சிதம்பர ரகசியமும் சர்ச்சைகளும்! ராஜா தீக்ஷிதர் சிறப்பு நேர்காணல்.

சிதம்பர ரகசியமும் சர்ச்சைகளும்! ராஜா தீக்ஷிதர் சிறப்பு நேர்காணல்.

”தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்கிறது தர்ம சாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ண பகவானும் கீதையில், ‘எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்கிறார். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற எதைக் கொடுத்தாலும் திருப்தியுறாத மனிதன், வயிறாற உணவை உண்டுவிட்டால், ‘வேண்டாம். போதும்’ என்று கூறுவான். ‘வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.

அன்னதானத்தால் பிராணனையும், பிராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் சிரத்தையையும், சிரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்தித பிரக்ஞையையும், ஸ்தித பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்குச் சமமாகும்.

‘அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கர ப்ராண வல்லபே

ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதீ’

கர்ணன் தான் வாழ்ந்த காலத்தில் உயிர்க் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட, தாம் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் பிறர்க்கு தானம் செய்து தானத்துக்கே பெயர் பெற்றவன் ஆனான். அவன் இறந்து சொர்க்கம் சென்றபொழுது, கர்ணனுக்கு அடங்காப்பசி ஏற்பட்டது. அதற்கான காரணத்தை சொர்க்கலோகத்தின் தலைவனிடம் கேட்டான். அதற்கு, ‘கர்ணா நீ பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பொன்னும், பொருளும், மணியும் ஏன் உன்னுயிரையும் தானமாகக் கொடுத்து புகழ் பெற்றவன். ஆனால், வாழ்நாளில் யாருக்கும் நீ அன்னதானம் செய்யவில்லை, தானத்துக்கெல்லாம் தலையாய தானமான அன்னதானம் செய்யாததால்தான் உனக்கு இந்த அடங்காப்பசி’ என்றான்.

இந்தப் புண்ணிய பூமியில் ஆதரவற்றோருக்கு அன்னமளிப்பவனே மாபெரும் செல்வந்தராக வாழ்வான். அன்னதானம் செய்வதற்கு பணம் முக்கியமல்ல; நல்ல மனம்தான் வேண்டும்.”

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் மதியம், இரவு என இரு வேளையும் அன்னதானம் நடத்தி வருகிறார் அக்கோயிலின் பொது தீக்ஷிதர்களிள் ஒருவரான ராஜா தீக்ஷிதர். இயன்றோரிடம் பெற்று, இல்லாதோர்க்கு உணவு அளிக்கும் பணியைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தில்லை சிற்றம்பலம் அன்னசாலையில் அவரைச் சந்தித்தபோது, பசியோடு கோயிலுக்கு வரும் பக்தர்களை, ‘வாங்க, அன்னதானம் சாப்பிட்டுப் போகலாம்’ என அழைத்து தட்டில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தபோது, அன்னதானம் குறித்து மேற்குறிப்பிட்ட செய்திகளைப் பகிர்ந்துகொண்ட பிறகு நமது கேள்விகளுக்குப் பதிலளித்தார் ராஜா தீக்ஷிதர்.

உங்களைப் பற்றி...?

நான் சிதம்பரம் பொது சபாநாயகர் கோயில் தீக்ஷிதர். இந்த ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக தில்லைவாழ் அந்தணர்கள் வழி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த அன்னதானப் பணியை எத்தனை ஆண்டு களாகச் செய்து வருகிறீர்கள்?

2018ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுசபையில் ஒரு அன்னச்சத்திரம் நிறுவ வேண்டும் என்றும், இருப்போரிடம் பெற்று, இல்லாதவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடும் மனு ஒன்றைக் கொடுத்தேன். அதை ஏற்றுக்கொண்டு பொது நிர்வாகம் எனக்கு அனுமதி அளித்ததின் பேரில் இப்பணியை செய்து வருகிறேன்.

அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உருவானது எப்படி?

சிதம்பரம் என்றாலே அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அல்லவா? ஒரு காலத்தில் சிதம்பரம் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் நிறைய சத்திரங்கள் உண்டு. அதில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் மதியமும் இரவும் அன்னதானம் செய்த காலங்கள் உண்டு. ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் மறைந்து வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. இப்பொழுது சத்திரங்களே இங்கு கிடையாது.

