வீட்டு பூஜை முழுமையானபலன் தர கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!

வீட்டு பூஜை முழுமையானபலன் தர கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!
Published on

வீட்டில் செய்யப்படும் பூஜையில் சில சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பது முறையாக இருக்கிறது. அந்த வகையில், சில விஷயங்களை எக்காரணம் கொண்டும் கவனிக்காமல் இருக்கக் கூடாது என்கின்றன சாஸ்திரங்கள். அப்படியான சில விஷயங்கள் தெய்வ குற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பது ஐதீகம். வீட்டின் பூஜை அறையில் கவனிக்க மறக்கக் கூடாத ஐந்து விஷயங்கள்...

பூஜை அறையில் பூஜையின்போது தெய்வ படங்களுக்கு பூக்களை வைத்து அலங்கரிப்போம். இப்படி பூக்கள் சூடும்பொழுது அல்லது மாலை போடும்பொழுது சுவாமியின் முகம் மற்றும் பாதத்தை எக்காரணம் கொண்டும் மறைக்கும்படி பூக்களை சாத்தக் கூடாது. முகம், பாதம் இரண்டும் தெரியும்படிதான் மாலை சூட வேண்டும். பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்பொழுது முதலில் பாதத்திலிருந்து ஆரம்பித்துதான் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஒரு ஐதீகம் உண்டு. இறைவனை தரிசிக்கும்பொழுது முகம், பாதம் இரண்டையும் தரிசிக்க மறக்கக் கூடாது. இதனால் சுவாமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கு முழுமையாக எரிந்து முடியும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். விரைவாக அணைய வேண்டும் என்றால் அதற்கேற்ப நீங்கள் குறைவாக எண்ணெயை ஊற்ற வேண்டும். முழுமையாக எண்ணெயை ஊற்றி விட்டால் அது தீரும் வரை நீங்கள் தீபத்தை அணைக்கக் கூடாது. தானாக தீபம் அணைய வேண்டுமே தவிர. நம்முடைய அவசரத்துக்கு தீபத்தை அணைப்பது முறையல்ல! அணையும் தருவாயில் பூக்களால் மெல்லமாக தீபத்தை மலை ஏற்றலாம். வாயால் ஊதிய அணைக்கவோ, திரியை இழுத்து எண்ணெய்க்குள் தள்ளவோ கூடாது. இது தெய்வ குற்றத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

பூஜை அறையில் வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவது மங்கலகரமான விஷயங்களை நடக்கச் செய்யும். இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றும். இப்படி வெற்றிலை, பாக்கு வைக்கும்பொழுது வெற்றிலையின் நுனி பாகம் சுவாமி படத்துக்கு இடதுபுறம் இருக்குமாறு வைக்க வேண்டும். இப்படி வைக்கும்பொழுது வெற்றிலையின் காம்பு பகுதி சுவாமியின் வலதுபுறம் அமையும்.

சுப காரியப் பேச்சு வார்த்தைகளை முதன் முதலில் ஆரம்பிக்கும்பொழுது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பின்னர் பேச ஆரம்பிக்கலாம். அப்படி சுப காரியப் பேச்சு வார்த்தைகள் பேசும்பொழுது எள் அல்லது எண்ணெய் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. மற்றும் அதைப் பற்றிய எந்தவிதமான பேச்சையும் பேசக்கூடாது. இப்படிப் பேசினால் சுப காரியங்கள் தடைபடும் என்பது ஐதீகமாக உள்ளது. எள் மற்றும் எண்ணெய் சனி பகவானுக்கு உரிய அம்சமாக உள்ளது. எனவே, சுப காரியம் நடக்கும் இடங்களில் இதுபோன்ற வார்த்தைகளையோ அல்லது இந்த பொருட்களையோ பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பூஜை அறையில் சிலந்தி வலை கட்டுவது அல்லது பல்லி எச்சம் இடுவது போன்ற விஷயங்களை அவ்வப்பொழுது கவனித்து சுத்தப்படுத்துங்கள். இதுவும் வீட்டு பூஜையில் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படி நீங்கள் பூஜை அறையை பராமரித்து பூஜை செய்து வந்தால், பூஜைக்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com