சகல சம்பத்து தரும் எளிய குபேர வழிபாடு!

சகல சம்பத்து தரும் எளிய குபேர வழிபாடு!

குபேர வழிபாடு கோடி செல்வத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நிறைய பேர் குபேரருக்கு பிரத்தியேகமாக வீட்டில் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. உதாரணத்துக்கு குபேர விளக்கு போடுவது, பச்சை திரியை கொண்டு விளக்கு ஏற்றுவது, பச்சை குங்கும அர்ச்சனை செய்வது, இப்படி பல வகையான குபேர வழிபாடுகளை பார்த்திருக்கலாம்.

வீட்டில் மிகவும் எளிய முறையில், அதுவும் ஒரே ஒரு இலையை வைத்து குபேர வழிபாடு செய்வதன் மூலம் அளவில்லா ஐஸ்வர்யங்களைப் பெற முடியும். வாரத்தில் ஒரு நாள்தான் குபேர பூஜை செய்ய முடியும் என்று நினைப்பவர்கள், வியாழக்கிழமைதோறும் இந்த பூஜையை செய்யலாம். தினமும் இந்த பூஜையை வீட்டில் செய்ய முடியும் என்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டைச் செய்து பலன் பெறலாம். குபேரர் என்றாலே பச்சை நிறம் சிறப்பு வாய்ந்தது. ஆகவே, தினமும் குபேரருக்குப் பிடித்ததும், ஈசனுக்கு மிக உகந்ததுமான வில்வ இலையை வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

முதலில் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துகொண்டு, குபேரர் சிலை அல்லது படம் வைத்திருந்தால் அதனை வாசனைமிக்கப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு குபேரருக்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய தட்டில் வில்வ இலைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு பூஜை அறையில் குபேரரை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, குபேரருக்கு உகந்த மந்திரங்களைச் சொல்லி இந்த இலைகளை எடுத்து குபேரருக்கு அர்ச்சனை செய்யலாம்.

குபேர மந்திரம்:

‘ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம்:

ஸ்ரீம் கும் குபேராய:

நரவாகனாயயக்ஷ ராஜாய:

தன தான்யாதிபதியே:

லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்:

ஓம் குபேராய நமஹ!’

மந்திரங்கள் எதுவும் தெரியாதவர்கள்

‘ஓம் குபேராய போற்றி’

என்ற ஒரு வரி மந்திரத்தைச் சொல்லி, வில்வ இலைகளால் குபேரருக்கு அர்ச்சனை செய்து உங்களது பணக் கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பூஜைக்கு தினமும் புதியதாக வில்வ இலைகளைக் கொண்டுதான் குபேரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஏற்கெனவே பூஜை செய்த இலைகளை கால் படாத இடத்தில் வைத்து விடவும். வில்வ இலைகள் சிவன் கோயில் வாசல்களில் எளிதாகக் கிடைக்கும். ஆனால், சிலருக்கு வில்வ இலைகள் கிடைப்பதில் சில சிரமங்கள் இருக்கும். அப்படி இருந்தால் ஒரு பாக்கெட் வில்வ இலையை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு இலையை சமர்ப்பித்து குபேர மந்திரத்தை சொல்லி அர்ச்சித்தால் கூட நல்ல பலனைப் பெறலாம். ஒரு வில்வ இலையாக இருந்தாலும் அதற்குக் கிடைக்கக் கூடிய பலன் நிறைவாகத்தான் இருக்கும்.

தினமும் குபேரரையும், ஐஸ்வர்ய ஈஸ்வரரையும் நினைத்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யும் வீட்டில் நிச்சயம் வறுமை என்பதே இருக்காது. நீங்கள் கேட்கும் வரம் அனைத்தையும் கொடுக்கக்கூடிய எளிமையான வழிபாடுகளில் இதுவும் ஒன்று. முதல் நாளே பூஜைக்குத் தேவையான விஷயங்களைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வெறும் 27 முறை குபேர மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தாலும் போதும். தொடர்ந்து இந்த பூஜையை 48 நாட்கள் செய்து விட்டு, பிறகு எப்போதெல்லாம் சமயம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் இந்த பூஜையை வீட்டில் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com