நிலைமை இப்படி இருக்க, பசியால் பலர் இருப்பதைப் பார்த்துதான் எனக்கு இந்த யோசனை வந்தது. நான் அடிக்கடி திருவண்ணாமலை செல்வதுண்டு.  ஒருமுறை திருவண்ணாமலைக்கு சென்று அங்கு தியானத்தில் அமர்ந்தேன். அப்பொழுது சுவாமி அசரீரியாய், ‘நீ நினைத்ததைச் செய்’ என்று கூறியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. உடனே வந்து இந்தக் கோயில் நிர்வாகத்திடம் மனு கொடுத்தேன். அதற்கு அனுமதியும் கிடைத்தது. இன்று வரை மதியம், இரவு என இரு வேளையும் குறைந்தது 500 பேருக்கு மேல் பசியாறிச் செல்கின்றனர். திருவிழா காலங்கள் மற்றும் தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் மூன்று வேளையும், அதாவது காலை 6 மணிக்குத் தொடங்கும் அன்னதானம், இரவு பத்து மணி வரை தொடர்ந்து செயல்படும். அந்த நடராஜர் கருணையால் இன்றோர்கள் உதவி செய்ய, இப்பணியை சிறப்பாகச் செய்து வருகிறேன் எல்லாம் அவன் செயல்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும், மழை வெள்ளக் காலங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதிலும் எங்கள் பங்கு மிகப் பாராட்டுக்குரியதாக இருந்தது. பசியால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதே எங்களின் நோக்கம். அதேபோல், இயற்கை சீற்றத்தால் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலை வரும்போது அவர்களுக்கு உதவி செய்வதும் எங்களின் முதல் நோக்கம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறதே, இது எதனால்?

தை சர்ச்சை என்று கூற முடியாது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு தொலைக்காட்சியோ அல்லது பத்திரிகையோ கிடையாது. அதேபோல், உண்டியல் கிடையாது; சுவாமி தரிசனம் செய்ய கட்டணமும் கிடையாது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் எந்தச் சர்ச்சையும் இதுவரை கூறியது இல்லை. இறை நம்பிக்கை இல்லாத ஒருசிலர்தான் இடையூறு செய்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்களால் மக்களுக்கும், மக்களால் தில்லைவாழ் அந்தணர்களுக்கும் இக்கோயிலுக்கும் இடையே எந்த உரசலும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன். எங்கள் மீதும் கோயிலின் மீதும் யார் சர்ச்சை என்று கூறினாலும், ‘எல்லாம் அவன் செயல். தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று கூறிவிட்டு, எங்கள் பணியை நாங்கள் செய்து வருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை. ஆகையால், வழியில் பயமில்லை. சிதம்பரத்தைப் பொறுத்தவரை நடராஜர் மட்டுமே ஆட வேண்டும்; ஆள வேண்டும். இதை சிதம்பரம் மக்கள் உணர்வார்கள்.

சமீப காலமாக, ‘சிதம்பரம் தீக்ஷிதர்கள் குழந்தை திருமணம் செய்து வைக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறதே... இது குறித்து உங்கள் பதில் என்ன?

குழந்தை திருமணம் என்பதே இங்கு கிடையாது. பொதுவாக, திருமணம் என்பது எங்கள் குலத்துக்கு மூன்று நிலைகளில் ஏற்படும்.  முதல் திருமணத்தை, ‘பூணூல் கல்யாணம்’ என்று சொல்வார்கள். அது நான்கு நாட்கள் நடைபெறும். உறவினர்களை அழைத்து சடங்குகள் செய்து அந்தப் பையனுக்கு பூணூல் அணிவிப்போம். இது முதல் திருமணம்.

இரண்டாவது திருமணம் என்பது எதிர்காலத்தில் நமக்கு வரக்கூடிய ஒரு துணையை இப்போதே நிச்சயிப்பது. கோயில் பூஜை செய்யும் நிலை ஏற்படுவதற்காக பெண்ணின் குடும்பத்தாரும் பையன் குடும்பத்தாரும் எதிர்காலத்தில் இணைந்து வாழப்போகிறார்கள் என்பதை உறுதி செய்வோம். இவர்களுடைய வாழ்க்கை பந்தத்துக்கு இன்று ஒரு பதிவு செய்கிறோம் என்பதே இந்தத் திருமணத்தின் நோக்கம். நீங்கள் நினைப்பது போன்று சிறு வயதிலேயே திருமணம் செய்து திருமண வாழ்க்கை நடத்துவார்கள் என்று தவறான கணக்கு போட வேண்டாம். இது பூஜை முறையை வரைமுறைப்படுத்தும் ஒரு பரிகார சடங்குதான். பூணூல் திருமணம் எப்படியோ அப்படித்தான் இதுவும். இந்தப் பரிகார சடங்கு காலம் காலமாக நடந்து வருவதுதானே தவிர, இப்பொழுது ஏற்பட்டதொரு புது முறை அல்ல என்பதையும் கூறிக்கொள்கிறேன். அரசு உத்தரவுப்படி திருமணத்துக்கு பெண் தகுதியானவள் எனக் கூறப்படும் 21 வயது ஆனவுடன்தான் முறைப்படி திருமணம் செய்து, மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் அனுப்பி வைக்கப்படுகிறாள். அதுவரை அந்தப் பெண், தனது தாய் தந்தையரின் பராமரிப்பில்தான் இருந்து வருகிறாள். இது மூன்றாவது நிலை.

