ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு...

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு...

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் – ஜனவரி 2 ல்

சேலத்தில் புகழ்பெற்ற பழமையான கோட்டை பெருமாள் கோவில் உள்ளது .இங்குள்ள பெருமாள் அழகிரிநாதர் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்தக் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் பேறு பெறுவார்கள்.

        இந்த வருடம் வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவம் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர்  22 ந்தேதி முதல் ஜனவரி 13 ந்தேதி வரை பல நிகழ்வுகள் கோவிலில் நடைபெற உள்ளன. அதில் 22 முதல் 1 ந்தேதி (ஆங்கிலப் புத்தாண்டு) வரை பகல் பத்து உற்சவமும் 2 ந்தேதி முதல் 13 ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

     சொர்க்க வாசல் திறப்பு தினமான இரண்டாம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று மூலவரான அழகிரிநாதர் தாயார் கருடாழ்வார் ஆஞ்சநேயர் ஆண்டாள் விஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கு தங்ககவச சாத்துபடியுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவைக் கண்டுகளிக்க சேலம் மட்டுமல்லாமல்  வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, வரிசையில் செல்ல தடுப்பு கம்புகள் அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை ஆலோசனைகளையும் கோவில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் சேலத்தில் பிரசித்திபெற்ற மற்றொரு பெருமாள் கோவிலான சேலம் இரண்டாவது அக்ர ஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணஸ்வாமி கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

          ஆண்டுக்கொருமுறை வரும் வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் உள்ள சொர்க்கவாசல் உள்ளே நுழைந்து பெருமாளை மனதார நினைப்பவர்கள் பெருமாளின் அருளுடன் வாழ்வில் சுகம் பெற்று சொர்க்கத்தில் இடம் பிடிப்பார்கள்  என்பது ஐதீகம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com