பழிக்குப் பழி நியாயமா?

பழிக்குப் பழி நியாயமா?

ருவர் மற்றவர்க்கு துன்பம் விளைவித்தால், அவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. ஒருவர் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவரவர் செய்த முன்வினைப் பயனும்கூட காரணமாக இருக்கலாம். ஆகையால், ஒருவர் தமக்கு வந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, துன்பம் விளைவித்தவர்களின் மீது கோபம் கொண்டு, அவர்களைப் பழிவாங்க நினைக்கக் கூடாது. ராமாயண இதிகாசத்தில் அனுமனிடம் இதைப் பற்றி சீதை பிராட்டி சொன்ன நீதியைப் பார்ப்போம்.

ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் பலம் பொருந்திய பல அரக்கிகளின் நடுவே காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அரக்கிகள் ராவணனின் விருப்பத்துக்கு அடிபணியும்படி சீதையை தினமும் துன்புறுத்தி வந்தனர். ஆனால், அதற்காக சீதை அந்த அரக்கிகள் மீது கோபம் கொள்ளவில்லை. ‘தனக்கு நேர்ந்த துன்பத்துக்கு எல்லாம் தான் செய்த முன்வினை பயன்தான் காரணம்’ என்று நம்பினார். சீதையை திருப்பி அனுப்பும்படி ராமபிரான் பலமுறை ராவணனுக்கு தூது அனுப்பியும் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். அந்த செய்தியை அசோகவனத்தில் இருந்த சீதையிடம் வந்து கூறினார் அனுமன்.

தைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, “நான் முன்பு ஒருமுறை உயிர் துறக்க நினைத்தபோது நீதான் வந்து என்னை காப்பாற்றி, ‘ஸ்ரீராமர் விரைவில் வந்து மீட்பார்’ என்று கூறினாய். அப்போது உனக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தேன். இப்போது ராமரின் வெற்றி செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று கூறினார். அதற்கு அனுமன், “தாயே எனக்கு வரம் எதுவும் தேவையில்லை. கடந்த பல காலமாக உங்களைத் துன்புறுத்திய இந்த அரக்கியரை தீயிட்டு கொளுத்துவதற்கு மட்டும் எனக்கு அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சீதை, "இந்த அரக்கிகள் என்னைத் துன்புறுத்தினாலும் அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், இந்தத் துன்பங்களுக்கு நான் செய்த முன்வினை பாவமே காரணம். பொன்மான் என்று நினைத்து மாயமானுக்கு ஆசைப்பட்டேன். அதைக் கொண்டு வர என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததாலும், ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயகுரல் எழுப்பியதாலும் பயந்துபோன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை சென்று பார்த்து வரும்படி கூறினேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று மறுத்துக் கூறியும், அதை ஏற்றுக் கொள்ளாமல், சுடுசொற்களால் லட்சுமணனை கண்டித்தேன். ஒரு பாவமும் அறியாமல் இரவு பகலாக எங்களை கண்ணிமை போல காத்து வந்த லட்சுமணனை மனம் நோகச் செய்ததுதான் நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம். எனவே, நீ அரக்கிகளை எதுவும் செய்து விடாதே" என்றார்.

ஒருவருக்கு மற்றவர் மூலம் துன்பம் வருகிறது என்றால், அதற்கு அவர் முன்னர் செய்த தீவினை பயன்கூட காரணமாக இருக்கலாம் என்பதை முதலில் உணர வேண்டும். அதனால், துன்பம் விளைவித்தவரை, ‘உடனே தண்டிக்கிறேன்’ என்று கிளம்பிவிடக் கூடாது. தாம் செய்த நியாய, அநியாயங்களை சீர்தூக்கிப் பார்த்தே எதையும் முடிவு செய்வது சாலச்சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com