.

“எனது பதியைத் தவிர, பிற புருஷர்களின் சவகாசம் இதுவரை அடியேனை அண்டாமல் இருப்பது சத்தியமானால் இக்குடம் இப்போதே நிரம்பட்டும்” என்று பணிவுடன் கைகளை கூப்பி வேண்டி நின்றாள். உடனே அந்தக் குடத்தில்
மள மளவென்று நீர் நிரம்பி வழிந்தது.

அதைக் கண்டதும் இந்திரன், அக்கினி சூரியன் ஆகிய மூவரும் மகிழ்ந்தனர். அவர்கள் எண்ணி வந்த காரியம் பூர்த்தியாகிவிட்டது என்கிற திருப்தியை அடைந்தனர். அருந்ததியை ஆசிர்வதித்து பலவாறாகப் புகழ்ந்து கொண்டாடிவிட்டு மீண்டும் தேவலோகத்துக்குத் திரும்பினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com