அச்சம் தவிர்!

அச்சம் தவிர்!

வ்வொரு இரவு தூங்கச்செல்லும்போதும் நாளை என்பது யாருக்கும் நிச்சயமில்லை. ஆனாலும், அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளைத் திட்டமிடுகிறோம். 'நம்பிக்கை' என்ற வார்த்தைக்கு எளிமையான அர்த்தம் இதுதான்! நம்பிக்கை கொண்ட மனிதர்களால், இயற்கையின் விதிகளை மீறி, வானத்தில் பறக்க முடியும்.

மிகப்பெரிய தேசத்தின் பேரரசன் ஒருவனிடம் வெளிநாட்டு அறிஞர் ஒருவர், தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டுச் சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதுவது மரபு. அதனால் அரசன், அரண்மனையின் பறவைக்கான பயிற்சியாளரை அழைத்து, “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, தேவையான பயிற்சி அளியுங்கள்" எனக் கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி இருக்கின்றன என தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன். பயிற்சியாளர், “அரசே! இரண்டு கிளிகளில் ஒன்று நன்றாக கற்றுக்கொண்டு விட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும், அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது" என்றார்.

“அந்தக் கிளிக்கு உடலில் ஏதேனும் குறை இருக்குமோ?" என்று கேட்டான் மன்னன்.

"இல்லை மன்னா! அரண்மனை கால்நடை மருத்துவர்களும், புகழ்பெற்ற பறவை நிபுணர்களும் நன்றாகப் பரிசோதித்துவிட்டார்கள். அதனிடம் எந்தக் குறையும் இல்லை. உடலில் ஊனமும் இல்லை. ஆனாலும், அது பறக்க மறுக்கிறது" என்றார் பயிற்சியாளர்.

அடுத்தடுத்த நாட்களில் மன்னன் அந்தக் கிளியை நோட்டமிட்டான். கிளி அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தது. நகரவே இல்லை. அது மன்னனுக்கு வருத்தத்தைத் தந்தது. தனது அமைச்சரை அழைத்து, "என்ன செய்வீர்களோ தெரியாது, இந்தக் கிளி இன்னும் ஒரு வாரத்தில் பறக்க வேண்டும்" என ஆணையிட் டான்.

உடனே அமைச்சர் நகரம் முழுக்கத் தண்டோரா போட்டு, "மன்னரின் அன்புக்குரிய பஞ்சவர்ண கிளியை பறக்க வைப்பவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் பரிசு வழங்கப்படும்" என அறிவிப்பு செய்யச் சொன்னார்.

டுத்த நாள் முதல், யார் யாரோ வந்து, என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தார்கள். கிளி அசைந்து கொடுக்கவில்லை. எட்டாவது நாள் அதிகாலை, மன்னன் கொடுத்த அவகாசம் இன்றோடு முடிகிறது. என்ன பதில் சொல்வது என்று அமைச்சர் குழப்பத்தில் இருந்தார். அப்போது ஒரு விவசாயி, அங்கே வந்து நின்றார். "கிளியை பறக்க வைக்க என்னால் முடியும்" என்றார்.

‘பல நிபுணர்கள் தோற்றுப்போன விஷயத்தை இவர் எப்படி செய்துமுடிப்பார்?’ என்ற அவநம்பிக்கை அமைச்சருக்கு எழுந்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல், “முயற்சி செய்து பாருங்கள்” என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் கண் விழித்து வெளியே வந்த மன்னன், பஞ்சவர்ண கிளி அங்குமிங்கும் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. "இந்த அற்புதத்தைச் செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்” என்றான்.

அதைத் தொடர்ந்து அந்த விவசாயி மன்னன் முன் பணிந்து நின்றார். "எல்லோரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில், நீ மட்டும் எப்படி கிளியை பறக்க வைத்தாய்?" என்று கேட்டார் மன்னர்.

அதற்கு விவசாயி, "அது மிக எளிதான விஷயம் அரசே! மரத்தில் ஏறி அந்தக் கிளி உட்கார்ந்திருந்த கிளையை வெட்டிவிட்டேன். வேறு வழியின்றி அந்தக் கிளி பறக்க ஆரம்பித்தது" என்றார்.

உயர உயர பறந்து சாதிக்கும் வல்லமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், அதை உணராமல், கிடைத்ததில் திருப்தி என்ற மனநிலையோடு பலர் ஒரே இடத்தில் அமர்ந்து விடுகிறார்கள். பயமெனும் கிளையை வெட்டி எறிந்தால் மட்டுமே உயரப் பறக்கும் பெருமிதத்தை ஒருவர் அடைய முடியும். அச்சம் தவிர்ப்பதே அடையாளமிக்க ஒரு வாழ்க்கையை எல்லோருக்கும் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com