அரசு நிர்வகிக்கும் கோயில்களை விட, தீக்ஷிதர்கள் நிர்வகிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் சுத்தம், சுகாதாரத்தில் முதலிடத்தில் உள்ளதே எப்படி?

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை; இறைவனுக்கு மட்டுமே அடிமை. அந்த எண்ணம் எங்கள் மனதில் எப்பொழுதுமே மேலோங்கி நிற்கும். இறைவனுக்கு பயந்து மட்டுமே நாங்கள் சேவை செய்கிறோம். அவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். அரசு நிர்வகிக்கும் கோயில் முதல், தனியார் நிர்வகிக்கும் கோயில் வரை பல இடங்களில் கட்டணம் வசூல் செய்துகூட சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கிறார்கள். ஆனால், ஒரு பைசா கூட கட்டணம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்றால் அது சிதம்பரத்தில் மட்டுமே சாத்தியம்.

நடராஜர் கோயிலுக்கு என்று எந்த நிரந்தர வருமானமும் கிடையாது. அரசாங்க உதவியும் கிடையாது. பக்தர்களே தங்களால் இயன்றதைக் கொடுத்து இக்கோயிலை சிறப்பாகச் செயல்பட வைத்துள்ளார்கள். கோயிலுக்கு பல கட்டளைதாரர்கள் உண்டு. இன்றோர்கள் உதவுகிறார்கள். இறைப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது ஒன்றே இக்கோயிலின் மூலதனம். பக்தர்கள் தட்டில் காணிக்கை போடுவதை வைத்துத்தான் எங்கள் வாழ்வாதாரமே. இறைவன் ஒரு நாளைக்கு எவ்வளவு படி அளக்கிறானோ அதுதான் இறைவன் எங்களுக்கு அளிக்கும் வருமானம். எங்களைப் பொறுத்தவரை பக்தர்கள் மனம் நோகாமல் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.

சிதம்பரம் கோயில் நிர்வாகிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

ந்தக் கோயிலில் தற்போது 450க்கும் மேற்பட்ட தலைமை தீக்ஷிதர்கள் உள்ளோம். ஆதிகாலத்திலிருந்தே கோயிலை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய, அனைத்து தீக்ஷிதர்களின் பெயர்களையும் எழுதி, நடராஜருக்கு அபிஷேகம் செய்யும் குடத்தில் அப்பெயர்கள் எழுதிய சீட்டுக்களை போட்டு, குட ஓலை முறையில் நடராஜரின் பாதத்துக்குக் கீழே உள்ள திருவிளக்கு முன்னால் வைத்து பூஜித்து குடத்தை குலுக்கி கோயிலுக்கு வரும் முகம் தெரியாத ஒரு பக்தரை அழைத்து அவரைத் தேர்வு செய்யச் சொல்வோம். அவரும் ஒரு சீட்டு எடுத்துக் கொடுப்பார். அதில் யார் பெயர் வருகிறதோ அவர்தான் அந்த ஒரு வருடத்துக்கு கோயிலின் வரவு, செலவு கணக்கு மற்றும் நகை பாதுகாப்பு போன்ற அனைத்துக்கும் பொறுப்பு. அவரே நிர்வாகி செகரட்டரி என்று கூறுவோம். இந்த முறையை நீதிமன்றமே ஏற்றுக்கொண்டு விட்டது.

கட்டுரையாளருடன் ராஜா தீக்ஷிதர்
கட்டுரையாளருடன் ராஜா தீக்ஷிதர்

சிதம்பரம் கோயிலின் மிகச் சிறப்பான ஒரு விஷயம் என்று கேட்டால், எதைக் கூறுவீர்கள்?

மது பாராளுமன்றத்தின் ஒரு சபை ராஜ்ய சபா. சிதம்பரம் நடராஜர் தாண்டவம் ஆடும் சபையின் பெயர் ராஜ சபை. ராஜ்ய சபாவின் நிர்வாகி ஸ்பீக்கர் சபாநாயகர். இந்த ராஜ சபையில் வீற்றிருக்கும் நடராஜரின் பெயரும் சபாநாயகர். எல்லோருமே, ‘சிதம்பரம் நடராஜர் கோயில்’ என்றுதான் கூறுவோம். ஆனால், இதற்கு வரலாற்றுப் பெயர், ‘சபாநாயகர் திருக்கோயில்’ என்பதுதான்.

‘ஆஹா… தேச அளவில் இப்படியும் ஒரு பொருத்தம் நமது தில்லைக்கு உள்ளதே’ என வியந்து, ராஜா தீக்ஷிதரின் இறைப் பணியும் அன்னதானப் பணியும் வருங்காலத்திலும் சிறப்பாகத் தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com