சங்கல்பத்துக்கும் மகாசங்கல்பத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

சங்கல்பத்துக்கும் மகாசங்கல்பத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

பிஷேகம், அர்ச்சனை, மந்திர ஜபம், ஹோமம், புண்ணிய நதிகளில் ஸ்நானம் போன்ற எந்த ஒரு ஆன்மிகச் செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்பு, ‘இந்தச் செயலை, இந்த இடத்தில் வசிக்கும் நான், இந்தக் காலத்தில், இன்ன பலனை வேண்டி, இந்த மகரிஷி சொன்னபடி, இந்த வழிமுறையை ஒட்டி செய்யப்போகிறேன்’ என்று மனதால் தீர்மானித்துக் கொண்டு, அதை வாயால் சொல்வதே சங்கல்பம் எனப்படுகிறது. இவ்வாறு சங்கல்பம் செய்துகொள்ளும் நபரே செய்யப்போகும் பூஜை, ஜபம், அர்ச்சனை, ஹோமம் போன்ற கர்மாக்களுக்கு எஜமானர் எனப்படுகிறார். அதோடு, செய்யும் கர்மாக்களின் பலனும் இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்பவருக்குத்தான் சென்றடையும்.

ஆகவே சாஸ்திரத்தில், மகரிஷிகளின் வாக்கியத்தில் நம்பிக்கை வைத்து, முன்னோர்களின் வழக்கத்தை ஒட்டி நாம் செய்யும் பூஜை, மந்திர ஜபம், ஆலய அர்ச்சனை, அபிஷேகம், ஹோமங்கள் மற்றும் வீட்டில் செய்யும் திருமணம் கிருஹப் பிரவேசம், சீமந்தம், உபநயனம் போன்ற அனைத்து மங்கல நிகழ்ச்சிகள் என்று அனைத்து கர்மாக்களிலுமே சங்கல்பம் என்பது உண்டு.

இந்த சங்கல்பத்தையே சற்று விரிவான முறையில், அதாவது நாம் வசிக்கும் ஊர், இவ்வுலகத்தில் அது எங்கு அமைந்துள்ளது, என்னென்ன நதிகள், மலைகள், புண்ணிய க்ஷேத்ரங்களின் நடுவில் அமைந்துள்ளது போன்ற விபரங்களையும், அத்துடன் எதற்காக அந்தக் கர்மாவை செய்கிறோம் என்னும் நமது விருப்பங்களையும், எந்த பாபங்களைப் போக்கிக்கொள்ள இந்த கர்மா செய்யப்படுகிறது என்று பாபங்களின் பிரிவுகளையும் விரிவாக எடுத்துச் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படும்.

குறிப்பாக, காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களில், கடல், கங்கை, காவிரி, தாமிரபரணி, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் குளிக்கும் முன்பு, அந்த நதியின் கரையில் அமர்ந்து இவ்வாறு மகாசங்கல்பம் செய்து கொண்டு அதன் பின்னர் குளிப்பது பண்டைய நாள் முதல் வழக்கத்தில் உள்ளது.

ஆகவே, சங்கல்பம், மகாசங்கல்பம் என்னும் இரண்டு வார்த்தைக்கும் சுருக்கம் - விரிவு என்பதைத் தவிர, மற்ற எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டுக்கும் பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் கிட்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com