கரும்பு தின்ற கல் யானை!

கரும்பு தின்ற கல் யானை!

துரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள். 'திருவிளையாடல் புராணம்' என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் உலக உயிர்களிடத்து எல்லையற்ற அன்பும் கருணையும் கொண்டு அருள் செய்த செயல்களை கதைகளாக விவரிக்கிறது 'திருவிளையாடல் புராணம்' என்ற நூல். இது சிவபெருமானின் 64 அற்புத லீலைகளின் தொகுப்பாகும். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர்.

இவர் சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் ஸ்ரீ மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து அங்கேயே தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மன் அவருடைய கனவில் தோன்றி இறைவனின் திருவிளையாடல்களைப் பாடக் கட்டளையிட்டார். அன்னையின் ஆணைக்கிணங்க, 'சத்தியாய்' எனத் துவங்கும் திருவிளையாடல் புராணத்தை பாஞ்சோதி முனிவர் இயற்றினார். சிவபெருமான் தன் அடியவருக்காக 'பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்' நம் எல்லோருக்கும் தெரியும். இது மற்றொரு அற்புதமான திருவிளையாடல்.

சிவபெருமான் மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டிய மன்னனுக்கு முக்தியளிக்க திருவுளம் கொண்டார். எல்லாம்வல்ல சித்தராக உருமாறி மதுரைக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் சென்று உட்கார்ந்து கொண்டார். கோயிலுக்கு வரும் மக்களிடம் எல்லாம் தன்னுடைய சித்து வேலைகளால் பலவித அற்புதங்களை செய்தார். மண்ணைப் பொன்னாக்குதல், கிழவனை வாலிபனாக்குதல், வாலிபனை கிழவனாக்குதல், ஊனமுற்றவர்களை குணமாக்குதல் என அற்புதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலேயே தங்கியிருந்து சித்து வேலைகளை செய்து கொண்டிருந்த எல்லா வல்ல சித்தரைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனர்.  வந்தவர்கள் அனைவரும் சித்தரின் சித்து வேலைகளைக் கண்டு அதிசயித்துப் போயினர். அவர் செய்யும் சித்து வேலைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் அவரை அழைத்து வரும்படி மந்திரியிடம் கூறினார். ஆனால், சித்தர் பெருமானோ அரசன்தான் தன்னை வந்து காண வேண்டும் என்று பதில் சொல்லி அனுப்பி விட்டார்.

இதைக் கேட்டதும் அரசனே சித்தரைக் காணச் சென்றான். அரசன் சித்தரைப் பார்த்து, "இந்த ஊருக்கு வந்து ஏன் சித்து வேலைகள் செய்கிறீர்கள்? தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு சித்தர் பெருமான் தான் காசியிலிருந்து வருவதாகவும் தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், அரசனுக்கு வேண்டுமானால் தேவையானதை தன்னிடம் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார்.

இதை ஆணவப் பேச்சாக எண்ணி வெகுண்ட அரசன், சித்தரை சோதிக்க நினைத்தான். தன் அருகில் ஒருவர் கையில் கரும்பை வைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அதனை வாங்கி சித்தரிடம் கொடுத்து, "தாங்கள் இக்கரும்பினை இந்திர விமானத்தைத் தாங்கும் கல் யானை உண்ணுபடி செய்வீர்களா?" என்றான் கேலியாக.

சித்தர் அந்தக் கரும்பினை தன் கையில் வாங்கினார். கையில் கரும்புடன் கல் யானையைப் பார்க்க அந்தக் கல் யானைக்கு உயிர் வந்தது. தன் பீடு மிக்க நடையுடன் முன்னேறி வந்த அந்த யானை, சித்தர் கையில் இருந்த கரும்பை உண்டது. அத்துடன் மன்னர் அணிந்திருந்த முத்துமாலையை பிடுங்கி உண்டது. இதைப் பார்த்து அரசனின் சேவகர்கள் சித்தர் மேல் பாய, அவர் அவர்களை ஏறிட்டு நோக்கினார். அனைவரும் கற்சிலைகளாக மாறி விட்டனர். இதனால் நடுநடுங்கிப் போன அரசன், சிவபெருமானே சித்தராக வந்துள்ளார் என்று உணர்ந்து அவரை வணங்கி மன்னிப்பு கேட்டான். கரும்பைத் தின்ற யானை, திரும்பவும் கல் யானையாக மாறி, தனது இடத்தில் போய் நிற்க, கற்சிலைகளாக உருமாறிய சேவகர்கள் உயிர் பெற்றெழுந்தார்கள். அபிஷேகப் பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் தனக்குப் பிள்ளை வரம் வேண்டினான்.

'கல் யானை கரும்பைத் தின்ற' இந்தத் திருவிளையாடல் நடந்தது பொங்கல் தினத்தன்று. அபிஷேகப் பாண்டியனுக்கு விக்கிரமன் என்ற ஆண் குழந்தை பிறந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். அபிஷேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து முக்தி அடைந்தார்.

இந்த மகத்தான நிகழ்வைக் கொண்டாடும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்றும் கல் யானைக்குக் கரும்பு தரும் லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் சோமசுந்தரேஸ்வரர் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளை யானைகளை நம்மால் காண முடியும். அந்த அற்புதத்தின்படி கரும்பு தின்றதாகக் கூறப்படும் கல் யானையை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் இன்றும் நாம் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com